ஆண்டிபட்டி அருகே வன ஆக்கிரமிப்பு பகுதிகளில் விவசாய பணிகளுக்கு மக்கள் செல்ல வனத்துறை தடை விதித்ததால் சோதனைச் சாவடி முன்பாக சுமார் 3 மணிநேரத்திற்கும் மேலாக பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகாவிற்கு உட்பட்ட வருசநாடு அருகே உள்ள வனப்பகுதிக்குள் அரசரடி, பொம்மராஜபுரம் கிராமப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் இலவம் பஞ்சு, கொட்டை முந்திரி, பீன்ஸ் உள்ளிட்ட சாகுபடிகளை மக்கள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் அரசரடி, பொம்மராஜபுரம், இந்திராநகர் உள்ளிட்ட வனப்பகுதிகள் புலிகள் காப்பகமாக மாற்றப்பட்டதால், வனத்துறையின் கெடுபிடி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளியில் இருந்து வரும் நபர்களுக்கு அந்த பகுதிகளில் அனுமதியின்றி செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.

வனத்துறையினரை கண்டித்து போராட்டம்
இந்த நிலையில் அரசரடி, பொம்மராஜபுரம் பகுதிகளில் விளைந்த இலவம் பஞ்சு பறிப்பதற்காக அருகில் உள்ள கிராமங்களான கோரையூத்து, மஞ்சனூத்து பகுதிகளைச் சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் கூலித்தொழிலாளர்கள் இன்று பேருந்தில் சென்றனர். அப்போது மஞ்சனூத்து வனத்துறை சோதனைச்சாவடியில் பணியில் இருந்து வனத்துறை அதிகாரிகள் வெளியில் இருந்து வனப்பகுதிக்குள் செல்வதற்கு அனுமதி மறுத்தனர். கூலிவேலைக்கு கூட செல்ல அனுமதி அளிக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வனத்துறை சோதனை சாவடி முன்பாக அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 3 மணிநேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த மறியலால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
பின்னர் அங்கு வந்த ஆண்டிபட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர், பொதுமக்களை சமாதானம் செய்து வருசநாடு காவல் நிலையத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் வனத்துறை அதிகாரிகளும் பங்கேற்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.