ஏரிகளில் நீர் இருப்பு அதிகரிப்பு.. அடுத்தாண்டு மே மாதம் வரை சென்னைக்கு தண்ணீர் பஞ்சமில்லை

கோப்புப்படம்

சென்னையின் முக்கிய நீர் ஆதரங்களாக விளங்கும் பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் நீர் இருப்பு அதிகரித்துள்ளது.

  • Share this:
    சென்னையின் முக்கிய நீர் ஆதாரங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் அடுத்தாண்டு மே மாதம் வரை சென்னைக்கு தண்ணீர் பஞ்சமில்லா சூழல் உருவாகியுள்ளது.

    தமிழகத்தைப் பொருத்தவரை தென்மேற்கு பருவமழையை ஒப்பிடும்போது வடகிழக்கு பருவத்தில்தான் அதிக மழைப் பொழிவு கிடைக்கும். இருப்பினும், இந்தாண்டு தென்மேற்கு பருவமழையால் கிடைத்த நீராலும், ஆந்திராவின் கிருஷ்ணா நதியில் இருந்து 4 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிடப்பட்டதாலும், சென்னையின் முக்கிய நீர் ஆதரங்களாக விளங்கும் பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் நீர் இருப்பு அதிகரித்துள்ளது.

    அதன்படி 3,231 மில்லியன் கன அடி கொண்ட பூண்டி ஏரியில், தற்போது 1,477 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. 1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில், தற்போது 138 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. அதேபோல புழல் ஏரியின் நீர் இருப்பும் 2,207 மில்லியன் கன அடியாக உள்ளது. இந்த ஏரியில் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடியாகும்.



    சென்னை மக்களின் தாகம் தீர்க்கும் 3,645 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில், தற்போது 2,429 மில்லியன் கன அடிக்கு நீர் இருப்பு உள்ளது. சோழவரம், பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் என ஒட்டுமொத்தமாக 4 ஏரிகளையும் சேர்த்து 11,257 மில்லியன் கனஅடி நீர் இருப்பு வைக்க முடியும். இதில் தற்போது 6,251 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் 3,009 மில்லியன் கன அடி நீர் மட்டுமே இருப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    தற்போது இருக்கும் நீரை வைத்து, அடுத்த ஆண்டு மே மாதம் வரை சென்னைக்கு தேவையான நீர் வழங்க முடியும் என தெரிவிக்கும் அதிகாரிகள், கிருஷ்ணாவில் இருந்து திறக்கப்பட்டிருக்கும் 4 டி.எம்.சி. நீர் முழுமையாக கிடைத்துவிட்டால், அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வரையில், சென்னை மக்களுக்கு தேவையான குடிநீர் வழங்க முடியும் எனவும் தெரிவிக்கின்றனர்.
    Published by:Rizwan
    First published: