Home /News /tamil-nadu /

Exclusive | அழிவின் விளிம்பிற்கு தள்ளப்பட்டுள்ளதா நாட்டு மாடு இனம்? நீதிமன்ற தடையும்.. கால்நடை வளர்ப்போரின் குமுறலும்...

Exclusive | அழிவின் விளிம்பிற்கு தள்ளப்பட்டுள்ளதா நாட்டு மாடு இனம்? நீதிமன்ற தடையும்.. கால்நடை வளர்ப்போரின் குமுறலும்...

நாட்டு இன மாடுகள்

நாட்டு இன மாடுகள்

Theni Megamalai | மேகமலை உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து வனப்பகுதிகளிலும் மலை மாடுகளை மேய்ச்சலுக்கு அனுமதிக்க கூடாது என்ற உத்தரவு ஒட்டு மொத்த கால்நடை வளர்ப்பாளர்களையும் வேதனையடையச் செய்துள்ளது.

    தமிழகத்தில் உள்ள  வனப்பகுதிகளில் மலை மாடுகள் மேய்ச்சலுக்கு நீதிமன்றம் விதித்த தடை உத்தரவால் அழிவின் விளிம்பிற்கு தள்ளப்பட்டுள்ளதா நாட்டு மாடு இனம்.?

    மேற்குத்தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்ட தேனி மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்பு தான் பிரதானத் தொழில். அதுவும் நாட்டு இன மாடுகள் இங்கு அதிகம். இந்த மாடுகள் பெரும்பாலும் மலைப்பகுதியில் மேய்ச்சலுக்கு அனுப்பப்படுவதாலும், அங்கேயே தங்கி, கிடை அமைத்து வளர்க்கப்படுவதாலும் ‘மலை மாடுகள்’ என்றும்  ‘கிடை மாடுகள்’ அல்லது ‘தொழு மாடுகள்’ என்றழைக்கப்படுகிறது.‌

    அத்தகைய மலை மாடுகளை வனப்பகுதிகளில் மேய்ச்சலுக்கு அனுமதிக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கடந்த மார்ச் 4ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது. மலை மாடுகள் வனப்பகுதியில் மேய்வதால் குறிப்பாக,  வைகையின் பிறப்பிடமான மேகமலை வனப்பகுதியில் இந்த மலை மாடுகள் மேய்க்கப்படுவதால், வைகை ஆற்றின் நீர்வரத்து குறைந்து கடைமடைப் பகுதியான இராமநாதபுரம் மாவட்டத்திற்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது என இராமநாதபுரத்தைச் சேர்ந்த தனிநபர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றக் கிளை இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

    அதுவும் மேகமலை உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து வனப்பகுதிகளிலும் மலை மாடுகளை மேய்ச்சலுக்கு அனுமதிக்க கூடாது என்ற உத்தரவு ஒட்டு மொத்த கால்நடை வளர்ப்பாளர்களையும் வேதனையடையச் செய்துள்ளது.

    நாட்டு மாடு


    அந்தக் காலத்தில் கண்டமனூர் ஜமீனின் அனுமதிச் சீட்டு, வெள்ளைக்காரர்கள் ஆட்சியில் எந்தவித நிபந்தனையுமின்றி தங்கு தடையின்றி கிடைத்தது. மலைகளில் எங்கும் சென்று மாடுகளை மேய்த்து வந்த கால்நடை வளர்ப்பாளர்களுக்கு  சுதந்திர இந்தியாவில் தற்போது மலைகளில் மாடுகளை மேய்க்க, நமது அரசுத் துறை அதிகாரிகள் அனுமதி மறுப்பது வேதனையளிப்பதாக இருக்கிறது.

    துவக்கத்தில் சாதாரண காடுகளாக இருந்த மேகமலை வனப்பகுதி, காப்பு காடுகளாக மாற்றப்பட்டு, பின் வன உயிரின சரணாலயமாக உருமாறி தற்போது புலிகள் காப்பகமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.‌ இதனால் ஒவ்வொரு கால கட்டத்திலும் வனத்துறையினர் கொடுக்கும் கெடுபிடிகள் அதிகம். இதனால் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட நாட்டு மாடுகள் வளர்க்கப்பட்ட தேனி மாவட்டத்தில், தற்போது 15 ஆயிரம் மாடுகளே உள்ளது. எஞ்சியுள்ள  மாடுகளும் இந்த நீதிமன்ற உத்தரவால் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர் உள்ளூர்வாசிகள்.

