Home /News /tamil-nadu /

Exclusive | முல்லைப் பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டத்தால் வறண்ட பாலைவனமாகிவிடுமா கம்பம் பள்ளத்தாக்கு?

Exclusive | முல்லைப் பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டத்தால் வறண்ட பாலைவனமாகிவிடுமா கம்பம் பள்ளத்தாக்கு?

cumbum valley

cumbum valley

ராட்சத குழாய்கள் வழியாக தண்ணீர் கொண்டு செல்லப்பட்டால் அது தேனி மாவட்டத்தை வறண்ட பாலைவனமாக்கிவிடும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை என்கின்றனர்.

  மதுரை மாநகருக்காக தமிழக அரசு செயல்படுத்தப்பட உள்ள முல்லைப் பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டத்தால் வறண்ட பாலைவனமாகிவிடுமா  கம்பம் பள்ளத்தாக்கு? தேனி மாவட்ட பொதுமக்கள், விவசாயிகள் இத்திட்டத்தை எதிர்ப்பது ஏன் என்பது குறித்த சிறப்புத் தொகுப்பு..
  மக்கள் தொகை பெருக்கம், மாநகராட்சி விரிவாக்கம்  போன்ற காரணத்தால் மதுரை மாநகரின் குடிநீர் தேவைக்காக கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டாடப்பட்ட எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் 2018ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது தான் முல்லைப் பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம். 1,296 கோடி ரூபாய் மதிப்பில் ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் அம்ரூத்(AMRUT) திட்டத்திற்கு கடந்த 2020 டிசம்பர் மாதம் மதுரையில் அடிக்கல்லும் நாட்டப்பட்டது.
  ஆனால் முல்லைப் பெரியாறு  - மதுரை கூட்டுக்குடிநீர் திட்டத்தை 2018ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி அறிவித்த நாளில் இருந்தே அத்திட்டத்திற்கு தேனி மாவட்ட விவசாயிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். திட்டத்திற்கான இடம் தேர்வு, ஆய்வுப்பணி மற்றும் பூமிபூஜை போன்றவற்றிற்காக வந்த அரசு அதிகாரிகளை திருப்பி அனுப்பியும் வைத்தனர். அதோடு இருந்திராத மக்கள், ஆர்ப்பாட்டம், போராட்டம், அடையாள விழிப்புணர்வு, முருகப்பெருமானுக்கு பால்குடம் எடுத்து வழிபடுதல் என இந்த திட்டத்தை கடுமையாக எதிர்க்கின்றனர். அவர்களுடன் உள்ளூர் விவசாயிகள் மட்டுமல்லாது, ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் என பலரும் எதிர்ப்பதோடு தற்போது வரை இத்திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

  Also Read: 27 வாரிசுகள் இருந்தும் அனாதையான மூதாட்டி.. சோறு கூட போடாமல் புறக்கணித்த அவலம்..

    இவற்றிற்கெல்லாம் காரணம் என்ன?

  மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்திருந்தாலும் தேனி மாவட்டத்தின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வது முல்லைப் பெரியாறு அணை தான். கேரள மாநிலம் தேக்கடியில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீரானது சுரங்கப்பாதை வழியாக 4 ராட்சத குழாய்கள் மூலம் மலைப்பாதையில் கொண்டு வரப்பட்டு தேனி மாவட்டம் லோயர்கேம்ப் எனும் இடத்தில் தரை வழியாக வைரவன் ஆற்றில் கலந்து பயணத்தை ஆரம்பிக்கிறது. இடையில் சுருளியாறு, கொட்டக்குடி ஆறு ஆகியவற்றுடன் சங்கமித்து இறுதியில் வைகை ஆற்றோடு இணைந்து ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் தேக்கப்பட்டு அங்கிருந்து மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் இராமாநாதபுரம் ஆகிய தென் மாவட்டங்களின் தண்ணீர் மற்றும் பாசனத் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது.
  குறிப்பாக 5 மாவட்டங்களின் நீராதாரமாகக் கருதப்படும் வைகை அணையில் தண்ணீர் தேக்குவதற்கு மூல ஆதாரமே முல்லைப் பெரியாறு என்றால் அதில் மாற்றுக்கருத்தில்லை. இந்த நிலையில் தான் மதுரை மாநகராட்சியின் குடிநீர் தேவைக்காக செயல்படுத்தப் போகும் கூட்டுக்குடிநீர் திடடத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடமானது முல்லைப் பெரியாற்றின் தலைமதகுப் பகுதியான லோயர்கேம்ப் - ஆக அமைந்துள்ளது.

