தேனியில் சக தொழிலாளியை கொலை செய்து விட்டு நாடகமாடிய நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் போடி தாலுகாவிற்கு உட்பட்ட குரங்கணி அருகே உள்ள ஊத்தாம்பாறை பகுதியில் தனியாருக்குச் சொந்தமான தோட்டம் உள்ளது. அங்கு போடி அருகே உள்ள போ.அம்மாபட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகன் (48), ஜெகதீஸ்வரன் (35) ஆகியோர் தோட்ட பராமரிப்பு மற்றும் காவல் பணிகளில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்றிரவு தோட்டத்தில் இருந்த தொழிலாளி முருகனை, உரிமையாளர் ராம்குமார் செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார்.
அப்போது முருகனின் செல்போனை எடுத்த ஜெகதீஸ்வரன் அவரை காணவில்லை எனத் தெரிவித்துள்ளார். அவரது பேச்சில் சந்தேகம் அடைந்த உரிமையாளர், இரவில் தனது தோட்டத்திற்கு சென்று அங்கிருந்த ஜெகதீஷ்வரனிடம் விபரம் கேட்டுள்ளார். அப்போது முன்னுக்கு பின் முரணாக பதில்களை கூறிய ஜெகதீஸ்வரன், முருகனை நீண்ட நேரமாகவே காணவில்லை என பதிலளித்துள்ளார். இதையடுத்து தோட்டத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை உரிமையாளர் ஆய்வு செய்ததில், திடுக்கிடும் காட்சிகள் வெளியாகின.
அதில், காணாமல் போனதாக சொல்லப்பட்ட முருகனும், ஜெகதீஸ்வரனும் சில மணி நேரத்திற்கு முன் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு ஒருவொருக்கொருவர் தாக்கிக் கொண்டதுடன், முருகனை ஜெகதீஸ்வரன் அரிவாளால் வெட்டியுள்ளார். பின் அருகில் உள்ள ஓடையில் மறைத்து வைப்பதற்காக தோட்டத்தில் இருந்து இழுத்துச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து தோட்டத்தின் உரிமையாளர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஓடையில் இருந்த முருகனை சடலமாக மீட்டு உடற் கூறாய்வுக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஜெகதீஷ்வரனை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
Read More : பெரியார் சிலை சேதம் - மர்ம நபர்களை கைது செய்யக்கோரி விழுப்புரத்தில் போராட்டம்
விசாரணையில், பல மாதங்களாக தோட்டத்தில் வேலை செய்து வந்த முருகன், அங்கேயே தனது உறவினரான ஜெகதீஷ்வரனை கடந்த சில மாதங்களுக்கு முன் வேலைக்கு சேர்த்துள்ளார். இருவரும் தங்களுக்குண்டான வேலையை செய்து வந்த நிலையில், சரிவர வேலைகள் செய்யவில்லை என தன்னைப் பற்றி முதலாளியிடம் முருகன் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட கோபம் விரோதமாக மாறி சம்பவத்தன்று ஒன்றாக மது அருந்தும் போது முருகனிடம் ஜெகதீஸ்வரன் கேட்டதற்கு, அப்படித்தான் நான் சொல்வேன். அதனால் இப்போது என்ன? எனக் கூறியதாகச் சொல்லப்படுகிறது.
Must Read : ஜோக்கர் பட பாணியில் முகமூடி கொள்ளை - 6 மாதமாக போலீசாருக்கு சவாலாக இருந்த கொள்ளையன் சிக்கியது எப்படி?
இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிப் போய் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். ஒரு கட்டத்தில் ஆத்திரத்தில் தோட்டத்தில் இருந்த அரிவாளை எடுத்து முருகனை வெட்டியுள்ளார். அதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த முருகன் அங்கேயே பலியானார். பின் சடலத்தை மறைப்பதற்கு அருகே உள்ள ஓடைக்கு இழுத்துச் சென்றதாக தெரியவந்தது.
இது தொடர்பாக இறந்தவரின் மனைவி மாரியம்மாள் அளித்த புகாரில், வழக்குப் பதிவு செய்த குரங்கணி காவல்துறையினர் ஜெகதீஸ்வரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மதுபோதையில் சக தொழிலாளியை வெட்டிக் கொலை செய்த சம்பவம் போடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் - பழனிகுமார் (தேனி) இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.