    நாட்டு மாடு


    நாட்டு மாடுகளை வளர்க்க போதிய நிலையில்லாததால் மலைப்பகுதிகளையும், தரிசு நிலங்களையும் நம்பிதான் வாழ்வாதாரத்தையே நடத்துகின்றோம். ஆனால், மேய்ச்சலுக்கு காடுகள், தோட்டங்கள் பக்கம் சென்றால் நிலக்கிழார்களால் அவமதிக்கப்படுகின்றோம், வேறு வழியின்றி மலைப்பகுதிகளுக்குச் சென்று தான் மாடுகளை மேய்க்க வேண்டும். ஆனால் அதற்கும் நீதிமன்றம் தடை விதித்திருப்பதால், நாட்டு மாடு இனம் அழிவதோடு மட்டுமல்லாமல் விவசாயத்தையும் பாதிப்படையும் செய்யும்.‌
    பொதுவாக நாட்டு மாட்டின் சாணம், கோமியம் போன்றவை விவசாயத்தின் இயற்கை உரமாகும்.‌ இயற்கையாக மலைகளில் மேய்வதனால் மட்டுமே நாட்டு மாடுகளின் ஆரோக்கியம் மேம்படும். அதன் மூலம் நமக்கு சக்தி வாய்ந்த பொருட்கள் கிடைக்கும்.  அதோடு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு என நாம் மார்தட்டிக் கொள்ளும் ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயம் உள்ளிட்டவற்றிற்கும் நாட்டு மாடுகளே பிரதானமாகும்.

    வனப்பகுதிகளில் மலை மாடுகள் மேய்ச்சலுக்கு அனுமதிக்க மறுக்கப்பட்டால் இவை அனைத்தும் அழிந்து விடும் என்கின்றனர்.  தலைமுறை, தலைமுறைகளாக நாட்டு மாடு வளர்ப்பில் ஈடுபட்டு வரும் தங்களுக்கு இந்த வனத்துறையினரின் நடவடிக்கையால் மிகவும் சிரமத்திற்கு உள்ளானோம்.‌ மேகமலை வன உயிரின சரணாலயமாக மாற்றப்பட்ட பின் இவற்றின் கெடுபிடிகள் அதிகம்.‌ வனப்பகுதிகளில் மாடுகள் மேய்ச்சலுக்கு அனுமதிக்க வேண்டும் என்றால் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும், கால்நடை மருத்துவரின் பரிசோதனை சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் உள்ளிட்ட உத்தரவுகளை வனத்துறையினர் பிறப்பித்தனர்.‌ அவற்றை எல்லாம் செய்தாலும் 100 மாடுகளுக்கு விண்ணப்பித்தால்,  அதில் 30 மாடுகளுக்குத் தான் மேய்ச்சல் அனுமதிச் சீட்டு கிடைக்கும். இதனால் பெரும்பாலான மாடுகள் தீவனம் பற்றாக்குறையால் மடிந்து போகும் நிலையை எல்லாம் சந்தித்தோம்.

    இந்த நிலையில் தற்போது நீதிமன்றம் பிறப்பித்துள்ள  தடை உத்தரவால் நாட்டு மாடு இனம் மொத்தமாக அழிந்து விடும். நாட்டு மாடுகளோடு சேர்த்து நாங்களும் மடிந்து போவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்து மாடுகளை வனப்பகுதிகளில் மேய்ப்பதற்கு  தமிழக அரசு அனுமதி பெற்றுத் தராவிட்டால், ஆதார், ரேசன் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை திரும்ப ஒப்படைக்க போவதாக  கூறுகிறார் புத்தம்பட்டியைச் சேர்ந்த கால்நடை வளர்ப்பாளர் சுந்தரபாண்டி.

