• HOME
 • »
 • NEWS
 • »
 • tamil-nadu
 • »
 • உள்ளாட்சி அமைப்புகளில் தலித் இடங்களை கைப்பற்றும் தலித் அல்லாதோர்... மு.க. ஸ்டாலினுக்கு திருமாவளவன் கோரிக்கை

உள்ளாட்சி அமைப்புகளில் தலித் இடங்களை கைப்பற்றும் தலித் அல்லாதோர்... மு.க. ஸ்டாலினுக்கு திருமாவளவன் கோரிக்கை

திருமாவளவன்

திருமாவளவன்

அனைத்து நிர்வாகத்தையும் பட்டியல் சமூகம் சாராத மற்ற தரப்பினரே செய்யக் கூடிய அவலநிலை உள்ளது.

 • Share this:
  உள்ளாட்சி அமைப்புகளில் முறைகேடாக எளிய மக்களுக்கான அதிகாரத்தைத் தட்டிப்பறித்துக் கொள்ளும் சாதியாதிக்க நடைமுறையை முற்றாகக் களைந்து பட்டியல் சமூகத்தினர் அரசியல் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்கும், ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

  இது குறித்து திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்ளாட்சி அமைப்புகளில் ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காக தனது உயிரை மாய்த்துக் கொண்ட ஜமீன் தேவர்குளம் ஊராட்சியைச் சார்ந்த வெற்றிமாறனுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம். அவரை இழந்து வாடுகின்ற அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

  ஊராட்சி மன்றத் தலைவருக்கான தேர்தலில் தான் போட்டியிடுவதை சிலர் திட்டமிட்டே தடுத்துவிட்டனர் என்று அவர் முன்வைத்த குற்றச்சாட்டுகளைப் புறந்தள்ளாமல் அது குறித்து உண்மைநிலை அறிய தமிழ்நாடு அரசு 'சிறப்புப் புலனாய்வு விசாரணை'க்கு ஆணையிட வேண்டுமென விசிக சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம். அத்துடன், அவ்விசாரணையின் முடிவு வரும்வரை அவ்வூராட்சிக்கான தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க வேண்டுமென்று தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம்.

  சமூகத்தின் அனைத்துத் தரப்புக்கும் அதிகாரத்தைப் பரவலாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு கொண்டுவரப்பட்டது தான் பஞ்சாயத்துராஜ் சட்டம். அதனடிப்படையில் உள்ளாட்சி அமைப்புகளில் பொதுத் தொகுதிகள் சுழற்சி முறையில் தனித் தொகுதிகளாக ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. அத்தகைய தொகுதிகளில் இருக்கும் எண்ணிக்கை பலமுள்ள தலித் அல்லாத சமூகத்தினர், தங்களின் வேலையாட்களையோ அல்லது கையாட்களையோ வேட்பாளராக நிறுத்தி, பிற தலித்துகளை போட்டியிடவிடாமல் தடுத்து அல்லது போட்டியிட்டாலும் வெற்றிபெறவிடாமல் தடுத்து, தாங்களே பெருந்தொகையை செலவழித்துத் தங்களின் கட்டுப்பாட்டிலுள்ளவர்களை வெற்றிபெற செய்து மறைமுகமாகத் தாங்களே அந்த இடங்களைக் கைப்பற்றிக் கொள்கின்றனர்.

  அப்படி தேர்ந்தெடுக்கப் படுபவர்களையும் அந்தப் பதவியை நிர்வகிக்க அனுமதிப்பதில்லை. இதுபோன்ற சூழல் நிலவும் இடங்களில் அனைத்து நிர்வாகத்தையும் பட்டியல் சமூகம் சாராத மற்ற தரப்பினரே செய்யக் கூடிய அவலநிலையே உள்ளது. இது பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் அடிப்படை நோக்கத்தையே சீர்குலைப்பதோடு, பட்டியல் சமூகத்தினருக்கு அரசியலமைப்புச் சட்டப்படி வழங்கப்பட்டிருக்கும் சமூகநீதி உரிமையை மறைமுகமாக மறுப்பதாகவும் இருக்கிறது.

  உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் போதெல்லாம் தமிழ்நாட்டில் பரவலாக இத்தகைய புகார்கள் எழுகின்றன. எனவே, இதற்கெனத் தனியே ஒரு விசாரணைக் குழுவை அமைத்து எங்கெல்லாம் இப்படியான புகார்கள் எழுந்துள்ளனவோ அவற்றை ஆராய்ந்து உண்மையான அதிகாரப் பரவலுக்கு தமிழக அரசு வழிவகுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

  ஏற்கனவே, உள்ளாட்சித் தேர்தலையே நடத்தவிடாமல் தடுக்கப்பட்டிருந்த பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி உள்ளிட்ட ஊராட்சிகளில், தான் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த காலத்தில் வெற்றிகரமாக அத்தேர்தலை நடத்தி அங்கெல்லாம் ஜனநாயகத்தை நிலைநாட்டச் செய்தவர் இன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் என்பதை நாடறியும்.

  Must Read : வெளிநாடு வாழ்‌ தமிழர்களின்‌ நலன்‌ காக்க “புலம்பெயர்‌ தமிழர்‌ நல வாரியம்‌” -‌ மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

  அத்தகைய முதல்வர் அவர்கள், உள்ளாட்சி அமைப்புகளில் இவ்வாறு முறைகேடாக எளிய மக்களுக்கான அதிகாரத்தைத் தட்டிப்பறித்துக் கொள்ளும் சாதியாதிக்க நடைமுறையை முற்றாகக் களைந்து பட்டியல் சமூகத்தினர் அரசியல் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்கும், ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Suresh V
  First published: