கல்வெட்டில் ஓ.பி.எஸ். மகனை நாடாளுமன்ற உறுப்பினர் என பெயர் பொறிக்கப்பட்ட விவகாரத்தில், கோவில் நிர்வாகியும், முன்னாள் காவலருமான வேல்முருகனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தேனி அருகே குச்சனூர் காசி அன்னபூரணி கோவிலில், நன்கொடை அளித்தவர்களின் பெயர் இடம்பெற்ற கல்வெட்டு ஒன்று அண்மையில் திறக்கப்பட்டது. அதில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெயரும், அவரது மகனும், தேனி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளருமான ரவீந்திரநாத் குமார் பெயரும் இடம்பெற்றுள்ளது.
ஆனால், தேர்தல் முடிவுகளே இன்னும் வெளிவராத நிலையில் ரவீந்திரநாத் பெயருக்கு முன்பு தேனி நாடாளுமன்ற உறுப்பினர் என பொறிக்கப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஏற்கெனவே வெற்றிக்காக பல உள்ளடி வேலைகளை செய்து வருவதாக ரவீந்திரநாத் மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், இந்த கல்வெட்டு விவகாரம் வாட்ஸ்ஆப், பேஸ்புக், டுவிட்டர் என சமூகவலைதளங்களில் பரவியது.
இதையடுத்து ரவீந்திரநாத் குமாரின் பெயருடன் ஓ.பி.எஸ். பெயரையும் வெட்டி எடுத்துவிட்டு கோவில் நிர்வாகம் கல்வெட்டை வைத்துள்ளது. தேனி நாடாளுமன்ற வேட்பாளர் என்பதற்கு பதிலாக, தேனி நாடாளுமன்ற உறுப்பினர் என தவறுதலாக இடம்பெற்று விட்டதாக கோவில் நிர்வாகி வேல்முருகன் கூறியிருந்தார்.
இதனிடையே,கல்வெட்டில் தமது பெயருக்கு முன்பு நாடாளுமன்ற உறுப்பினர் என பொறிக்கப்பட்டதற்கு ரவீந்திரநாத் குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவுகள் வெளிவராத நிலையில், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது தவறானது என்றும் தமது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ரவீந்திரநாத் குறிப்பிட்டிருந்தார்.
ரவீந்திரநாத்தின் முகவரும் அதிமுக வழக்கறிஞர் அணியை சேர்ந்தவருமான சந்திரசேகர் அளித்த புகாரின்பேரில், கோவில் நிர்வாகி வேல்முருகன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சின்னமனூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவில் நிர்வாகியும், முன்னாள் காவலருமான வேல்முருகன், ஜெயலலிதா மறைந்தபோது காவல் சீருடையுடன் மொட்டை அடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர். அதோடு, காவிரி விவகாரத்தில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவர் உண்ணாவிரத போராட்டமும் நடத்தினார். இறுதியாக, ஓடைபட்டி காவல்நிலையத்தில் பணியாற்றியபோது, காவல்துறை கட்டுப்பாட்டை மீறி விட்டதாக கூறி வேல்முருகனுக்கு கட்டாய விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டது.
Also Watch : EXCLUSIVE கோவில் கல்வெட்டில் எம்.பி. ஆனார் ஓபிஎஸ் மகன்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Elections 2019, Lok Sabha Election 2019, O Panneerselvam, Theni, Theni S22p33