கோவையில், தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞர்களிடம் இருந்து செல்போன்களைத் திருடிய நபர், தன்னை போலீசால் ஒன்றும் செய்ய முடியாது என்றும், பணத்தைத் தராவிட்டால் போனை உடைத்து விடுவதாகவும் மிரட்டும் ஆடியோ வெளியாகியுள்ளது. போலீசார் எடுத்த நடவடிக்கை என்ன?
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லுாரைச் சேர்ந்தவர்கள் கார்த்திக் மற்றும் மதன். நண்பர்களான இவர்கள், கோவையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வாகன ஓட்டுநர்களாகப் பணியாற்றுகின்றனர்
கோவை கணியூர் பகுதியில் வெளியூர் நண்பர்கள் 7 பேருடன் வாடகை அறையில் வசித்து வருகின்றனர். ஒவ்வொரு இளைஞருக்கும் ஒவ்வொரு நேரம் பணி என்பதால் அறையின் கதவு எப்போதும் சிறிது திறந்தபடி தான் இருக்கும். வெள்ளிக்கிழமை நள்ளிரவு 1 மணிக்கு கார்த்திக் பணி முடித்து விட்டு வந்து அசந்து துாங்கியுள்ளார். மறுநாள் காலையில் அவரது புத்தம் புதிய செல்போனையும் அவரது சகோதரரின் பழைய செல்போனையும் காணவில்லை.
இதுகுறித்து உடனடியாக கருமத்தம்பட்டி காவல்நிலையத்தில் கார்த்திக் புகார் அளித்துள்ளார். இதற்கிடையே, செல்போனைத் திருடியவரே கார்த்திக்கை அழைத்து 2 செல்போன்களுக்கும் 10 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளார். அருகில் உள்ள ஒரு ஏடிஎம்மில் நின்றபடி அங்கு வந்த வேறொரு நபரின் ஜிபே (Google Pay) நம்பர் மூலம் 3000 ரூபாய் வாங்கியுள்ளார் அந்தத் திருடர்.
பணத்தை வாங்கிய திருடர், செல்போன் வேண்டும் என்றால் மேலும் ஐந்தாயிரம் ரூபாய் வேண்டும் எனக் கேட்டு மிரட்டியுள்ளார்; மேலும் போலீசால் தன்னைப் பிடிக்க முடியாது என்றும் சவால் விட்டுள்ளார்.
மேலும், அவசரத்திற்கு மூவாயிரம் ரூபாய் கூட புரட்ட முடியாத நீ என்ன ஆம்பிளை என, கார்த்திக்கை உரிமையுடன் திட்டியுள்ளார் அந்தத் திருடர். ஒரு வழியாக இரண்டாயிரம் ரூபாய் புரட்டியுள்ளதாக கார்த்திக் கூற, கொஞ்சம் ஏத்திப் போட்டுக் கொடுப்பா என கேட்டுள்ளார் அந்த செல்போன் திருடர்.
தனது அறையில் உள்ளவர்களின் உதவியில்லாமல் செல்போனைத் திருடியிருக்க முடியாது என்ற சந்தேகத்தை கார்த்திக் கேட்க, அறைக் கதவை திறந்து போட்டுத் துாங்கலாமா என அட்வைசும் அள்ளி வழங்கியுள்ளார் கருணையுள்ள அந்த செல்போன் திருடர்.
தற்போது கருமத்தம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள் கார்த்திக், போலீசார் எப்படியாவது தனது புதிய செல்போனை மீட்டுக் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறார், செல்போன் இல்லை என்றால் வேலை போய் விடும் என்ற அபாய நிலையில் உள்ள கார்த்திக்கிற்கு போலீசார் உதவுவார்களா? சவால் விட்ட செல்போன் திருடரைப் பிடிப்பார்களா?
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Crime News