கொரோனா தொற்றால் மகன் உயிரிழந்த அதிர்ச்சியில் தந்தையும் உயிரிழந்த பரிதாபம்!

தேனி

இறந்த கணவரின் உடலை நல்லடக்கம் செய்வதற்கு மகன் இல்லாததால் செய்வதறியாது வீட்டில் சோகத்தில் இருந்துள்ளார் அவரது மனைவி.

 • Share this:
  தேனியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மகன் உயிரிழந்த தகவலை கேட்ட அதிர்ச்சியில் வயதான தந்தையும் மரணமடைந்துள்ளார். அவருக்கு இறுதிச் சடங்கு செய்வதற்கு உறவினர்கள் இல்லாததால் சமூக ஆர்வலர்களால் அடக்கம் செய்தனர்.

  தேனி மாவட்டம் ஆண்டிபட்டி குமாரபுரம் பகுதியில் வசித்து வந்தவர் துரைராஜ் (72). மதுரை மாவட்டம் திருமங்கலத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மனைவி காமாட்சி, மகன் ராஜ்குமார் (36) மற்றும் மருமகள், பேரக்குழந்தைகள் ஆகியோருடன் வசித்து வந்தார். இவரது மூத்த மகன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தார்.

  இந்நிலையில் கொரோனா நோயினால் கடந்த சில தினங்களுக்கு முன் பாதிக்கப்பட்ட மற்றொரு மகனான ராஜ்குமார் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தனியார் வங்கியில் களப்பணியாளராக பணிபுரிந்து வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். மகன் இறந்த தகவலை கேட்ட அதிர்ச்சியில் ஏற்பட்ட மாரடைப்பால் தந்தை துரைராஜூம் இன்று அதிகாலை பரிதாபமாக காலமானார்.

  இறந்த கணவரின் உடலை நல்லடக்கம் செய்வதற்கு மகன் இல்லாததால் செய்வதறியாது வீட்டில் சோகத்தில் இருந்துள்ளார் காமாட்சி. இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர், ஆண்டிபட்டி வட்டார சுகாதாரத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில் எம்.சுப்புலாபுரம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருந்தாளுனர் ரஞ்சித்குமார், ஆண்டிபட்டி பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்களான ராஜேஷ் கண்ணன், செல்வம், முனியாண்டி மற்றும் மங்கள் உள்ளிட்டோர் உயிரிழந்த துரைராஜூவின் உடலை அமரர் ஊர்தியில் எடுத்துச் சென்று மயானத்தில் நல்லடக்கம் செய்தனர்.

  கொரோனாவால் மகன் இறந்த அதிர்ச்சியில் வயதான தந்தையும் உயிரிழந்த சம்பவம் ஆண்டிபட்டி பகுதியில் சோகக்கதை ஏற்படுத்தியுள்ளது.

  செய்தியாளர் - பழனிக்குமார்  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: