Home /News /tamil-nadu /

வீட்டில் தனியே இருந்த பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்த இளைஞர் - தேனியில் பரபரப்பு

வீட்டில் தனியே இருந்த பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்த இளைஞர் - தேனியில் பரபரப்பு

பெண் கழுத்தை அறுத்து கொலை

பெண் கழுத்தை அறுத்து கொலை

Bodinayakanur : தேனி மாவட்டம் போடி அருகே வீட்டில் தனியே இருந்த 56வயது பெண் கழுத்து அறுத்து படுகொலை.‌ காவல் நிலையத்தில் சரணடைந்த கட்டிடத் தொழிலாளி. கொலைக்கான காரணம் என்ன?

    தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வினோபாஜி காலனியில் உள்ள பனோரமா நகரில் வசித்து வந்தவர் ராம்ராஜ் என்பவரின் மனைவி பவுன்தாய் (56). இவர் ஏலச்சீட்டு, வட்டிக்கு கடன் கொடுத்தல் உள்ளிட்ட வட்டித் தொழில் செய்து வந்துள்ளார். இவரது கணவர் இறந்த நிலையில் இரண்டு மகன்கள் வெளியூர்களில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.

    இந்நிலையில், நேற்றிரவு வீட்டில் தனியே இருந்த பவுன்தாயின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் சட்டையில் ரத்தக்கறையுடன் வெளியே வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்களிடம், சீட்டுப் பணம் கொடுக்க வந்ததாகக் கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். சந்தேகம் அடைந்த மக்கள் வீட்டினுள் சென்று பார்க்கையில் அங்கு ரத்த வெள்ளத்தில் பவுன்தாய் இறந்து கிடந்துள்ளார்.

    இது தொடர்பாக அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில், விரைந்து வந்த காவல்துறையினர், இறந்த பவுன்தாயின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு அங்கிருந்த முக்கிய தடயங்கள் சேகரித்தனர்.‌ இதனிடையே பவுன்தாயின் வீட்டில் இருந்து வெளியேறிய இளைஞர், தான் கொலை செய்ததாக போடி நகர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

    இது குறித்து அவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், வினோபாஜி காலனி கருப்பசாமி கோவில் தெருவைச் சேர்ந்த பிரபு(30) எனத் தெரியவந்தது. கட்டிடத் தொழிலாளியான இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இந்நிலையில் வட்டிக்கு கடன் கொடுக்கும் பவுன்தாயிடம், பிரபு ஒரு லட்சம் ரூபாய் ஏலச்சீட்டில் சேர்ந்துள்ளார். ஏலத்தொகை ஒரு லட்சத்தை சில மாதங்களுக்கு முன் எடுத்த பிரபு, கடந்த 5மாதங்களாக ஏலச்சீட்டு பணத்தை திரும்ப செலுத்தவில்லை. அதனால் சீட்டுத்தொகையை உடனே திரும்பச் செலுத்தச் சொல்லி பவுன்தாய் கறார் கட்டியதாக கூறப்படுகிறது.‌

    இந்த நிலையில் தான் நேற்று பிரபுவின் வீட்டிற்கு சென்ற பவுன்தாய் சீட்டு பணத்தை செலுத்தச் சொல்லி அவரது குடும்பத்தினரிடம் கடுமையான சொற்களால் பேசியதாகச் சொல்லப்படுகிறது. இதனால் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த பிரபு ஆத்திரமடைந்து பவுன்தாயின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு ஏலச்சீட்டு பணத்தை திரும்ப செலுத்துவது தொடர்பாக இருவரிடம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்கு வாதம் முற்றிப் போய்,  கத்தியால் பவுன்தாயின் கழுத்தை அறுத்து பிரபு கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

    Must Read : சிதம்பரம் நடராஜரை இழிவுபடுத்திய யூ-டியூபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சிவனடியார்கள் போராட்டம்..

    இது குறித்து பவுன்தாயின் உறவினர் ஆனந்தகுமார் அளித்த புகாரில்  வழக்குப்பதிவு செய்த போடி தாலுகா காவல்துறையினர் பிரபுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏலச்சீட்டு பணம் செலுத்துவதில் ஏற்பட்ட தகராறில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    செய்தியாளர் - பழனிகுமார், தேனி.
    Published by:Suresh V
    First published:

    Tags: Crime News, Death, Murder, Police, Theni

    அடுத்த செய்தி