• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பெரியாரை எதிர்த்தவர்கள் குப்புற வீழ்ந்து கிடக்கிறார்கள்; ரஜினிகாந்த்துக்கு பதிலளித்த திருமாவளவன்

பெரியாரை எதிர்த்தவர்கள் குப்புற வீழ்ந்து கிடக்கிறார்கள்; ரஜினிகாந்த்துக்கு பதிலளித்த திருமாவளவன்

விசிக தலைவர் தொல். திருமாவளவன்

விசிக தலைவர் தொல். திருமாவளவன்

  • Share this:
    பெரியாரை எதிர்க்க கிளம்பிய எத்தனையோ ஜாம்பவான்கள் தமிழ் மண்ணில் குப்புற வீழ்ந்து கிடக்கிறார்கள். முயற்சித்து பார்த்த அனைவரும் மூக்குடைபட்டு கிடைக்கிறார்கள் என்பதுதான் வரலாறு என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

    பெரியார் பற்றி பேசியது தொடர்பாக மன்னிப்பு கேட்க முடியாது என்று ரஜினிகாந்த் பேசியுள்ளது தொடர்பாக நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்தார். அதில் பேசிய அவர், ‘துக்ளக் விழாவில் பெரியார் குறித்து ரஜினி தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    பெரியார் குறித்து கருத்து தெரிவித்ததற்கு வருத்தம் தெரிவிக்க முடியாது என தெரிவித்த ரஜினி வாதிட்டும் இருக்கிறார். அவருடைய இந்த நிலைப்பாட்டை அல்லது துணிச்சலை விமர்சிக்க விரும்பவில்லை. ஆனால் பெரியாரை மையப்படுத்தி அரசியல் செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்து இருக்கிறார். அவர் அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்பே

    பெரியாருக்கு எதிராக கருத்து சொல்லும் நிலைப்பாட்டை எடுத்து இருப்பதன் மூலமாக அவர் தன்னை அடையாளப்படுத்தும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்.  அவர் சங்பரிவார் அமைப்புகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்.

    அவர்களின் வழிகாட்டுதலின்படி தான் நடக்கிறார். அப்படித்தான் தன்னுடைய அரசியல் பயணம் இருக்கும் என்பதையும் வெளிப்படுத்துகிறார் எனக் கருதுகிறேன்.  பெரியாரை எதிர்க்க கிளம்பிய எத்தனையோ ஜாம்பவான்கள் தமிழ் மண்ணில் குப்புற வீழ்ந்து கிடக்கிறார்கள். முயற்சித்து பார்த்த அனைவரும் மூக்குடைபட்டு கிடைக்கிறார்கள் என்பதுதான் வரலாறு.

    இதுகிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு கால முயற்சி. பெரியாரை வீழ்த்த முடியாத நிலையில், அவரை தலைவராக ஏற்றுக் கொண்டு அரசியல் களத்தில் வெற்றிகண்ட அண்ணா, கருணாநிதி போன்ற தலைவர்களைக் கொச்சைப்படுத்த வீழ்த்த பகிரங்க முயற்சிகளை மேற்கொண்டவர்கள் பலர் உண்டு. அவர்களில் சோவும் ஒருவர்.

    அவர்களால் பெரியாரை விமர்சிக்க முடிந்தது. தி.மு.கவை விமர்சிக்க முடிந்தது. ஆனால் வீழ்த்த முடியவில்லை. அதுதான் வரலாறு. இந்த வரலாற்றை ரஜினிகாந்தும் புரிந்து கொள்வார் என நம்புகிறேன். அம்பேத்கர், பெரியார் போன்ற மாமனிதர்களை குறிவைத்து அகில இந்திய அளவிலும், தமிழக அளவிலும் காய்களை நகர்த்தி வருகிறார்கள். அவர்களின் விளையாட்டில் நகர்த்தப்படுகிற ஒரு காய் ரஜினிகாந்த்.

    எல்லாவற்றையும் பெரியாரியம் அம்பேத்கரியம் எதிர்கொள்ளும். அவர்களுக்கு உரிய நேரத்தில் பாடம் புகட்டும். பெருந்தன்மையாக கூறுவதுபோல் மறக்க நினைக்கும் மன்னிக்க நினைக்கிறோம் என்று கூறுவதுபோல் அவருடைய தொனி இருக்கிறது.

    பெரியாரை விமர்சிப்பதன் மூலம் தமிழ்நாட்டில் அரசியல் செய்துவிடமுடியும். அதில் வெற்றி பெற முடியும் என்று ரஜினிகாந்த் கனவு கண்டால் அந்த கனவு பலிக்காது’ என்று தெரிவித்தார்.

    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: