Home /News /tamil-nadu /

‘தொல்காப்பிய தூதர்’: தேனி இரட்டை சகோதரிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டு..!!

‘தொல்காப்பிய தூதர்’: தேனி இரட்டை சகோதரிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டு..!!

முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின்

Theni Tholkappiyam Sisters | தொல்காப்பியத்தில் சாதனை படைத்த தேனி சிறுமிகள் குறித்து நியூஸ்18 தமிழின் உள்ளூர் செய்தி இணையதளத்தில் கடந்த ஏப்ரல் 12ம் தேதியன்று வெளியாகி இருந்தது. இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலான நிலையில் இது முதல்வரின் கவனத்துக்கு சென்றது.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • Last Updated :
    12 மணி நேரம் தொடர்ச்சியாக  தொல்காப்பியம் ஒப்புவித்து, உலக அளவில் " தொல்காப்பியத் தூதர்" விருதை வென்ற தேனியைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவிகள் குறித்து  ‘நியூஸ் 18 தமிழ் உள்ளூர்’  இணையதளத்தில் செய்தி வெளியான நிலையில், சிறுமிகளின் தமிழ் ஆர்வத்தை பார்த்த தமிழக முதல்வர் ஸ்டாலின், இருவரையும் நேரில் வரவழைத்து பாராட்டியிருப்பதுடன் தலா ஒரு லட்ச ரூபாய் பரிசளித்து ஊக்கப்படுத்தியுள்ளார். 

    தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள மறவபட்டி என்ற தே.சொக்கலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த தம்பதியர் அறிவுச்செல்வம் - ஜெயமணி.‌ இவர்களுக்கு செந்தமிழ் சாலினி(12), முத்தமிழ் சாமினி(12) என்ற இரட்டையர்கள் மற்றும் பைந்தமிழ் ரோசினி(6) என மூன்று பெண் குழந்தைகள்உள்ளனர். கணவர் அறிவுச்செல்வம் திருப்பூரில் சாயப்பட்டறை ஒன்றில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வரும் நிலையில், ஜெயமணி தனது மூன்று பெண் குழந்தைகளுடன் சொந்த ஊரில் வசித்து வருகிறார்.

    மூவருமே அங்குள்ள ஊராட்சி ஒன்றிய  நடுநிலைப் பள்ளியில் இரட்டையர்கள் எட்டாம் வகுப்பும், 6வயது சிறுமி ஒன்றாம் வகுப்பும் படித்து வருகின்றனர். இவர்களில் மூத்தவர்களான செந்தமிழ் சாலினி, முத்தமிழ் சாமினி இருவரும் அன்மையில், தொல்காப்பியம் ஒப்புவித்தலில் உலக சாதனை புரிந்து தேனி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

    செந்தமிழ் சாலினி - முத்தமிழ் சாமினி


    பாண்டிச்சேரியில் உலக திருக்குறள் சமுதாய மையம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் 1,610 நூற்பாக்களைக் கொண்ட தொல்காப்பியத்தினை முழுவதும் மனனம் செய்து  முற்றோதல் நிகழ்ச்சியில்,  பங்கேற்று ஒப்புவித்துள்ளனர்.‌ ஆறு சுற்றுக்களாக தொடர்ந்து 12 மணி நேரம் தொல்காப்பியத்தை  ஒப்புவித்தல் செய்ததற்காக இந்தியன் புக்ஸ் ஆஃப் ரெக்கார்ட்-ல் இடம் பிடித்துள்ளனர். மேலும்  "தொல்காப்பியத் தூதர்" எனும்  விருதையும் முதன் முதலாக பெற்ற இரட்டைப் பெண் குழந்தைகள் என்ற பெருமையும், பாராட்டுக்களையும் பெற்றுள்ளனர்.

    MK Stalin


    இந்நிலையில், தொல்காப்பியத்தில் சாதனை படைத்த சிறுமிகள் குறித்து நியூஸ்18 தமிழின் உள்ளூர் செய்தி இணையதளத்தில் கடந்த ஏப்ரல் 12ம் தேதியன்று வெளியாகி இருந்தது. இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலான நிலையில் இது முதல்வரின் கவனத்துக்கு சென்றது. இதனையடுத்து சிறுமிகள் குறித்து விசாரித்த முதல்வர் இருவரையும் இன்று சென்னைக்கு நேரில் வரவழைத்து பாராட்டியுள்ளார். மேலும் சிறுமிகளின் இலக்கிய, இலக்கண திறனை மேலும் வளர்க்கும் விதமாக பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் இருவருக்கும் தலா   ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலை வழங்கினார்.

    இதையும் படிங்க:  தொல்காப்பியம் கற்று உலக சாதனை புரிந்த தேனி சிறுமிகள்..

    சிறுமிகள் குறித்து அவர்களின் தந்தை கூறியதாவது..

