முகப்பு /செய்தி /தமிழ்நாடு / குளிக்கச் சென்ற இடத்தில் பெற்றோரை பலிகொடுத்துவிட்டு நிர்கதியாய் நிற்கும் 13 வயது சிறுமி!

குளிக்கச் சென்ற இடத்தில் பெற்றோரை பலிகொடுத்துவிட்டு நிர்கதியாய் நிற்கும் 13 வயது சிறுமி!

முல்லைப்பெரியாறு

முல்லைப்பெரியாறு

முல்லைப் பெரியாற்றில் நீர் வரத்து அதிகம் இருப்பதால் சிறுமி அனிஷா தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டார். அதனைக் கண்ட பெற்றோர் இருவரும், தங்கள் பிள்ளையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தேனியில் முல்லைப் பெரியாற்றில் குளித்துக் கொண்டிருந்த மகளை தண்ணீர் இழுத்துச் சென்றதால் மீட்கச் சென்ற தாய் - தந்தை பலியாகினர். ஒருவரது உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில்  மற்றொரு உடலை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தேனி மாவட்டம் கம்பம் புதுப் பள்ளிவாசல் தெருவில் வசித்து வந்தவர் சையது அபுதாஹீர் (42). ஹோட்டலில் சப்ளையராக பணிபுரிந்து வரும் இவருக்கு  அமீனா (35) என்ற பெண்ணுடன் திருமணமாகி 13 வயதில் அனிஷா என்ற பெண் பிள்ளை உள்ளார். இந்நிலையில் நேற்று (ஜூலை 31) சின்னமனூர் அருகே உள்ள சீலையம்பட்டி - குச்சனூர் சாலையில் ஓடும் முல்லைப் பெரியாற்றில்  சையது அபுதாஹீர்  தனது குடும்பத்துடன் குளித்துள்ளனர்.

Also Read:  அலைபாயுதே பட பாணியில் காதல் திருமணம்.. மாமியார் வீட்டு முன்பு இளம்பெண் தர்ணா!

தற்போது முல்லைப் பெரியாற்றில் நீர் வரத்து அதிகம் இருப்பதால் சிறுமி அனிஷா தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டார். அதனைக் கண்ட பெற்றோர் இருவரும், தங்கள் பிள்ளையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அதில் சிறுமியை அவரது தந்தை உயிருடன் மீட்டு கரை சேர்த்துள்ளார். இதனிடையே தனது மனைவி அமீனாவும் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டதால் அவரை மீட்கச் சென்ற சையது அபுதாஹீரும் நீரில் இழுத்துச் செல்லப்பட்டார்.

அங்கிருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த அமீனாவை சடலமாக  மீட்டனர். மேலும் நீரில் இழுத்துச் செல்லப்பட்ட சையது அபுதாஹீரை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டனர். ஆயினும் ஆற்றின் நீர்வரத்து அதிகம் இருப்பதால் மாயமான சையது அபுதாஹீர் பல கிலோமீட்டர் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என தீயணைப்பு வீரர்கள் கருதுகின்றனர்.

Also Read:  'எலும்பை உடைத்துவிடுவேன்': கட்சியினர் முன் சக எம்.எல்.ஏவை மிரட்டிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ!

பின்னர் இருள் சூழ்ந்ததால் மீட்பு பணி நிறுத்தப்பட்டு  உப்புக்கோட்டை, உப்பார்பட்டி, வீரபாண்டி உள்ளிட்ட முல்லைப் பெரியாறு வழித்தடத்தில் இன்று தொடங்கி நடைபெறுகிறது.

முல்லைப்பெரியாறு

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த சின்னமனூர் காவல்துறையினர் சடலமாக மீட்ட பெண்ணின் உடலை உடற்கூறாய்விற்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உயிருடன் மீட்கப்பட்ட சிறுமி சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பழனிக்குமார், செய்தியாளர் - தேனி

First published:

Tags: Cumbum, Mullai Periyar, Theni