ஒரே கூட்டத்தில் ஐ.பெரியசாமி, ஓ.பன்னீர்செல்வம்: 2 மணிநேரம் அருகருகே உட்கார்ந்து கொரோனா தடுப்புபணி குறித்து ஆலோசனை

ஓ.பன்னீர் செல்வம், ஐ.பெரியசாமி

தேனியில் அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் நடைபெற்ற கொரோனா தடுப்பு பணி குறித்த கூட்டத்தில் முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கலந்துகொண்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

 • Share this:
  தமிழக அரசியலின் இருதுருவங்களாக கருணாநிதியும், ஜெயலலிதாவும் சுமார் 25 ஆண்டுகளாக கோலோச்சினர். இருவரும் தமிழக அரசியலின் மையாக இருந்தவரையில், தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளும் ஒன்றிணையும் நிகழ்வு நடைபெறவேயில்லை. தமிழகத்தின் எந்தப் பிரச்னைக்காவும், ஜெயலலிதாவும், கருணாநிதியும் ஒரே மேடையில் ஏறியது. அவர்கள் இருவருக்கிடையை மனஒப்புமை இல்லாத காரணத்தால் மாவட்ட அளவிலான கட்சிப் பிரதிநிதிகளும், எம்.எல்.ஏ, அமைச்சர்களும் பரஸ்பரம் பேச்சிக்கொள்ளும் நிகழ்வுகளோ, அல்லது ஏதேனும் பொதுவிஷயத்துக்காக ஒன்றிணைந்து வேலை செய்யும் வாய்ப்போ ஏற்படவே இல்லை.

  ஜெயலலிதாவின் மறைவு மற்றும் கருணாநிதியின் அரசியல் ஓய்வைத் தொடர்ந்து தமிழக அரசியல் களத்தின் தன்மை மாறியது. ஜெயலலிதா மறைவுக்கு மு.க.ஸ்டாலின் சென்றார், கருணாநிதி உடல்நலம் பாதித்து மருத்துவமனையில் இருந்தபோது அ.தி.மு.க அமைச்சர்கள் சென்றது என்ற பரஸ்பரம் மரியாதையைப் பறிமாறிக்கொண்டனர். எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது, அவரது அம்மா மறைவுக்கு மு.க.ஸ்டாலின் பழனிசாமி இல்லத்துக்குச் சென்று ஆறுதல் கூறினார். இருப்பினும், கடந்த கொரோனா முதல் அலையின் அனைத்துக் கட்சிக் கூட்ட அப்போதைய எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியதை எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை.

  இந்தநிலையில், தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதிலிருந்து தமிழ்நாடு அரசியல் வேறு பரிணாமத்தை எடுத்துள்ளது. இந்திய அரசியலுக்கு உதாரணமாக இருக்கக் கூடிய பல விஷயங்கள் தொடர்ந்து அரங்கேறி அனைவரையும் புருவம் உயர்த்தச் செய்கிறது. மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்கும்போது, அந்த விழாவுக்கு வருகை தந்தார் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் தனபால். பதவியேற்புக்குப் பிறகு, மு.க.ஸ்டாலின், ஓ.பன்னீர் செல்வம், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் என அனைவரும் ஒரே டேபிளில் உட்கார்ந்து தேநீர் குடிக்கும் போட்டோ இணையத்தில் வைரலானது. அதனைத் தொடர்ந்து, கொரோனா பாதிப்பு தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட்டினார்.

  கொரோனா தடுப்புப் பணிக்காக அனைத்து கட்சி எம்.எல்.ஏக்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. மேலும், கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக மாவட்டவாரிய கூட்டம் நடைபெறும்போது எதிர்கட்சி எம்.எல்.ஏக்களுக்கும் உரியமுறையில் அழைப்புகொடுக்கப்படுகிறது. இந்தநிலையில், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் கலந்துகொண்டார். ஓ.பன்னீர் செல்வமும், ஐ.பெரியசாமி ஒருவொரையொருவர் சந்தித்து பரஸ்பரம் மரியாதையைப் பகிர்ந்துகொண்டனர். இருவரும் அருகருகே உட்கார்ந்து கூட்டத்தை எதிர்கொண்டனர். சுமார் 2 மணி நேரம் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

  இந்தக் கூட்டத்தில் தேனி மாவட்ட எம்.எல்.ஏக்கள் அனைவரும் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், ‘மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த சோதனைச் சாவடிகளில் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். குறிப்பாக வெளியில் இருந்து வரும் டிரைவர்கள், பயணிகளை தீவிரமாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட வேண்டும். மாவட்டத்திலுள்ள கூலித் தொழிலாளர்கள், அண்டை மாநிலமான கேரளாவிற்கு நாள்தோறும் சென்று வருபவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனாவை விரட்ட அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும்’ என்று தெரிவித்தார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: