அதிமுகவில் மூன்று அமைச்சர்களுக்கு சீட் இல்லை

Youtube Video

அதிமுக வேட்பாளர் பட்டியலில், மூன்று அமைச்சர்களுக்கு சீட் வழங்கப்படவில்லை. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது குற்றஞ்சாட்டிய எம்.எல்.ஏ.வுக்கும் சீட் வழங்கப்படவில்லை.

 • Share this:
  அதிமுகவின் 2வது வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  அமைச்சர்களான பாஸ்கரன், நிலோபர் கபில், வளர்மதிக்கு இந்தமுறை சீட் கொடுக்கப்படவில்லை. சிவகங்கையில் இருந்து பாஸ்கரனும், வாணியம்பாடி தொகுதியில் இருந்து நிலோபர் கபீல், மற்றும் ஸ்ரீரங்கத்தில் இருந்து வளர்மதியும் கடந்த முறை தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

  மேட்டூர் தொகுதி எம்எல்ஏவான செம்மலைக்கும், ராமநாதபுரம் எம்எல்ஏவான முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கும் இம்முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதேபோல அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தன்னை கொலை செய்யப் பார்ப்பதாக பேசிய சாத்தூர் எம்.எல்.ஏ.ராஜவர்மனின் பெயரும் பட்டியலில் இடம்பெறவில்லை.

  ராஜபாளையம் தொகுதியில் பாஜக சார்பில் கவுதமி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அங்கு ராஜேந்திர பாலாஜி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது பாஜக தலைவர் எல்.முருகன் போட்டியிடுவார் என கூறப்பட்டு வந்த ராசிபுரம் தொகுதியிலும் அதிமுக சார்பில் அமைச்சர் சரோஜா போட்டியிடுகிறார்.

  அதிமுகவைச் சேர்ந்த 5 எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளான மதுரை வடக்கு, கோவை தெற்கு, ராமநாதபுரம், மொடக்குறிச்சி, அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகள் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. 2016ல் திமுக வெற்றி பெற்ற துறைமுகம், நாகர்கோவில், திருவண்ணாமலை, ஆயிரம் விளக்கு உள்ளிட்ட 10 தொகுதிகளும், காங்கிரஸ் வெற்றி பெற்ற குளச்சல், விளவங்கோடு, காரைக்குடி, தாராபுரம், உதகமண்டலம் ஆகிய 5 தொகுதிகளும் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

  மதுரை வடக்கு எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா திருப்பரங்குன்றம் தொகுதியில் இம்முறை போட்டியிடுகிறார். திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படும் கொளத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. ஆதிராஜராம் களமிறக்கப்பட்டுள்ளார்.

  பாஜகவின் குஷ்பு போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படும் சேப்பாக்கம் தொகுதி, அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. திருவொற்றியூர் தொகுதியில், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானை எதிர்த்து முன்னாள் எம்.எல்.ஏ., கே.குப்பன் போட்டியிடுகிறார்.

  மேலும் படிக்க... சென்னை பெட்ரோலிய கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021

  அதிமுக இரண்டாவது பட்டியலில் 44 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல நத்தம் விஸ்வநாதன், பி.வி.ரமணா, வைகைச் செல்வன் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்களுக்கும் சீட் வழங்கப்பட்டு இருக்கிறது பி.எச்.மனோஜ் பாண்டியன், மரகதம் குமரவேல் உள்ளிட்ட பத்து முன்னாள் எம்.பி.களின் பெயர்களும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: