முகப்பு /செய்தி /தமிழ்நாடு / சி.பி.ஐ. இயக்குநர் மாற்றத்தில் உள்நோக்கம் - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

சி.பி.ஐ. இயக்குநர் மாற்றத்தில் உள்நோக்கம் - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

பிரதமரின் ‘ரஃபேல் ஊழல்’, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு உள்ளிட்ட வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டிய நிலையில், பிரதமர் மோடி சி.பி.ஐ. இயக்குநரை மாற்றியிருப்பது உள்நோக்கம் கொண்டது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: நேர்மையாகவும், சுதந்திரமாகவும், சட்ட நெறிமுறைகளின் படியும் செயல்பட வேண்டிய நாட்டின் மிக முக்கியமான புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.யின் இயக்குநர் அலோக் வர்மாவை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று நள்ளிரவு இடமாற்றம் செய்ததற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பல்வேறு புகார்களுக்கு உள்ளான ராகேஷ் அஸ்தனாவை சி.பி.ஐ அமைப்பிற்குள் பிரதமர் மோடி வலுக்கட்டாயமாக திணிப்பதை எதிர்த்து துவக்கத்திலிருந்தே சி.பி.ஐ. இயக்குநர் போர்க்கொடி உயர்த்தி வந்ததை நாடே அறியும். ஆனால், அப்போது எல்லாம் பிரதமர் அலுவலகம் அமைதி காத்தது. பிரதமரும் அமைதி காத்தார்.

சிறப்பு இயக்குநர் மீது ஊழல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளியான டி.எஸ்.பி.யை நீதிமன்றம் “7 நாட்கள் சி.பி.ஐ கஸ்டடிக்கு” அனுப்பி - அந்த கஸ்டடி விசாரணை துவங்கும் நேரத்தில் சி.பி.ஐ இயக்குநர் அதிரடியாக மாற்றப்பட்டிருப்பதில் நிறைய மர்மங்கள் இருக்கின்றன.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இடம்பெற்றுள்ள காலோஜியத்தால் தேர்வு செய்யப்பட்ட இயக்குநருக்கு “பணிக்கால பாதுகாப்பு” இருக்கும் நிலையில், அவரை மாற்றியிருப்பது எதேச்சதிகாரச் செயல் மட்டுமின்றி பா.ஜ.க. அரசின் “நிர்வாக அராஜகமாகவே” பார்க்க முடிகிறது. சில வாரங்களுக்கு முன்புதான் நாட்டை உலுக்கிய ரஃபேல் ஊழல் புகாரினை நேரடியாக பெற்றுக் கொண்டார் சி.பி.ஐ இயக்குநர்.

இந்தப் புகாரின் மீது அவர் முதற்கட்ட விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தார் என்றும் செய்திகள் வெளிவருகின்றன. அந்தக் கோபத்தில் இருந்த பிரதமர் இப்போது ஏற்பட்ட சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு ஐ.ஜி. அந்தஸ்தில் உள்ள நாகேஸ்வர ராவை சி.பி.ஐ. அமைப்பின் தற்காலிக இயக்குநராக நியமித்திருப்பது அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம். இது “ராகேஷ் அஸ்தனாவை” காப்பாற்ற என்பதைவிட “ரஃபேல் ஊழல் புகாரை” மறைக்கவே என்ற பலத்த சந்தேகத்தை நாட்டு மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது.

நாட்டில் உள்ள மூத்த டி.ஜி.பி.க்களில் ஒருவர் தான் சி.பி.ஐ. இயக்குநராக நியமிக்கப்பட வேண்டும் என்ற மரபு இருக்கிறது. சி.பி.ஐ. அமைப்பில் தற்போது வேறு கூடுதல் இயக்குநர்களும் இருக்கிறார்கள். ஆனால், அவர்களை எல்லாம் தவிர்த்து விட்டு இணை இயக்குநர் அந்தஸ்தில் இருக்கும் ஒருவரை இயக்குநராக நியமித்து, ரஃபேல் போர் விமான ஊழலை மூடி மறைக்க முயற்சிக்கும் பிரதமரின் நடவடிக்கை பேரதிர்ச்சியளிக்கிறது.

தனக்கும், தனது அரசுக்கும் எதிரான புகாரைப் பெற்றுக்கொண்டார் என்ற ஒரே காரணத்திற்காக சி.பி.ஐ அமைப்பையே தகர்த்தெரியும் விதத்தில் “அறிவிக்கப்படாத எமெர்ஜென்சி” நடந்து கொண்டிருப்பது போன்றதொரு தோற்றத்தை இதன்மூலம் பிரதமர் உருவாக்கியிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நாகேஸ்வர ராவ் ஏற்கெனவே சென்னையில் இணை இயக்குநராக இருந்தபோதே பெரும் சர்ச்சைக்குள்ளானவர். அப்போது, முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை தலைமைச் செயலகத்திலேயே சென்று சந்தித்தவர். தமிழகத்தைச் சேர்ந்த அ.தி.மு.க அமைச்சர் விஜயபாஸ்கர் மீது குட்கா வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது சென்னை உயர்நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சி.பி.ஐ. டைரக்டராக இருந்த அலோக் வர்மா, நாகேஸ்வர ராவ் மீதே வழக்குத் தொடர விரும்பினார் என்றெல்லாம் செய்திகள் வருகின்றன. சி.பி.ஐ. அமைப்பிற்கு அப்பழுக்கற்ற, நேர்மையான தலைமைக்குணம் படைத்த ஒரு இயக்குநர் இருக்க வேண்டிய இந்த நேரத்தில் இப்படியொரு அதிகாரியை நியமித்து, சி.பி.ஐ. அமைப்பை தங்களின் “கூண்டுக்கிளி”யாக்கியுள்ளது பா.ஜ.க. அரசு.

தேர்தல் நேரத்தில் சி.பி.ஐ. அமைப்பை எதிர்க்கட்சிகள் மீது பயன்படுத்தவும், நாட்டின் பாதுகாப்பிற்கு போர் விமானங்களை வாங்குவதில் சுமத்தப்பட்டுள்ள “ரஃபேல் ஊழல்” குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்கவும் இது மாதிரியான தந்திரங்களில் ஈடுபட்டு, அதிரடி மாற்றங்கள் மூலம் சி.பி.ஐ அமைப்பின் சுதந்திரம், நம்பகத் தன்மை, தன்னாட்சி அதிகாரம் எல்லாவற்றின் மீதும் போர் தொடுத்திருப்பதை துளி கூட ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவே சி.பி.ஐ இயக்குநர் அலோக் வர்மாவை மாற்றிய உத்தரவை உடனடியாக பிரதமர் மோடி ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: CBI, Edappadi palanisamy, M.K.Stalin, Tender Scam