போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, மூன்று வேளாண் சீர்திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி
சென்னை அண்ணாசாலை தாராபூர் டவர் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
மத்திய அரசின் வேளாண்சட்டங்களை திரும்ப பெறவலியுறுத்தி, விவசாய சங்கத்தினர் நடத்தும் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சென்னை அண்ணாசாலை தாராபூர் டவர் அருகே நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பலர் ஈடுபட்டனர்.
அப்போது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதேபோல, தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.
அதன்படி, கோவை ரயில் நிலையம் முன்பாக அனைத்து தொழிற்சங்கத்தின் சார்பில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில், ரயில் நிலையம் முன்பாக கோவை மக்களவை உறுப்பினர் பி்.ஆர்.நடராஜன் தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 400-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். சேலம் தலைமை தபால் நிலையம் முன்பாக அனைத்து தொழிற்சங்கத்தின் சார்பில் 300 க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர், போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல் துறையினர் கைது செய்யப்பட்டனர்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் விவசாயிகளுக்கு ஆதரவாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது இதில் திமுக கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த 150 பேர் கைது செய்யப்பட்டனர்.
Must Read : போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக புதுச்சேரியில் கடைகள் அடைப்பு, வாகனங்கள் ஓடவில்லை
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்துச் செய்யக்கோரி விவசாயிகளுக்கு ஆதரவாக அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து ஆரணி அண்ணா சிலையில் இருந்து ஊர்வலமாக சென்று எம்.ஜி.ஆர். சிலை அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோரை ஆரணி நகர காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர். இதே போல மாநிலம் முழுவதிலும் ஆங்காங்கே போராட்டங்களும், கைது நடவடிக்கைகளும் நடைபெற்று வருகின்றன.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.