    நாட்டு மாடு


    மலை மாடுகளை மேய்ச்சலுக்கு வனப்பகுதிகளுக்கு கொண்டு செல்லக் கூடாது, பட்டா காடுகளில் மேய்த்துக் கொள்ளுங்கள் எனச்  சொல்கிறார்கள்.‌ ஆனால்  சொந்த பட்டா நிலங்களில் கூட மாடுகளை மேய்ப்பதற்கு வனத்துறையினரின் அனுமதி பெற வேண்டும். மாடுகள் மேய்வதற்கு பட்டா நிலத்தை அளவீடு செய்து தருவதற்கு வனத்துறையினர் செய்யும்  காலதாமதம்,  வீன் அலைக்கழிப்பு போன்றவற்றை சொல்லி மாளாது என்கின்றனர். மேலும்  வன விலங்குகளின் பாதுகாப்பில் அக்கறை செலுத்தும் அரசு, கால்நடை மற்றும் மனிதர்கள் மீது மட்டும் பாரபட்சம் காட்டுவது ஏன்? எனக் கேள்வி எழுப்புகிறார்கள்.

    மலை மாடுகள் வனப்பகுதிகளில் மேய்வதால் வன விலங்குகள் பாதிக்கப்படுவதாக சொல்பவர்கள், மலை மாடுகளின் மேய்ச்சலுக்காக பட்டா நிலங்களில் உள்ள பயிர்களை வன விலங்குகள் நாசம் செய்யும் போது மட்டும் ஏன் எதுவும் சொல்வதில்லை.‌ கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டிருந்த தனது கணவரின் உயிரிழப்பு வன உயிரினத்தால் ஏற்பட்டது. அந்த இழப்பை ஈடு செய்ய முடியாது என கண்ணீர் மல்க தெரிவித்தார் கோம்பைத் தொழு கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி.

    மலை மாடுகளை வனப்பகுதிகளில் மேய்ச்சலுக்கு அனுமதிக்காததால் அவை எல்லாம் தொழுவத்திலேயே  அடைத்து வைத்துள்ளோம். இதன் காரணமாக ஒரு தொழுவத்தில் உள்ள மாடுகளுக்கு மட்டும் நாளொன்றுக்கு ஒரு லோடு வைக்கோல் தேவைப்படும். அதன் விலை ஆறாயிரம் முதல் ஏழாயிரம் ரூபாய் வரையிலாகும். ஒரு நாளைக்கு ஏழாயிரம் ரூபாய் செலவழிக்க வசதி இருந்தால், நாங்கள் ஏன் மாடு மேய்க்கப் போகிறோம் என்று கேள்வி எழுப்புகின்றார் சின்னமனூர் எரசையைச் சேர்ந்த பிரபு.

    வனப்பகுதிகளில் மேய்ச்சலுக்கான போடப்பட்ட தடை உத்தரவால்,  மாடுகளின் உணவுப் பசிக்காக தற்போது விளை நிலங்களில் மேய்ச்சலில் ஈடுபட்டு வருகின்றோம். அதுவும். அவற்றிற்கு போதுமானதாக இல்லை.‌ இந்த ஆண்டு இரு போகம் நெல் சாகுபடி ஏற்பட்டுள்ளதால் அறுவடைக்கு பின்  கழனியில் இருந்து வைக்கோல் கிடைக்கிறது.‌ வரும் ஆண்டுகளில் போதியளவு மழை இல்லாமல் போனால்,  இதுவும் கேள்விக்குகறியாகி விடும்.‌ அதோடு வனப்பகுதிகளில் மாடுகள் மேயாததால் அவற்றிற்கு நோய்த்தொற்று ஏற்பட்டு வருகிறது. வனப்பகுதிகளில் இயற்கையாக கிடைக்கும் மரம், செடிகள் மற்றும் தண்ணீர் கிடைப்பதால் உண்டாகும் ஆரோக்கியம் தற்போது நிலப்பரப்பில் கிடைப்பதில்லை.

    மேய்ச்சலின் மூலம் வாழ்க்கை நடத்துகிற பிரிவினரில் பாரம்பரிய மேய்ச்சலுக்கான ஆதாரங்கள் நிரந்தர மற்றும் இடம் பெயர்ந்து வாழும் மக்கள் பயன்படுத்துகிற உரிமைகள் வழங்கப்படுகிறது. மேலும் அழியும் நிலையில் உள்ள வன விலங்குகளை பாதுகாக்க சரணாலயம், காப்பகங்கள் அமைக்கப்பட்டால், அங்கு வசிக்கும் மக்களின் உரிமைகள் பறிக்கப்படக் கூடாது என்கிறது 2006 இந்திய வன உரிமைச் சட்டம் என்கிறார், தமிழ்நாடு விவசாயிகள் சங்க தேனி மாவட்ட தலைவர் கண்ணன்.

