ஆண்டிப்பட்டி அருகே தனி நபர்களின் இடத்திற்கு போலியாக பத்திரப்பதிவு. பாதிக்கப்பட்டவர்கள் சார் - பதிவாளர் அலுவலகத்திற்குள் அமர்ந்து தர்ணா.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம், ராஜகோபாலன் பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 20க்கும் மேற்பட்டோருக்கு திம்மரசநாயக்கனூர் வருவாய்க் கிராமத்திற்கு உட்பட்ட இடங்களில் பல ஏக்கரில் சொந்த நிலங்கள் உள்ளன. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் டி.சுப்புலாபுரத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் தன்னுடைய நிலத்திற்கான வில்லங்க சான்றிதழை கணினியில் சரிபார்த்த போது அது வோறொருவர் பெயருக்கு பாகப்பிரிவினை செய்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதோடு அவரது நிலத்திற்கு அருகாமையில் இருப்பவர்களும் நிலங்களும் இதே போன்று பிற நபர்களின் பெயருக்கு பாகப்பிரிவினை ஆகியிருப்பது தெரியவந்தது.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 15க்கும் மேற்பட்டோர் ஆண்டிபட்டி பத்திரப் பதிவு அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தங்கள் சுய சம்பாத்தியத்தில் வாங்கிய நிலத்திற்கு எந்தவொரு ஆவணங்களையும் சரிபார்க்காமல் பத்திரப்பதிவு செய்த ஆண்டிபட்டி சார் - பதிவாளரை கண்டித்து அலுவலகத்திற்குள் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து அங்கு வந்த ஆண்டிபட்டி காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மோசடி குறித்து மாவட்ட பதிவாளரிடம் புகார் அளிக்குமாறு தெரிவித்தனர்.
இதையடுத்து தர்ணாவை கைவிட்டு தங்கள் புகாரை பெரியகுளம் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் உள்ள தணிக்கைத் துறை அலுவலரிடம் அளித்தனர். இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், போலியான ஆவணங்களை தயாரித்து நடைபெற்றுள்ள பத்திரப் பதிவை ரத்து செய்து தங்கள் நிலத்தை மீட்டுத் தர வேண்டும். அதோடு இது போன்ற மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடும் பத்திர எழுத்தர்கள், சார் - பதிவாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
செய்தியாளர்: பழனிகுமார், தேனி
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.