• HOME
 • »
 • NEWS
 • »
 • tamil-nadu
 • »
 • நிர்வாணமாக காட்டும் மாயக்கண்ணாடி.. விபரீத ஆசையால் வில்லங்கத்தில் சிக்கிய கும்பல்

நிர்வாணமாக காட்டும் மாயக்கண்ணாடி.. விபரீத ஆசையால் வில்லங்கத்தில் சிக்கிய கும்பல்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

காண்போரை நிர்வாணமாக காட்டும் மாயக்கண்ணாடியை தற்போது விற்பனை செய்ய உள்ளதாகவும், அதன் விலை ஒரு லட்சம் ரூபாய் என விலையும் பேசியுள்ளனர்.

 • Share this:
  மாயக்கண்ணாடி வாங்கி காண்பவர்களை நிர்வாணமாக பார்க்க ஆசைப்பட்டு லட்ச ரூபாய் பணத்தை இழந்து சிறையில் தவிக்கும் தீராத விளையாட்டுப் பிள்ளைகள்.        

   

  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்தவர் மதன்( வயது 42). கொத்தனார் வேலை செய்யும் இவருக்கு அவரது நண்பர் ஒருவர் மூலமாக தேனி மாவட்டம்,  போடி தாலுகாவிற்கு உட்பட்ட உப்புகோட்டை கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளிகளான திவாகர்(29) அரசமுத்து(36) ஆகியோர் அறிமுகமாகியுள்ளனர். தொடர்ந்து தொலைபேசியில் அடிக்கடி பேசி வந்ததால் அனைவரும் நட்பாக பழகி வந்துள்ளனர். இந்த நிலையில் தான் திவாகர், அரசமுத்து இருவரும் தன்னிடம் யோகம் தரும் ஒரு மாயக்கண்ணாடி இருப்பதாகவும், அதனை கண்ணில் அணிந்து பார்த்தால் அணைவரும் ஆடைகளின்றி நிர்வாணமாக காட்சியளிப்பார்கள் என மதனிடம் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளனர்.

  மேலும் யோகம் தரும் மாயக்கண்ணாடியை தற்போது விற்பனை செய்ய உள்ளதாகவும், அதன் விலை ஒரு லட்சம் ரூபாய் என விலையும் பேசியுள்ளனர். மாயக்கண்ணாடி மீது கொண்ட பேராசையால் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து அதனை விலைக்கு வாங்க முடிவு செய்துள்ளார் மதன். அதையடுத்து அவர்களுக்கு இடையே ரகசிய விற்பனை ஒப்பந்தம் ஏற்பட்டதால் மாடு வாங்குவது போல தேனிக்கு வருமாறு அழைத்துள்ளனர்.

  திவாகரும், அரசமுத்துவும் அதனடிப்படையில் நேற்று முன்தினம் தனது நண்பர்களான கும்பகோணம் சீனிவாசன்(48), வரதராஜன்(49) ஆகியோருடன் காரில் தேனி வந்த மதனை, பெரியகுளம் தமிழ்நாடு அரசுப்போக்குவரத்து கழகப் பணிமணை அருகே உள்ள சுடுகாடு பகுதிக்கு வரவழைத்துள்ளனர். அங்கு காத்திருந்த திவாகர், அரசமுத்துவிடம், பேசியது போல் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்து அவர்களிடம் இருந்து அட்டைப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி ஒன்றை பெற்றுள்ளார்  மதன். மாயக்கண்ணாடியை பெற்றுக் கொண்ட மகிழ்ச்சியில் அதனை அணிந்து பார்த்த மதனிற்கு ஏமாற்றம் கலந்த அதிர்ச்சி தான் கிடைத்தது.

  காரணம் முதியவர்கள் அணியும் பழங்கால கண்ணாடியை, மாயக்கண்ணாடி எனக்கூறி இருவரும் ஏமாற்றியது தெரியவந்துள்ளது. இதனிடையே பணத்தைப் பெற்றுக் கொண்ட இருவரும் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பியோட, அவர்களை நண்பர்களுடன் பின் தொடர்ந்த மதன், சிறிது தூரத்திலேயே விரட்டிப் பிடித்துள்ளார். ஆனால் லட்ச ரூபாய் பணத்துடன் திவாகர் மட்டும் தப்பியோடியுள்ளார். பிடிபட்ட அரசமுத்துவை ஆத்திரத்தில் அனைவரும் அடித்து துவைத்ததோடு மட்டுமல்லாமல் தாமகவே பிடித்துச் சென்று காவல்நிலையத்தில்  புகாரும் அளித்துள்ளார்.

  புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய பெரியகுளம் காவல்துறையினர் அரசமுத்துவை கைது செய்தனர். மேலும் அவர் அளித்த வாக்குமூலத்தின் படி திவாகரின் வீட்டில் இருந்து பணம் ரூபாய் 75,000 காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனிடையே சம்பவ இடத்தில் அரசமுத்துவை அடித்து கொலை மிரட்டல் விடுத்ததாக சீனிவாசன், மதன் மற்றும் வரதராஜன் ஆகிய 3பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த பெரியகுளம் காவல்துறையினர் அவர்களையும் கைது செய்தனர்.

  மாயக்கண்ணாடி விவாகரத்தில் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர் அவர்களை சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள திவாகர் என்பவரை தனிப்படை அமைத்து காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.  யோகம், பெண் சபலத்தினால் உண்டான பேராசையால் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை இழந்து, அனைவரின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானதோடு மட்டுமல்லாமல் தற்போது சிறையில் பரிதவித்து வருகின்றனர் இந்த தீராத விளையாட்டுப் பிள்கைள்.

  செய்தியாளர்: பழனிகுமார் (தேனி)

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Ramprasath H
  First published: