• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ரேஷன் கடைகளில் பழைய முறைப்படி பொருள்கள் விநியோகம் - மக்கள் மகிழ்ச்சி

ரேஷன் கடைகளில் பழைய முறைப்படி பொருள்கள் விநியோகம் - மக்கள் மகிழ்ச்சி

ரேஷன் கார்டு

ரேஷன் கார்டு

ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் பொருட்கள் வழங்கப்படும் நிலையில், அதில் சில சிக்கல்கள் நீடித்ததால் , பழைய முறைப்படி பொருட்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

  • Share this:
    தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடைகளில் கடந்த ஆண்டு முதல் பயோமெட்ரிக் முறை நடைமுறைக்கு வந்தது. அதன் மூலம் ஸ்மார்ட் கார்டில் இடம் பெற்றுள்ள குடும்ப உறுப்பினர்கள் யாராவது ஒருவர் மட்டுமே பொருட்களை வாங்கமுடியும் என்ற சூழல் இருந்து வந்தது. பயோமெட்ரிக் முறையில் கைவிரல் ரேகை பதிவு செய்யப்படுவதில் சிக்கல் நீடித்து வருகிறது. குறிப்பாக வயதானாவர்கள் கைவிரல் ரேகை பதிவு செய்வது சிரமமாக இருந்தது. இதனால் ஆதாரில் அவர்கள் கைவிரல் ரேகையை அப்டேட் செய்வதற்கு தாலுகா அலுவலகத்திற்கு பலர் படையெடுக்க துவங்கினர்.

    இந்நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ரேஷன் கடைகளில், பயோ மெட்ரிக் முறையில் பயனாளிகள் விரல் ரேகை பதிவாகாததால், பயனாளிகள் பொருட்கள் வாங்க முடியாமல் தவித்து வந்தனர். இலவச அரிசி, பருப்பு, எண்ணெய்,கோதுமை போன்ற பொருட்கள் வாங்க ரேஷன் கடைகளில் பயோ மெட்ரிக் முறை அறிமுகப்படுத்தப் பட்டது. பயனாளியின் ஆதார் அட்டையில் உள்ள விரல் ரேகை பொருட்கள் வாங்கும்போது வைக்கப்படும் விரல் ரேகையுடன் ஒத்துப்போக வேண்டும். ஆனால் பயனாளிகள் விரல் ரேகையை பதிவு செய்யும் போது பயோ மெட்ரிக் இயந்திரம் ஏற்க மறுக்கிறது. பயனாளிகளின் விரல் ரேகை பதிவாகவில்லை என ரேஷன் பொருட்களை தராமல் பணியாளர்கள் திருப்பி அனுப்புவதும் வாடிக்கையாக நடைபெற்று வந்தது.

    இந்த நிலையில், தற்போது ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் முதியோர்களின் கைரேகை பதிவாகவில்லை என்றாலும் பழைய முறைப்படி ரேஷன் பொருட்களை விநியோகிக்கலாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு, விரல் ரேகை பதிவாகவில்லை என்றால் பதிவேடுகளில் பதிவு செய்து பழைய முறைப்படி பொருட்களை வழங்கலாம் என்று சுற்றறிக்கை வந்துள்ளது.

    தேனி மாவட்டத்தில் பெரும்பாலும் முதியவர்களின் விரல் ரேகை பதிவு ஆகாமல் இருந்தது. இதனால், அவர்கள் ரேஷன் பொருட்களை பெறாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில், ரேஷன் கடைகளில் பழைய முறைப்படி பொருட்கள் வழங்கப்படுவதால் முதியோர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர் .

    இதுகுறித்து ரேஷன் கடை ஊழியர் கூறுகையில், " தற்போது பெரும்பாலும் பயோமெட்ரிக் முறையில் விரல் ரேகை பதிவு செய்து பொருள்களை வழங்கி வருகிறோம். பெரும்பாலான நபர்களுக்கு விரல்ரேகை பதிவாகிறது. முதியவர்களுக்கு விரல் ரேகை பதிவாகாத சிக்கல் இருந்து வந்தது. அவர்கள் விரல் ரேகை பதிவு செய்வதற்காக தாலுகா அலுவலகம் சென்றபோது விரல்ரேகை பதிவு ஆகாமலும் இருந்தது. இதனால் தாலுகா அலுவலகம் சென்றும் விரல் ரேகை அப்டேட் செய்ய முடியாத முதியவர்களுக்கு பதிவேட்டில் பதிவு செய்து பொருட்கள் வினியோகிக்கப்படுகிறது. முதியவர்களுக்கு விரல் ரேகை பதிவாகவில்லை என்றால் பதிவேட்டில் பதிவு செய்து பின்னர் பொருட்களை வழங்க உத்தரவு உள்ளது. அரசின் உத்தரவுப்படி விரல் ரேகை பதிவாகவில்லை என்றால் பதிவேட்டில் பதிவு செய்து பொருட்களை வழங்க உள்ளோம் என்றார்.

    செய்தியாளர்: சுதர்ஸன்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: