தேனியில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பூசி முகாமை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆய்வு செய்தார்.
தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் இன்று தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பூசி முகாம் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுப்பணிகள் மேற்கொண்டார். முதலாவதாக கம்பம், நகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட தடுப்பூசி முகாமினை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து, பின் கேரள எல்லையில் உள்ள குமுளி சோதனைச் சாவடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து பெரியகுளம் அருகே உள்ளதேவதானப்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் தடுப்பூசி முகாமினை அவர் ஆய்வு செய்தார். பின்னர் தேவதானப்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறுகையில், ’தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் கொரோனா நோய்த் தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அண்டை மாநிலமான கேரளாவில் சிறப்பான நடவடிக்கைகளை அங்குள்ள அரசு எடுத்து வந்தாலும் நோய்த்தொற்று குறையவில்லை. மேலும் ஜிகா, நிபா வைரஸ் காய்ச்சல் பரவலும் நிலவி வருகிறது. இதனால் கேரள எல்லையோரம் உள்ள தமிழக மாவட்டங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்கள் கட்டாயம் ஆர்.டி.பி.சி.ஆர் நெகடிவ் சான்று அல்லது இரண்டு தவனை கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட ஆவணங்களில் ஏதாவது ஒன்று இருப்பவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்க வேண்டும், உடல் வெப்பமானி கொண்டு பரிசோதனை செய்திட வேண்டும் உள்ளிட்ட நடைமுறைகள் பின்பற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாகக் கூறினார்.
மேலும் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளதால் கொசு மருந்துகள் தெளிப்பது, கொசு ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் இணைந்து மக்கள் நல்வாழ்வு துறை அலுவலர்களும் மேற்கொண்டு டெங்கு காய்ச்சல் பரவாமல் நடவடிக்கை எடுக்கப்ட உள்ளதாகத் தெரிவித்தார்.
செய்தியாளர்: பழனிகுமார் (தேனி)
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.