தேனியில் உள்ள மங்கல தேவி கண்ணகி கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா நடத்துவது குறித்த முன்னேற்பாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நாளை உத்தமபாளையம் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெறுகிறது.
தேனி மாவட்டம் கூடலூருக்கு அருகே உள்ள வண்ணாத்திப்பாறை மலையில் மங்கல தேவி கண்ணகி கோவில் உள்ளது. இதற்காக பளியங்குடியில் இருந்து சுமார் 6 கி.மீ தூரம் செங்குத்தான மலைப்பாதையில் நடந்து செல்ல வேண்டும். அல்லது கேரள மாநிலம் குமுளியில் இருந்து தேக்கடி, கொக்கரக்கண்டம் உள்ளிட்ட பெரியார் புலிகள் காப்பக வனப்பாதை வழியாக ஜீப்பில் சுமார் 16 கி.மீ தூரம் பயணிக்க வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் சித்ராபவுர்ணமி அன்று தமிழக- கேரள பக்தர்கள் இணைந்து கண்ணகி கோவிலில் சித்திரை முழுநிலவு விழா கொண்டாடுவது வழக்கம். ஆனால், கொரோனா சூழ்நிலை காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக (2020 மற்றும் 2021) விழா நடைபெறவில்லை.
கொரோனா நோய்த் தொற்று படிப்படியாக குறைந்ததை அடுத்து மதம் சார்ந்த விழாக்களுக்கு அரசு அனுமதி வழங்கியது. இதனால் இந்த ஆண்டு மங்கல தேவி கண்ணகி கோவில் விழா கொண்டாடப்பட வேண்டும் என பக்தர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். அதன் படி இந்த ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி வரும் சித்திரைப் பவுர்ணமி அன்று கண்ணகி கோவில் சித்திரை பவுர்ணமி விழா நடத்துவது குறித்த முன்னேற்பாடு ஆலோசனைக்கூட்டம் நாளை வியாழக்கிழமை உத்தமபாளையம் கோட்டாட்சியர் கௌசல்யா தலைமையில் நடைபெறுகிறது.
Must Read : உடல் முழுவதும் சகதி பூசி கமுதியில் விநோத வழிபாடு... சேத்தாண்டி வேடமிட்டு ஆயிரக்கணக்கானோர் நடனம்
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கண்ணகி அறக்கட்டளை பிரதிநிதிகள், உத்தமபாளையம் ஏஎஸ்பி ஸ்ரேயா குப்தா உள்ளிட்ட காவல்துறையினர், வருவாய், மற்றும் வனத்துறை அதிகாரிகள், போக்குவரத்து துறையினர், சுகாதாரத்துறையினர், தீயணைப்புத்துறையினர் கலந்து கொள்கின்றனர்.
செய்தியாளர் - பழனிகுமார், தேனி. இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.