திரையரங்குகளைத் திறக்க தற்சமயம் சாத்தியமில்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ உறுதி

தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ கோவில்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

கோவில்பட்டி அருகே விரைவில் இராணுவ விமானபடை தளம் அமைய வாய்ப்பு உள்ளதாகவும், திரையரங்குகளை திறக்க தற்சமயம் சாத்தியக்கூறுகள் இல்லை என்று அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ தெரிவித்துள்ளார்.

  • Share this:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள நெடுங்குளம் கண்மாய், தூத்துக்குடி விமான நிலையம் சமூக பொறுப்பு நிதியிலிருந்து தூர்வாரப்படுகிறது. இதன் தொடக்க நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு தூர்வாரும் பணிகளைத் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து இலுப்பையூரணி ரயில்வே சுரங்கபாலத்தினையும் பார்வையிட்டார். இதில் தூத்துக்குடி விமான நிலைய அதிகாரிகள், வருவாய்துறையினர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில், ’கோவில்பட்டி அருகே உள்ள கயத்தார் விமானநிலையம் தரமானது. அதன் ஓடு தளம் இன்றும் தரமாகவே உள்ளது. 2ம் உலகப் போரின்போது அமைக்கப்பட்ட அந்த விமான நிலையத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்திய இராணுவத்தில் உள்ள விமானப் படைக்கு ஒப்படைப்பதற்காக கையகப்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் விமான படைபிரிவு விமான தளம் அமைக்க சாத்தியக்கூறு உள்ளது என்று கூறினார்.

Also read: வாங்க ஆளில்லாமல் பழுத்து வீணாகும் கொய்யாப் பழங்கள் - புதுச்சேரி விவசாயிகள் வேதனை

மேலும், மின் கட்டணம் தொடர்பாக தமிழக அரசு ஏற்கனவே விளக்கம் கொடுத்துள்ளது. ஆனால் திமுக அரசியலுக்காக கறுப்புக் கொடி போராட்டம் நடத்த உள்ளதாகவும், திரையரங்குகளைத் திறக்க தற்சமயம் சாத்தியக்கூறுகள் இல்லை. வெளிநாடுகளில் திரையரங்குளில் ஒரு வரிசையில் இருவர் மட்டும் அமர்ந்து படம் பார்க்கின்றனர். அதை இங்கு நடைமுறைப்படுத்தினால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு லாபம் கிடைக்காது; நஷ்டத்துடன் இயக்க வேண்டிய சூழ்நிலை வரும். திரைப்படத் துறையினருக்கு தேவையான உதவிகளை தமிழக அரசு செய்து வருகிறது. நாட்டில் உள்ள நிலைமையைப் பொறுத்து திரையரங்குகளைத் திறப்பது பற்றி முதல்வர் முடிவு எடுப்பார் என்றார்.
Published by:Rizwan
First published: