தேனியில் ஆபாசமாகப் பேசிய இளைஞர்களைத் தட்டிக் கேட்டவர் கொலை..

Youtube Video

தேனி அருகே, ஆபாசமாகப் பேசிய இளைஞர்களைத் தட்டிக் கேட்ட நபரை, ஒரு சிறுவன் உள்ளிட்ட 4 இளைஞர்கள் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் நடந்துள்ளது.

 • Share this:
  தேனி அருகே அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட பொம்மையகவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் 35 வயதான ராம்பிரசாத். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். மனைவி மற்றும் ஒரு வயது குழந்தையுடன் வசித்து வந்தார். ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவில், இவர் வீட்டருகே உள்ள காலியிடத்தில், 20 வயதான தினேஷ், 19 வயதான மதன், 20 வயதான சூர்யா மற்றும் 16 வயதான சிறுவன் உள்ளிட்டோர் அமர்ந்து ஆடுபுலி ஆட்டம் விளையாடிக் கொண்டிருந்தனர். ஆடுபுலி ஆட்டத்தில் ஒரு தரப்பு தோற்றதால் மற்றொரு தரப்பு அவர்களுடன் வாய்த் தகராறில் ஈடுபட்டு ஆபாசமான வார்த்தைகளில் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர்.

  சத்தம் கேட்டு வீட்டை விட்டு வெளியே வந்த ராம்பிரசாத், பெண்கள், குழந்தைகள் உள்ள பகுதியில் சத்தம் போட்டு ஆபாசமாக பேசலாமா எனக் கண்டித்துள்ளார். இளைஞர்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் வீட்டில் இருந்து வெளியே வந்த ராம்பிரசாத், தனது இருசக்கர வாகனத்தில் புறப்படத் தயாரானார். அப்போது ஆடுபுலி ஆடிய இளைஞர்கள் அவரை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

  ஒரு கட்டத்தில் இரண்டு இளைஞர்கள், ராம்பிரசாத்தின் இரண்டு கைகளையும் பிடித்துக் கொள்ள, தினேஷ், தனது இடுப்பில் வைத்திருந்த கத்தியால் அவரது நெஞ்சிலும் முதுகிலும் சரமாரியாகக் குத்தியுள்ளார்.

  ராம்பிரசாத்தின் அலறல் சத்தம் கேட்ட குடும்பத்தினர் வெளியே வந்து பார்தத்போது கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற வழியில் உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து, தினேஷ் உள்ளிட்ட 4 பேரையும் பிடித்து விசாரித்து வந்தனர்.  அதேநேரம் கொலையாளிகளைக் கைது செய்வதில் தாமதம் காட்டுவதாக குற்றம்சாட்டி ராம்பிரசாத்தின் உறவினர்கள் திங்கட்கிழமை மாலை, பொம்மையகவுண்டன் பட்டி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். ஒரு மணிநேரத்திற்கு மேலாக நடந்த இந்த சாலை மறியலால், திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசாரின் பேச்சுவார்த்தைக்குப் பின் சாலை மறியல் திரும்பப் பெறப்பட்டது. பின்னர் தினேஷ் உள்ளிட்ட மூவரும் கைது செய்யப்பட்டனர். சிறுவன் சிறார் கூர்நோக்ககத்திற்கு அனுப்பப்பட்டார்.

  மேலும் படிக்க.. Thoothukudi Sterlite Plant | ஆக்சிஜனை உற்பத்திசெய்ய தயார் நிலையில் உள்ளது ஸ்டெர்லைட் ஆலை: வேதாந்தா நிறுவனம் அறிவிப்பு

  ஆடுபுலி ஆட்டம் விளையாடி ஆபாச வார்த்தைகளால் பேசியதைக் கண்டித்த நபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: