• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • 100 க்கும் மேற்பட்ட வாகனங்கள் திருட்டு: பெண்களுடன் உல்லாசம்- சொகுசு வாழ்க்கை வாழ்ந்த திருடன் கைது

100 க்கும் மேற்பட்ட வாகனங்கள் திருட்டு: பெண்களுடன் உல்லாசம்- சொகுசு வாழ்க்கை வாழ்ந்த திருடன் கைது

cars

cars

நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களைத் திருடி சொகுசு வாழ்க்கை வாழ்ந்த திருடர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

  • Share this:
சென்னை அரும்பாக்கம் பகுதியை சேர்ந்த நவீன்ராஜ் என்பவர் கடந்த மாதம் தனது டாடா தோஸ்த் சரக்கு வாகனத்தை காணவில்லை எனவும் அதனை கண்டுபிடித்து தருமாறும் அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
வழக்கு பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அடையாளத்துக்காக மற்ற காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைத்த போதுதான் டி.பி. சத்திரம், மதுரவாயல், ராஜமங்கலம், தாம்பரம், பல்லாவரம் போன்ற பகுதிகளில் 10 க்கும் மேற்பட்ட டாடா தோஸ்த் சரக்கு வாகனங்கள் திருடுபோயிருப்பது தெரியவந்தது.
அனைத்து காவல் நிலைய சிசிடிவி காட்சிகளை வைத்து ஒப்பிட்டு பார்க்கும் போது அனைத்து வாகனங்களையும் திருடியது ஒரே நபர் தான் என தெரிய வந்தது. இதனையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளியை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் பூந்தமல்லி பகுதியில் தலைமறைவாக இருந்த சரக்கு வாகன திருடனை போலீசார் கைது செய்தனர்.
போலீசாரின் விசாரணையில் சரக்கு வாகன திருடன் நாகர்கோவிலைச் சேர்ந்த ஆஸ்டின் எடின் இன்பராஜ்(31) என்பது தெரியவந்தது. மேலும், இவர் மீது தமிழகம் முழுவதுமுள்ள பல காவல் நிலையங்களில் 30 க்கும் மேற்பட்ட வாகன திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் பல முறை இவர் சிறை சென்று வந்திருப்பதும் தெரியவந்தது.

2008 ஆம் ஆண்டிலிருந்து வாகன திருட்டில் ஈடுப்பட்டு வரும் ஆஸ்டின் எடின் இன்பராஜ் தமிழகத்தின் பல பகுதிகளுக்கு சென்று தனியாகவே கார், லோடு வேன், டாட்டா தோஸ்த், டாடா ஏஸ் போன்ற வாகனங்களை திருடி அதனை மதுரையைச் சேர்ந்த எம்.டெக் பட்டதாரியான தங்கபாண்டியனிடம் கொடுத்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் தங்கபாண்டியனை கைது செய்து சென்னை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
ஆஸ்டின் எடின் இன்பராஜ் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு வகையான வாகனங்களை திருடி வந்துள்ளார். தமிழகத்தில் ஏதேனும் ஒரு பகுதிக்குச் சென்று அங்கு சரக்கு மினி வேனை குறிவைத்தால், அப்பகுதியில் ஐந்துக்கும் மேற்பட்ட மினி வேன்களை திருடி தனியாகவே ஓட்டிச்சென்று மதுரையில் உள்ள தங்கபாண்டியனிடம் கொடுத்துவிட்டு பின் வேறு பகுதிக்குச் சென்று டாட்டா ஏஸ் வாகனங்களை குறிவைத்து திருடுவது என ஒவ்வொரு முறையும் வேறு வேறு வகையான வாகனங்களை திருடி வந்துள்ளார்.

