THERE WILL BE CURFEW AGAIN IN TAMIL NADU LOCKDOWN EXPLANATION BY HEALTH SECRETARY RADHAKRISHNAN VAI ANA
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமாக உள்ள பகுதிகள் எவை? : ராதாகிருஷ்ணன் விளக்கம்
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
ஊரடங்கு என்னும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் ஏறுமுகமாக உள்ளதால் மக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவினை இன்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
“அமெரிக்கா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் கொரோனா தாக்கம் அதிகப்படியாக உள்ள நிலையில் தற்பொழுது இந்தியாவில் 19 மாநிலங்களில் கொரோனா நோய் தொற்று ஏறுமுகமாக உள்ளது. இந்த மாநிலங்களில் தமிழகமும் அடங்கும். இதை பொது மக்கள் உணர்ந்து நோயை முற்றிலும் ஒழிக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பொதுமக்களிடம் கோவிட் தொய்வு அதிகமாக உள்ளது. பொதுமக்கள் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும். திருமணங்கள், கோவில் திருவிழாக்கள், இறப்பு நிகழ்வுகள், போன்ற நிகழ்ச்சிகளில் பொது மக்கள் தடுப்பு நடவடிக்கையை கட்டாயமாக பின்பற்ற வேண்டும். குறிப்பாக தற்போது அரசியல் நிகழ்வுகள் அதிகமாக நடைபெற்று வருவதால் நோய் அதிகப்படியாக பரவுவதற்கான வாய்ப்பு உள்ளது” என்றார்.
அதனைத் தொடர்ந்து பேசியவர்,” பள்ளிகள், வங்கிகள், குடியிருப்பு இடங்கள், கலாச்சார கூட்டங்கள், பொது போக்குவரத்து உள்ளிட்டவைகளில் நிலையான வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. பொது இடங்களில் முகக் கவசங்கள் அணிவதை பொதுமக்கள் கட்டாயப் படுத்திக் கொள்ள வேண்டும்.
இதுவரை தமிழகத்தில் 16 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். வாய்ப்புள்ள பொதுமக்கள் கட்டாயமாக நோய்க்கான தடுப்பூசியை செலுத்துக்கொள்ள வேண்டும். நோய் அறிகுறி உள்ளவர்கள் வீட்டு தனிமையை கடைப்பிடிக்க வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் கோவிட் கவனிப்பு மையத்தை ஆரம்பித்துள்ளோம். பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
மேலும்,“ சென்னை, கோயம்புத்தூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் நோய் பரவல் அதிகமாக உள்ளது. சென்னையில் தேனாம்பேட்டை அண்ணா நகர், அடையார், அம்பத்தூர், வளசரவாக்கம் ஆகிய பகுதிகளிலும் நோய் தொற்று அதிகமாக பரவி வருகிறது.
நிலையான வழிமுறைகளை பின்பற்றியும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி அனைத்து விதமான கூட்டங்களையும் நடத்திக்கொள்ள அனுமதி உண்டு. ஊரடங்கு என்னும் வதந்திகளை நம்ப வேண்டாம் இருப்பினும் தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் ஏறுமுகமாக உள்ளது. இதனை மக்கள் அறிந்து விழிப்புடன் செயல்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.