  Also Read: திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் குவிந்த பக்தர்களை விரட்டியடித்த போலீசார்!

  முல்லைப்பெரியாற்றின் தலைமதகில் தடுப்பணை கட்டி அங்கிருந்து ஏறக்குறைய 125 எம்.எல்.டி. கொள்ளளவு கொண்ட ராட்சத இரும்புக் குழாய்களை தரையில் பதித்து மின் மோட்டர்கள் மூலம் பம்பிங் செய்து குள்ளப்பகவுண்டன்பட்டி, ஆண்டிபட்டி வழியாக திண்டுக்கல் மாவட்டம் பண்ணைப்பட்டியில் உள்ள சுத்தகரிப்பு நிலையம் வழியாக கிட்டத்தட்ட 150கி.மீ தூரத்திற்கு நேரடியாகவே மதுரைக்கு முல்லைப் பெரியாறு தண்ணீரை கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர் மாநகராட்சியினர்.

  இவ்வாறு தரையில் ராட்த குழாய்கள் பதித்து மதுரைக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டால் தேனி மாவட்டத்தில் உள்ள முல்லைப் பெரியாற்றின் வழித்தடம் நீர்வரத்தின்றி வரண்டு பாலைவனமாகிவிடும் என அஞ்சுகின்றனர் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள்.

  வாழை, தென்னை, திராட்சை என முழுக்க, முழுக்க விவசாய பகுதியாக மட்டுமே திகழும் கம்பம் பள்ளத்தாக்கில் உண்டான பருவநிலை மாற்றத்தாலும், முல்லைப் பெரியாறு அணையின் நீர்த் தேக்கம் உயரம் குறைக்கப்பட்டதாலும், முப்போகம் விளைந்த பூமியில் இரு போகமாக மாறியது. காலப்போக்கில் அது ஒரு போகமாக குறைந்து சில ஆண்டுகளில் அந்த ஒரு போக சாகுபடியும் கேள்விக்குறியாகியது. பொதுவாக 142அடி உயரத்திற்கு நீர் தேக்க அனுமதிக்கப்பட்டுள்ள முல்லைப் பெரியாறு அணையில், நீர்மட்டம் 104 அடிக்கு மேல் இருந்தால் மட்டுமே குடிநீர் மற்றும் பாசனத்திற்காக தண்ணீர் திறக்க முடியும். அதற்கு கீழ் அணையின் நீர் மட்டம் சரிந்தால் அந்த தண்ணீரை தமிழகத்திற்கு வெளியேற்ற முடியாத அமைப்பில் உள்ளது முல்லைப் பெரியாறு அணை.

  Also Read:  தீபாவளி கழித்து பள்ளிகள் திறக்க அரசு பரிசீலிக்குமா..? அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்

  அப்படி இருக்கையில் 24மணி நேரமும் மதுரை மாநகருக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்காக 125எம்.எல்.டி கொள்ளளவு உடைய ராட்சத குழாய்கள் வழியாக தண்ணீர் கொண்டு செல்லப்பட்டால் அது தேனி மாவட்டத்தை வறண்ட பாலைவனமாக்கிவிடும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை என்கின்றனர்.

  புதிய குடிநீர் திட்டத்திற்காக தடுப்பணை கட்ட அதிகாரிகள் ஆய்வு செய்த பகுதியானது, கம்பம் பள்ளத்தாக்கு கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக அமைக்கப்பட்டுள்ள தடுப்பணைக்கு 50 மீட்டர் மேற்பகுதியில் உள்ளது. ஏற்கெனவே, அப்பகுதியில் தண்ணீர் எடுத்துக் கொண்டிருக்கும் போது, அதன் மேலே இன்னொரு தடுப்பணை கட்டுவதால், கம்பம் பள்ளத்தாக்கு கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு சிக்கல் ஏற்படும். இதனால், பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். மேலும், லோயர்கேம்ப்-ல் இருந்து வைகை அணை வரை நீண்டுள்ள முல்லைப் பெரியாற்றின் வழிப்பாதையில் பல்வேறு இடங்களில் உறை கிணறுகள் அமைக்கப்பட்டு, 6 நகராட்சிகள், 22பேரூராட்சிகள் மற்றும் 40ஊராட்சிகள் என தேனி மாவட்ட மக்களுக்கு தண்ணீர் எடுக்கப்படுகிறது.