    குழந்தைகளின் ஆரம்பக் கல்வியை ஆங்கில வழியில் படித்து வந்த போது, தாய் மொழியான தமிழை உச்சரிப்பதிலும், பேசுவதிலும்  சிரமம் அடைந்தனர்.‌ அதனால் தமிழ் மொழியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக மூன்றாம் வகுப்பு முதல் தமிழ் வழியிலேயே இருவரையும் படிக்க வைத்துள்ளனர் இவர்களின் பெற்றோர். அதுவும் அரசுப் பள்ளியில்.‌ தொடர்ந்து தமிழ் மொழி மீது கொண்ட பற்றால், குழந்தைகளுக்கு உலகப் பொது மறையான  திருக்குறளை கற்பிக்கத் தொடங்கினேன் என்கிறார் இவர்களின் தந்தை அறிவுச்செல்வம். எனக்குள் இருந்த தமிழ் ஊற்றோ! என்னவோ! தெரியவில்லை, கற்பித்த சில நாட்களிலேயே  இரட்டையர்கள் இருவரும் திருக்குறளில் உள்ள 1,330குறள்களையும் பொருள் பட கற்றுத் தேர்ந்தனர்‌. 133 அதிகாரங்களையும் விளக்க உரையுடன், வியக்கும் வண்ணம் சொல்லும் அளவிற்கு வளர்ந்தனர் .‌

    இதையடுத்து சின்னமனூர் நூலகம்  வாசகர் வட்டத்தினர், தேனி வையைத் தமிழ்ச் சங்கம் உள்ளிட்டோர்களின் அறிவுரை மற்றும் ஆலோசனையின் படி தமிழின் இரு கண்களான  திருக்குறள், தொல்காப்பியத்தை நன்கு கற்றுத் தேர்ந்தனர்.‌ கொரோனா பரவலால் கடந்த 2ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப் படாததால்  குழந்தைகள் வீட்டில் இருந்த நேரத்தை வீணடிக்காமல் தமிழார்வலர்களின் உதவியுடன்  தேவாரம், திருவாசகம், திருப்பாவை, திருவெம்பாவை, பாரதியார் கவிதைகள் உள்ளிட்ட தொன்மையான  தமிழ் நூல்களை முழுவதும் கற்றறிந்ததோடு ஒப்புவிக்கும் திறமையும் பெற்றதாக பெருமைமிகு சொல்கிறார் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்த அவர்களது தாய் ஜெயமணி.

    தேனி அருகே உள்ள நாகலாபுரம்  திருக்குறள் வழி திருவள்ளுவர் மன்றத்தில் முதல் முறையாக திருக்குறள் முற்றோதல் செய்த,  செந்தமிழ் சாலினி - முத்தமிழ் சாமினி  தெளிவான உச்சரிப்புடன் ஒப்புவித்தால் 1 மணி நேரத்திலும், விரைவாக ஒப்பிவித்தலில் 35 முதல் 40 நிமிடங்களிலும் முடித்து பாராட்டு பெற்றனர். அதனைத் தொடர்ந்து கோவை கணபதி தமிழ்ச்சங்கம் நடத்திய திருக்குறள் போட்டியில் பங்கேற்ற 10 ஆயிரம் பேரில் இந்த இரட்டைக் குழந்தைகள் முதலிடம் பெற்றனர்.

    மேலும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில், பங்கேற்ற இந்த இருவரும் "திருக்குறள் சாதனையாளர் விருது" உட்பட ஏராளமான பாராட்டுச் சான்றிதழ்கள், பதக்கங்கள், கோப்பைகள் ஆகியவற்றை பெற்று தமிழுக்கு அழகு சேர்த்துள்ளனர். அதன் மகுடமாகத் தான் தற்போது பெற்றுள்ள "உலகத் தொல்காப்பியத் தூதர் விருது".‌

    ஆங்கில வழியில் படித்து வந்த தங்களுக்கு தமிழின் தொன்மையும், நன்மையும் தெரியாமல் இருந்தது.‌ தாயின் தாலாட்டிலும், சான்றோர்களின் அறிவுரையிலும் தமிழ் மொழியை  தற்போது நன்கு கற்றுத் தேர்ந்துள்ளோம். இதனால் பள்ளியில் தமிழ் பாடங்களை ஆசிரியர் கற்பிக்கும் போது, அதன் அர்த்தங்களை சுலபமாக புரிந்து கொள்ள முடிகிறது.‌ அதோடு உடன் பயிலும் சக மாணாக்கர்களுக்கும் எங்களால் தமிழ் பயிற்றுவிக்கி முடிகிறது என்பதை எண்ணிப்  பெருமை கொள்வதாக கூறுகிறார் முத்தமிழ் சாமினி.

    Also read... தொல்காப்பியம் கற்று உலக சாதனை புரிந்த தேனி சிறுமிகள்..

    தினசரி காலை, மாலை என இரு வேளைகளிலும் சுமார் ஒரு மணி நேரமாவது திருக்குறள், தொல்காப்பியம், சிலப்பதிகாரம் உள்ளிட்ட நூல்களை தாயிடம் கற்றுக் கொள்வோம்.‌ அதனை  நண்பர்களிடம் பகிர்வதோடு அவர்களும் தாமாக முன்வந்து எங்கள் தாயிடம் கற்றுக் கொள்கிறார்கள்.‌ ஆங்கிலத்தில் பேசுவது, எழுதுவதை விட தமிழில் கற்கும் போது, உரை நிகழ்த்தும் போதும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்கிறார் செந்தமிழ் சாலினி.

    சமுதாய அந்தஸ்து, நாகரிகம், கலாச்சாரம் என்ற பெயரில் ஆங்கில மோகம் அதிகரிக்கும் கால கட்டத்தில் உலகின் தொன்மையான தமிழ் மொழியை கற்பதில் ஆர்வம் காட்டுவதோடு மட்டுமல்லாமல் அதில் உலக சாதனையும் படைத்து தேனி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்திருக்கும் இந்த இரட்டைக் குழந்தைகளை தமிழ் மக்களோடு சேர்ந்து நியூஸ் 18 - தமிழ்நாடு செய்திகள் தொலைக்காட்சியும்  பாராட்டுகிறது.

    -செய்தியாளர்: பழனிக்குமார்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: MK Stalin, Theni

    அடுத்த செய்தி