முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பொங்கலுக்கு பின் முழு ஊரடங்கு இருக்க வாய்ப்பில்லை - அமைச்சர் மா.சுப்ரமணியன்

பொங்கலுக்கு பின் முழு ஊரடங்கு இருக்க வாய்ப்பில்லை - அமைச்சர் மா.சுப்ரமணியன்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Tamil Nadu Lockdown | மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பொங்கலுக்கு பின்னர் தொடர்ச்சியாக முழு ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பில்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

  • Last Updated :

சென்னை திருவான்மியூரில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்கு பல்ஸ் ஆக்ஸிமீட்டர் கருவியை அமைச்சர் சுப்பிரமணியன் நேரில் சென்று வழங்கினார். பின்னர் அடையாறு மண்டல அலுவலகத்தில் உள்ள சரவணா ஆலோசனை மையத்தையும் ஆய்வு செய்தார் அப்போது சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்

இந்த ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், தமிழகத்தில் தினசரி 2000 பாதிப்பு அதிகமாக வருகிறது. ஆனால் பாதிக்கப்படுபவர்கள் மிதமான தொற்று இருப்பதால் அவர்களை ஐ.சி.எம்.ஆர். ஆலோசனைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்தி வருகிறோம். வீட்டில் தனிமையில் இருப்பவர்கள் காலை மாலை பல்ஸ் ஆக்ஸ்மீட்டரில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். 92 என்ற புள்ளிக்கு கீழ் வந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.

சென்னையில் 26 ஆயிரம் பேர் இப்போது கொரோனா சிகிச்சையில் உள்ள நிலையில் இதில் சுமார் 21987 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். இணை நோய் உள்ளவர்கள் பாதிப்பு அதிகம் உள்ளவர்கள் மருத்துவமனைக்கு வரலாம். லேசான அறிகுறிகள் இருப்பவர்கள் வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொள்ளலாம். சென்னையில் வீட்டு தனிமையில் இருப்பவர்களை கண்காணிக்க 178 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாளை பிரதமர், முதல்வர் தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரியை திறந்து வைக்க உள்ளனர். டெல்லியில் இருந்து பிரதமர் காணொலி மூலம் திறந்து வைப்பார். நாளை மாலை 4-5 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தலைமை செயலகம் வர இருக்கிறார். 11 கல்லூரிகளில் 1450 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ஒமிக்ரான் பரிசோதனை இப்போது செய்யப்படவில்லை;பாதிப்பில் 85 சதவீதம் ஒமிக்ரான் அறிகுறிதான் இருக்கிறது. இப்போது வரும் பாதிப்பு எல்லாமே எஸ் ஜீன் பாதிப்பு தான் ஒமிக்ரான் அறிகுறி தான் என்பதால் தனியாக ஒமிக்ரான் பரிசோதனை செய்யப்படுவதில்லை. ஆனால் புதிய வைரஸ் எல்லாம் பரவுகிறது என்று சொல்வதால் அதிக பாதிப்புள்ள கிளஸ்டர் ஏரியாக்களில் மட்டும் பாதிப்புகளை பரிசோதனைக்கு அனுப்பி வைக்கிறோம்.

மக்களின் வாழ்வாதாரம், பாதிக்கப்பட கூடாது என்பதில் முதல்வர் உறுதியாக இருக்கிறார் அதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரமாக ஆலோசித்து முடிவு எடுக்கிறார். மக்கள் ஒத்துழைப்பால் கொடுத்தால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டிய அவசியம் வராது. பொங்கலுக்கு பிறகு தொடர்ச்சியாக முழு ஊரடங்கு இருக்க வாய்ப்பு இல்லை.

top videos

    பொங்கல் பண்டிகைக்கு அடுத்த நாள் 15-ம் தேதி சனிக்கிழமை என்பதால் இந்த வாரம் மெகா தடுப்பூசியை நடத்தாமல் அடுத்த வாரம் சனிக்கிழமை நடத்தலாமா என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம் விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

    First published:

    Tags: Lockdown, Tamil Nadu