  தற்போது, புதிதாக ஒரு குடிநீர் திட்டத்தைக் கொண்டு வந்தால், ஆற்றில் செல்லக்கூடிய தண்ணீரின் அளவு குறையும். இதனால் தேனி மாவட்ட மக்கள் தண்ணீர்ப் பஞ்சத்தை சந்திக்கும் நிலை உருவாகும். அதே நேரம், நிலத்தடிநீர் மட்டமும் கடுமையாகப் பாதிக்கக்கூடிய நிலை ஏற்படும். இந்த திட்டத்திற்கு மாற்றாக மதுரை மாவட்ட குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வைகை அணை கட்டப்பட்டு 60ஆண்டு கால வைரவிழா கண்ட நிலையில், இது நாள் வரை அணை தூர்வாரவே இல்லை. இதனால் வைகை அணையில் சுமார் 20 அடிக்கும் மேல் அணையில் வண்டல் மண் தேங்கியுள்ளது.

  Also Read:  இனிமேல் தாவரங்களில் இருந்து இசையை கேட்டு மகிழலாம் – புதிய தொழில்நுட்பம் அறிமுகம்!
  இதனால் அணையின் முழு கொள்ளவை தேக்க முடியாத நிலை உள்ளது. எனவே இந்த மதுரை குடிநீர் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியை விட ஒரு சிறு அளவு நிதியில் வைகை அணையை தூர்வாரி அதிக அளவு தண்ணீர் தேக்குவதற்கான ஏற்பாடுகளை செய்தால் மதுரை உள்பட தென்மாவட்டங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யலாம். மேலும் மதுரையில் உள்ளவர்களும் எங்கள் சகோதரர்கள் தான், அவர்களுக்கு நாங்கள் குடிப்பதற்கு தண்ணீர் தரவில்லை என்று சொல்லவில்லை. முல்லை பெரியாற்றில் இருந்து ஆற்றின் வழியாக தண்ணீரை கொண்டு சென்று வைகையில் தேக்கி வைத்து அதிலிருந்து எடுத்துக் கொள்ளட்டும் என்கின்றனர்.

  பொது மக்களின் குடிநீருக்காக செயல்படுத்துவதாகச் சொல்லப்படும் இந்த கூட்டுக்குடிநீர் திட்டம் உண்மையானதல்ல. மாற்றாக கார்ப்ரேட் நிறுவனங்கள், தங்கும் விடுதிகள், உணவகங்கள் என வணிக பயன்பாட்டிற்கானதாகத் தெரிகிறது. எனவே தான் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக வருகை தந்த அதிகாரிகளை பலமுறை திருப்பி அனுப்பி விட்டோம். ஆனால் இப்பகுதி மக்களின் எதிர்ப்பையும் மீறி அதிகாரிகள் ரகசியமாக இங்க வந்து ஆய்வு நடத்திச் செல்கின்றனர். மக்களுக்கு பயன்படாத இத்திட்டத்தை செயல்படுத்த அரசு முயன்றால் 2011ல் நிகழ்ந்த முல்லைப்பெரியாறு அணை போராட்டம் மீண்டும் வெடிக்கும் என்கிறார்.

  முறையாக திட்டமிட்டு மக்களுக்கும், மண்ணுக்கும் பயணளிக்கும் வகையில், முல்லைப் பெரியாறு தண்ணீரை அதன் வழித்தடத்திலே கொண்டு சென்று வைகை அணையில் தேக்கி மதுரை மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்பதே தேனி மாவட்ட மக்களின் கோரிக்கையாக உள்ளது.

  சுப.பழனிக்குமார் - செய்தியாளர், தேனி
  Published by:Arun
  First published:

  Tags: Cumbum, Mullai Periyar, Theni

  அடுத்த செய்தி