மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட மத்திய அரசிடம் கொண்டு சென்று பரிசீலனை செய்யப்படும் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
தேவர் ஜெயந்தி:
தேசியமும், தெய்வீகமும் இரு கண்களாக கருதி வாழ்ந்தவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் எனும் கிராமத்தில் பிறந்து வளர்ந்த முத்துராமலிங்க தேவர், சுதந்திர போராட்ட தியாகியாகவும், சாதி பாகுபாட்டை எதிர்த்தவராகவும் விளங்கியவர். மேலும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தலைமையில், பிரிட்டிஷ் அரசை எதிர்த்த இந்திய தேசிய ராணுவத்துக்கு தமிழகத்தில் இருந்து பெரும் படையை திரட்டி அனுப்பிய பெருமைக்குரியவர். தெய்வத் திருமகனார் என மக்கள் அவரை போற்றுகின்றனர்.
முத்துராமலிங்க தேவர் நேதாஜியுடன் நெருங்கிய நட்பு பாராட்டியவர். நேதாஜி தொடங்கிய ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் தமிழகத் தலைவராகவும், தேசிய துணைத் தலைவராகவும் இருந்தவர் முத்துராமலிங்க தேவர். மேலும் அக்கட்சி சார்பில் போட்டியிட்டு 3 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
தேவர் 1908ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி பிறந்தவர், 55 வயதில் தனது பிறந்த தினமன்றே மறைந்தார். அவரின் குருபூஜை விழாவை தமிழக அரசு விழாவாக கொண்டாடுகிறது.
மதுரை விமான நிலையத்துக்கு தேவரின் பெயர்:
இந்நிலையில், பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 114வது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பாஜக தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் நயினார் நாகேந்திரன் ஹெச்.ராஜா ஆகியோர் இருந்தனர்.
பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரைச் சூட்ட மத்திய அரசிடம் கொண்டு சென்று பரிசீலனை செய்யப்படும் என்று கூறினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.