    இது குறித்து அவர் கூறுகையில், மேமகமலை வனப்பகுதியில் மலை மாடுகள் மேய்வதனால் இராமநாதபுரம் மாவட்டத்திற்கு செல்லும் வைகை ஆற்றில் தண்ணீர் தடை படுகிறது என்பதெல்லாம் ஆதாரமற்ற புகார்.‌ வனப்பகுதிகளில் உள்ள மரங்களை வெட்டி அவற்றை பாலைவனமாக மாற்றியதால் தான் மூல வைகையில் நீர் வரத்து குறைந்துள்ளது.‌ மேலும் இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில்  சம்பந்தப்பட்ட மலை மாடுகள் வளர்ப்பாளர்களின் கருத்துக்களை  தமிழக அரசின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் சரியாக முன் வைக்காததால் தான் இந்த தடை உத்தரவு வந்துள்ளது.

    எனவே  தமிழக அரசு மலை மாடுகள் வளர்ப்பாளர்களின் கருத்துக்களை கேட்டறிந்து அவர்களின் வாழ்வதாரம் காத்திட இதனை மேல்முறையீடு செய்திட வேண்டும்.‌ இது தொடர்பாக மாநிலம் முழுவதும் உள்ள மலை மாடுகள் வளர்ப்பாளர்களின் கூட்டம் வருகின்ற மார்ச் 22ஆம் தேதி சேலத்தில் நடைபெறுகிறது. அந்த கூட்டத்தில் மலை மாடுகளை வனப்பகுதிகளில் மேய்ப்பதற்கான அனுமதியை பெற்றுத் தர வேண்டும் என தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாத் தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் தேனி, விருதுநகர், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோயமுத்தூர், ஈரோடு, திருவண்ணாமலை என  மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மற்றும் பிற பகுதிகள் என ஏறக்குறைய 25மாவட்டங்களில் சராசரியாக 20லட்சத்திற்கும் அதிகமான நாட்டு மாடுகள் வளர்க்கப்படுகின்றன.‌ இது தவிர 10க்கும் மேற்பட்ட ஆட்டினங்களும் வளர்க்கப்படுகின்றன. இவை எல்லாம் பெரும்பாலும் மேய்ச்சலுக்கு வனப்பகுதிக்குத் தான் செல்லும்.‌ உயர்நீதிமன்ற கிளையின் இந்த தடை உத்தரவால் அவை எல்லாம் அழியும் நிலைக்குத் தள்ளப்படும்.

    அதோடு ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயம், உழவுப் பணிகளுக்கான காளைகள் பற்றாக்குறை ஏற்படும். மேலும் இன்றைய உர விலை உயர்வை சமாளிப்பதற்கும், மண்ணை ரசாயனக் கலப்பிடம் இல்லாமல் இயற்கை முறையில் சாகுபடி செய்வதற்கு நாட்டு மாட்டின் பங்களிப்பு தவிர்க்க முடியாதது என்றார் ‌தேனி மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் கண்ணன் .

    இந்தியாவின் முதுகெலும்பு விவசாயி என்பர், ஆனால்  விவசாயிகளின் முதுகெலும்பு நாட்டு மாடு. விவசாயம் - நாட்டு மாடு இவை இரண்டும் பிரித்து பார்க்க முடியாத ஒன்று. விவசாயம் காக்கப்பட வேண்டும் என்றால் நாட்டு மாட்டின் இனமும் பாதுகாக்கப்பட வேண்டும். அவை இயற்கையின் வழித்தோன்றலாக வனப்பகுதிகளில் மேய்ச்சலுக்கு அனுமதித்தால் மட்டுமே சாத்தியம் என்பது கால்நடை வளர்ப்பார்களின் கோரிக்கையாக இருக்கிறது.

    சுப.பழனிக்குமார் (தேனி)
    Published by:Arun
    First published:

    Tags: Theni

    அடுத்த செய்தி