பல பேருடன் கூட்டணி வைத்து திருடினால் பலருக்கு பணம் கொடுக்க வேண்டியிருக்கும் என்பதால், ஒருவர் திருட வேண்டும், ஒருவர் விற்கவேண்டும் என உறுதிமொழி எடுத்து அதன்படியே ஆஸ்டின் திருடி செல்லும் வாகனங்களை தங்கப்பாண்டியனிடம் கொடுத்துவிடுவார். பின்பு அதனை தங்கபாண்டியன் நம்பர் பிளேட், ஆர்.சி புக் மற்றும் இன்ஜின் நம்பர் ஆகியவற்றை மாற்றி ஒவ்வொரு வாகனத்தையும் ரூ. 3 லட்சம் வரை விற்று விடுவதும் பின் கிடைக்கும் பணத்தில் ஆளுக்குப் பாதி என பிரித்துக்கொள்வார்கள் எனவும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

ஒருமுறை வாகன திருட்டில் ஈடுபட்டு பணம் கைக்கு வந்தால், அடுத்த சில மாதம் வாகன திருட்டில் ஈடுபடாமல் உல்லாச வாழ்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர். குறிப்பாக இருவரும் சொகுசு விடுதிகளில் அறை எடுத்து மதுபானங்கள் மற்றும் பெண்கள் என உல்லாசமாக வாழ்ந்து வந்துள்ளனர். பணம் முழுவதும் தீர்ந்தபின் மீண்டும் வாகன திருட்டில் ஈடுபடுவர் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அந்த வகையில்தான் இரண்டு மாதங்களுக்கு முன்பு சென்னை வந்த ஆஸ்டின் எடின் இன்பராஜ் டாடா தோஸ்த் வாகனங்களை திருட திட்டம் தீட்டி அதன்படி ஒவ்வொரு வாகனமாக திருடி மதுரையிலுள்ள தங்கப்பாண்டியனிடம் கொடுத்து மீண்டும் பேருந்து மூலமாக சென்னைக்கு வந்து பத்துக்கும் மேற்பட்ட டாடா தோஸ்த் வாகனங்களை திருடியுள்ளார். மேலும், சென்னையில் ஈச்சர் வேன் மற்றும் 2 குவாலிஸ் கார் ஆகியவற்றையும் திருடியுள்ளார்.

பொதுவாக பலர் வாகனங்களில் வெளிநபர் தொட்டால் சத்தமிடும் சென்சார் பொருத்தி இருப்பது வழக்கம். அந்த வகையில் ஆஸ்டின் எடின் இன்பராஜ் சென்சார் இல்லாத வாகனத்தை குறிவைத்து நள்ளிரவில் தான் வைத்திருக்கும் கள்ளச்சாவிகளின் மூலம் வாகனத்தை திருடி செல்வதை வழக்கமாக கொண்டு வந்துள்ளார் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
100 க்கும் மேற்பட்ட நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை இதுவரை தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து ஆஸ்டின் எடின் இன்பராஜ் திருடியதாகமும் அனைத்து வாகனங்களையும் தங்கபாண்டியனிடம் கொடுத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் ஆஸ்டின் எடின் இன்பராஜ் 20-க்கும் மேற்பட்ட புல்லட் இருசக்கர வாகனங்களை திருடி நாகர்கோவில் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பதும் இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் இவர் சிறையிலிருந்து நிபந்தனை ஜாமினில் வெளியே வந்துள்ளார் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

வாகனத் திருட்டில் ஈடுபட்டு அதில் கிடைத்த பணத்தை உல்லாசமாக இருப்பதற்கு மட்டுமே இருவரும் பயன்படுத்தி உள்ளார்கள் என்பதும் குறிப்பாக ஆஸ்டின் எடின் இன்பராஜ் பெண்களோடு உல்லாசமாக இருக்கும்போது பெண்களின் சோகக் கதைகளை கேட்டு அவர்களுக்கு ரூ.50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை பணம் கொடுத்து அவர்களின் கஷ்டத்தை போக்கியதாகவும் ஆஸ்டின் எடின் இன்பராஜ் வாக்குமூலம் அளித்துள்ளார்.

செய்யும் தொழிலில் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாய் இருக்கும் ஆஸ்டின் ஒவ்வொரு வாகனத்தையும் திட்டம் போட்டு திருடிவந்ததாகவும், 8 ஆண்டுகளுக்கு முன்பு வாகனதிருட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, ஆஸ்டின் எடின் இன்பராஜின் தாய் இறந்துவிட செய்யும் தொழிலே தெய்வம் என தாயின் இறுதி சடங்குக்கூட செல்லவில்லை என ஆஸ்டின் எடின் இன்பராஜ் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்தும் 8 டாடா தோஸ்ட் சரக்கு வாகனங்கள், ஒரு ஈச்சர் லாரி, இரண்டு குவாலிஸ் கார்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Karthick S
First published: