சென்னை தொழில் அதிபர் ரன்வீர் ஷா வீட்டில் இருந்து 89 சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இதனை அரசு அருங்காட்சியகத்தில் வைக்க அனுமதி மறுக்கப்பட்டதாக ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தொழிலதிபர் ரன்வீர் ஷா வீட்டில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் இன்று சோதனை நடத்தினர். அந்த சோதனையில், சுமார் 89 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் தொன்மையான கோவில்களின் தூண்கள், கற்சிலைகள் மற்றும் 4 ஐம்பொன் சிலைகள் என அனைத்துவிதமான இந்து கோவில்களின் சிலைகளும் இருந்தன. மேலும் சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனிடம் இருந்து சிலைகளை வாங்கி வெளிநாடுகளுக்கு விற்றதாக புகார் எழுந்துள்ளது என பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஐ.ஜி பொன்.மாணிக்கவேல், தகவலின் அடிப்படையில் தொழிலதிபர் ரன்வீர் ஷா வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் 89 தொன்மையான சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பழமையானவை அல்ல . முழுக்க முழுக்க தொன்மையானவை என தெரிவித்தார். மேலும் இங்கு பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளை வைக்க போதிய இடம் இல்லாததால், அருங்காட்சியகத்தில் அனுமதி கோரியிருந்ததாகவும் அதற்கு அரசு அங்கும் போதிய இடம் இல்லை என்று கூறியதாக தெரிவித்தார். மேலும் இவற்றை இடம் மாற்றம் செய்யவும் கூடுதல் செலவு ஆகும் என்பதால் இது சம்பந்தமாக டி.ஜி-க்கு கடிதம் எழுத போவதாக தெரிவித்தார் .
அதனைதொடர்ந்து பேசியவர், இவை அனைத்தும் இந்து கோவில்களில் திருடப்பட்டவை எனவும் இந்த சிலைகள் முறையான விதத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். கடந்த ஒன்றரை வருடமாகதான் இந்த வீட்டில் சிலைகள் உள்ளன எனவும் தெரிவித்தார்.
அதனைதொடர்ந்து, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு கூடுதல் எஸ்பி அசோக் நடராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தொழிலதிபர் ரன்வீர் ஷா வீட்டில் இருந்து சுமார் 22 பில்லர்களும் 12 மெட்டல் சிலைகளும் 56 கற்சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன என்றார். இவை கும்பகோணம் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படும். அதன்பின் நீதிமன்ற உத்தரவின் படி, நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.
மேலும் இந்த சிலைகள் அனைத்தும், தமிழ்நாட்டில் உள்ள ஏதோ ஒரு கோவிலில் இருந்து தான் திருடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். அதன்பின் இந்த சிலைகள் அனைத்தும் 100 வருடங்களுக்கு முன்பு இருந்த தொன்மையான சிலைகள் எனவும் இவை பல கைகள் மாறி, கடந்த வருடம்தான் ரன்வீர் ஷா-விடம் வந்துள்ளது எனவும் தெரிவித்தார். மேலும் இந்த சிலைகளின் மதிப்பு சுமார் 100 கோடியை தாண்டும் எனவும் அவர் கூறினார். சில கற்சிலைகளை கேரளா பாண்டிசேரியில் இருந்து வாங்கியுள்ளனர். அதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
அதனைதொடர்ந்து, தற்போது விசாரணை மட்டுமே நடத்தப்படும் தேவைப்பட்டால் தான் உரிய அனுமதியுடன் கைது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ashok Nadaraajan, Businessman, Idol smuggling case, IG Ponmanikkavel, Ranveer Shah, Seized statue