கேரளாவுடனான உறவுக்காக முல்லைப் பெரியாறு உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது - ஓ.பன்னீர் செல்வம் ஆதங்கம்
கேரளாவுடனான உறவுக்காக முல்லைப் பெரியாறு உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது - ஓ.பன்னீர் செல்வம் ஆதங்கம்
ஓ.பன்னீர் செல்வம்
தமிழகம் - கேரளம் இரு மாநிலங்களின் உறவுக்காக முல்லைப் பெரியாறு அணையின் உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது என்று அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
முல்லைப் பெரியாறு அணையில் 138 அடியாக நீர்மட்டம் உயர்ந்தபோதே கேரளாவிற்கு உபரிநீர் திறந்துவிடப்பட்டது கண்டித்துதான் நவம்பர் 9-ம் தேதி போராட்டம் நடைபெறவுள்ளது என்று அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பண்ணை வீட்டில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய ஓ.பன்னீர் செல்வம், ‘முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் அதிமுக எடுத்த எந்த நடவடிக்கையும், திமுக மேற்கொள்ளவில்லை. அப்படி இருக்க அதிமுக மீதும் அதிமுக பொறுப்பாளர்கள் மீதும் திமுக அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டுகளை முன்வைப்பது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல. தமிழகம் - கேரளம் இரு மாநிலங்களின் உறவுகள் மேம்பட வேண்டும் என்பதற்காக முல்லைப் பெரியாறு அணையின் உரிமையைப் தமிழகம் விட்டுக்கொடுக்க முடியாது.
இதற்காகத்தான் முல்லைப் பெரியாறு அணை நீர் பாசனம் பெறும் தேனி, திண்டுக்கல், மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை ஆகிய ஐந்து மாவட்டங்களில் போராட்டம் நடைபெற உள்ளது. முல்லைப் பெரியாறு அணை விஷயத்தில் அதிமுக அரசு ஆட்சி காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், திமுக ஆட்சி காலத்தில் எடுக்கப்படவில்லை. மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் தான் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 2014, '2015, 2018 ஆகிய மூன்று ஆண்டுகளில் 142 அடியாக உயர்த்தப்பட்டது. அப்போதும் கூட இரு மாநில உறவுகள் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை.
ஆனால் தற்போது இரு மாநில உறவுகள் மேம்படுத்தலை கருத்தில் கொண்டு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த 138 அடியாக நீர்மட்டம் உயர்ந்து போதே கேரளாவிற்கு உபரிநீர் திறந்து விடப்பட்டது கண்டிக்கத்தக்கது. அதை கண்டித்து தான் வரும் நவம்பர் 9ஆம் தேதி 5 மாவட்டங்களில் போராட்டம் நடைபெற உள்ளது.
முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டப்படும் என்ற கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்ததை ஏற்க முடியாது. புதிய அணை கட்டுவதற்காக மத்திய அரசு மற்றும் உச்சநீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் கட்ட முடியாது. இடுக்கி மாவட்டத்தின் தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை தேவையற்றது. இதனால் இரு மாநில மக்களிடையே தேவையற்ற பிரச்சினை ஏற்படும்’ என்று தெரிவித்தார்.
Published by:Karthick S
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.