கொரோனாவுக்கே ‘டஃப்’ கொடுக்கும் தேனி மலைவாழ் மக்கள்! எப்படி சாத்தியம்?

கொரோனா பிறந்த இந்த ஒன்றரை ஆண்டுகளில் எந்தவித நோய்த் தொற்றின் அறிகுறிகளோ, அச்சமோ இன்றி வாழ்ந்து வருகின்றனர் தேனியில் உள்ள மலைக்கிராம மக்கள்.         

கொரோனா பிறந்த இந்த ஒன்றரை ஆண்டுகளில் எந்தவித நோய்த் தொற்றின் அறிகுறிகளோ, அச்சமோ இன்றி வாழ்ந்து வருகின்றனர் தேனியில் உள்ள மலைக்கிராம மக்கள்.         

  • Share this:
கொரோனா பெருந்தொற்றால் உலகமே அஞ்சி ஓடிக்கொண்டிருக்கும் வேளையில் கொரோனாவிற்கு டாட்டா காட்டிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் தேனி மலைக்கிராம மக்கள்.

“கொரோனா”... இந்த சொல்லை கடந்த ஓராண்டுகளுக்கு மேலாக உச்சரிக்காத உலக மக்களே இல்லை என்று சொல்லலாம். உலகையே ஆட்டி படைக்கும் இந்த கொடிய பெருந்தொற்றால் மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். அரசும் தம் குடிமக்களின் நலனை பேணிக்காத்திட பேரிடர் காலமாக கருதி இரவு பகலாக போராடி வருகிறது. இந்த நிலையில்தான் கொரோனா பிறந்த இந்த ஒன்றரை ஆண்டுகளில் எந்தவித நோய்த் தொற்றின் அறிகுறிகளோ, அச்சமோ இன்றி வாழ்ந்து வருகின்றனர் தேனியில் உள்ள மலைக்கிராம மக்கள்.

மேற்குத் தொடர்ச்சி மலையை அரணாகக் கொண்டுள்ள தேனி மாவட்டத்தில் மேகமலை, வெள்ளிமலை, அகமலை, கொட்டக்குடி உள்ளிட்ட பல்வேறு மலைக்கிராமங்களில் ஏராளமான மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இவற்றில் போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அகமலை ஊராட்சியில் ஊரடி, ஊத்துக்காடு, கரும்பாறை, அண்ணாநகர், சொக்கன்மலை,  சின்ன மூங்கில், பெரிய மூங்கில், அலங்காரம், கரும்பாறை உள்ளிட்ட 16 உட்கடை மலைக்கிராமங்கள் உள்ளன. விவசாயத்தை பிரதானமாகக் கொண்டு வாழ்ந்து வரும் இங்கு மலைவாழை, ஏலக்காய், மிளகு, காபி, தேயிலை, எலுமிச்சை, பஞ்சு உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. பெரியகுளம் பகுதியில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள இந்த மலைக்கிராமங்களுக்கு சோத்துப்பாறை அணை வரையிலான 10 கி.மீ. தூரத்திற்குதான் பேருந்து வசதி உள்ளன. விவசாயிகள் தங்கள் விளை பொருட்கள் மற்றும் வேளாண் இடு பொருட்களை குதிரைகள் உதவியுடன்தான் கொண்டு செல்வர். இதுதவிர, அவசர காலங்களில் மருத்துவமனைக்கு மக்கள் செல்ல வேண்டுமானால் டோலி கட்டிதான் கொண்டு செல்லும் சூழல் உள்ளது. மலைப்பகுதியில் ஒரு கிராமத்திற்கும் மற்றொரு கிராமத்திற்கும் சுமார் 2 முதல் 3 கி.மீ. தூர இடைவெளியுடன் இயற்கை எழில் சூழ அமைந்துள்ள அங்கு சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இயற்கை எழில் சூழ்ந்த மலைப் பகுதிக்கு நடுவே, சுவாசிக்க இயற்கையான காற்று, உண்பதற்கு இயற்கையான உணவு, மாசற்ற தண்ணீர், காடு மேடுகளில் கடினமான வேலை என இயற்கை சார்ந்து வாழ்ந்து வரும் அவர்கள் அதிக நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக நல்ல ஆரோக்கியத்துடன் திடமான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறான வாழ்க்கை வாழும் இவர்களை தொட்டுப் பார்க்க அஞ்சுகிறது கொரோனா.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுகுறித்து அந்த மலைக்கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் அபிக்குமார் கூறுகையில், ‘கொரோனாவைப் பற்றி அறிந்த மலைக்கிராம மக்களாகிய நாங்கள் சுய கட்டுப்பாடோடு இருந்து மற்றொரு பகுதிக்கு செல்லாமலும், பிற பகுதியில் இருந்து எங்கள் பகுதிக்கு யாரும் வராமல், தங்களை தாங்களாகவே பாதுகாத்துக் கொண்டு வாழ்ந்து வருகிறோம். அதையும் தாண்டி புதிதாக வருபவர்களை கட்டாயம் முகக்கவசம் அணிந்த பிறகு தனிமனித இடைவெளியுடன்தான் அனுமதிக்கின்றோம். மேலும் கொரோனாவிற்கு அரசு வழங்கி வரும் தடுப்பூசி மருந்துகள் குறித்து மலைவாழ் மக்களிடம் போதிய விழிப்புணர்வுமே இல்லை’, என்றார்.

இயற்கையை நேசித்து இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து வருபவர்களை இயற்கை எப்போதும் கைவிடுவதில்லை என்பதற்கு அகமலை போன்ற மலைக்கிராமங்கள் ஒரு உதாரணம். அதேசமயம், இவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

செய்தியாளர்- பழனிகுமார்
Published by:Archana R
First published: