• HOME
 • »
 • NEWS
 • »
 • tamil-nadu
 • »
 • தமிழக மீனவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பை தமிழக அரசே ஏற்க வேண்டும் -திருமாவளவன்

தமிழக மீனவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பை தமிழக அரசே ஏற்க வேண்டும் -திருமாவளவன்

தொல்.திருமாவளவன்

தொல்.திருமாவளவன்

இந்திய கடலோர காவல்படை தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களைத் தடுப்பதில் எந்தவித அக்கறையும் காட்டுவதில்லை.

 • Share this:
  இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை சுட்டிக்காட்டி. பாகிஸ்தானுக்கு ஒரு அணுகுமுறை இலங்கைக்கு ஒரு அணுகுமுறை என பாஜக அரசு இரட்டைவேடம் போடுவதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டிப்பதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படைத் தாக்குதல் நடத்தியதில் தங்கச்சி மடத்தைச் சார்ந்த மெசியா, நாகராஜ், செந்தில்குமார், சாம்சன் டார்வின் ஆகிய 4 மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்களைப் படுகொலை செய்த சிங்கள இனவெறி அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

  இந்திய அரசு, சிங்கள அரசைக் கண்டிப்பதுடன் இலங்கைத் தூதரையும் கடுமையாக கண்டிக்க வேண்டும். தமிழக அரசு இந்திய கடலோரக் காவல்படையை மட்டும் நம்பியிருக்காமல் நமது காவல் துறையையும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

  இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததற்குப் பிறகு தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையின் தாக்குதல் சில காலம் நின்றிருந்தது. ஆனால், ராஜபக்ச ஆட்சி அமைந்ததற்குப் பிறகு சிங்கள கடற்படை தமிழக மீனவர்களைத் தாக்குவது, அவர்களது படகுகளை சேதப்படுத்துவது, அவர்களைக் கைது செய்வது மீண்டும் தொடர்கதை ஆனது. அண்மைக்காலமாக இது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இப்போது ஒரே நாளில் தமிழக மீனவர்கள் 4 பேர் இலங்கைக் கடற்படையால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதனை இந்திய அரசு வழக்கம்போல வேடிக்கை பார்க்காமல் மிகக் கடுமையாக தனது கண்டனத்தைப் பதிவு செய்யவேண்டும்.

  மேலும் படிக்க... கோவிஷீல்டு தடுப்பு மருந்து தயாரிக்கும் சீரம் நிறுவனத்தில் பயங்கர தீவிபத்து.... 5 பேர் உயிரிழப்பு..?

  பாகிஸ்தானுக்கு ஒரு அணுகுமுறை இலங்கைக்கு ஒரு அணுகுமுறை என பாஜக அரசு இரட்டைவேடம் போடுவதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டிக்கிறது. கச்சத்தீவை அன்றைய காங்கிரஸ் அரசு இலங்கைக்கு கொடுத்தது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றபோது, பாஜக தலைவர் வாஜ்பாய் அவர்கள் “நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல், நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறாமல் கச்சதீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டது அரசியலமைப்புச் சட்ட அடிப்படையில் செல்லாது” என்று எதிர்ப்பு தெரிவித்தார்.

  கச்சத்தீவு ஒப்பந்தத்துக்கு எதிராக பாஜக எம்பிக்கள் அப்போது வெளிநடப்பு செய்தார்கள். வாஜ்பாய் அவர்களுடைய வழியில் வந்த ஆட்சியாக இப்போதைய ஆட்சி இருக்குமேயானால் கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கும், அதை மீட்பதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  இந்திய கடலோர காவல்படை தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களைத் தடுப்பதில் எந்தவித அக்கறையும் காட்டுவதில்லை. பல தருணங்களில் இலங்கை கடற்படையினரோடு சேர்ந்து கொண்டு அவர்களும் தமிழக மீனவர்களைத் தாக்கியதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

  எனவே, தமிழக மீனவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பை தமிழக அரசே எடுத்துக் கொள்ள வேண்டும். கடலோரக் காவல் பணியில் தமிழக காவல் துறையைச் சேர்ந்தவர்களை ஈடுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.” இவ்வாற திருமாவளவன் கூறியுள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Suresh V
  First published: