தேனி மாவட்டம் சின்னமனூர் காவல் நிலையத்தில் பொது நூலகத்தை திறந்து ஒரு முன்மாதிரி காவல் நிலையமாக காலல் துறையினர் மாற்றியுள்ளனர்.
ஒரு நூலகம் திறக்கப்படும் பொழுது நூறு சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன என்பது பழமொழி. இதனை உணர்த்தும் வகையில் சின்னமனூர் காவல் நிலைய வளாகத்திற்குள் பொது நூலகத்தை காவல்துறையினர் திறந்துள்ளனர்.
மார்க்கையன்கோட்டை, குச்சனூர் பேரூராட்சிகள், அய்யம்பட்டி உள்ளிட்ட கிராம ஊராட்சிகளுக்குட்பட்ட ஏறக்குறைய 5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகையை உள்ளடக்கி சின்னமனூர் காவல் நிலையம் செயல்படுகிறது. நாள்தோறும் பல்வேறு குற்ற வழக்குகளை விசாரித்து மன அழுத்தத்தில் இருக்கும் காவல்துறையினரின் மன அமைதிக்காகவும், பொதுமக்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை அதிகப்படுத்தும் நோக்கிலும் இந்த நூலகம் திறக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார் காவல் ஆய்வாளர் சேகர்.
காவல் நிலையத்திற்கு வலதுபுறம் இருந்த குப்பை மேட்டை சீரமைத்து இந்த நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. நூலகத்திற்கு தேவையான மேசைகள், மின்விசிறி, புத்தகங்கள் போன்றவற்றை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
Also read... நகராட்சிக்கு நிதி நெருக்கடி.. பாஜக கவுன்சிலர் செய்த செயலை பாருங்க...!
அரசியல், அறிவியல், சட்டம், வரலாறு, நாவல்கள், சிறுகதை உள்ளிட்ட 800க்கும் அதிகமான புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ள இந்த நூலகத்திற்குள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மின் விசிறிகள், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் 20க்கும் மேற்பட்டோர் அமர்ந்து புத்தகத்தை வாசிக்கும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்களும் இங்கு இருப்பதால் அதற்கு தயாராவோரும், பொதுமக்களும் இந்த நூலகத்தை பயன்படுத்தி பலனடைய வேண்டும் என்பதற்காக படிக்க வாருங்கள் என சின்னமனூர் காவல் நிலையத்தினர் அழைப்பு விடுக்கின்றனர்.
செய்தியாளர்: பழனிக்குமார், தேனி இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.