தேனி அரசு மருத்துவமனையில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்கள் குவித்து வைப்பு

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்கள்

கொரோனா நோயாளிகளின் உடல் பாதுகாப்பின்றி வைக்கப்பட்டுள்ளது தொடர்பாக விசாரிக்கப்படும் என்று மருத்துவமனை முதல்வர் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  தேனி அரசு மருத்துவமனையில் கொரோனா நோய் தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல் குவித்து வைக்கப்பட்டுள்ளதால் உறவினர்களே சடலங்களை தேடி அடையாளம் காணும் நிலை ஏற்பட்டுள்ளது.

  தமிழகத்தில் கொரோனா 2-வது அலை பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து தினசரி தொற்று எண்ணிக்கை 36,000 என்று இருந்து வந்தது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தளர்வுகளற்ற ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்ட பின் தொற்று பாதிப்பு 30,000-க்கும் கீழ் குறைந்துள்ளது.

  சென்னையில் கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும் மற்ற மாவட்டங்களில் கொரோனாவின் தாக்கம் தீவிரமாக உள்ளது. மேலும் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்தாலும் தினசரி உயிரிழப்பு என்பது 480-க்கு மேல் பதிவாகி வருகிறது.  இந்நிலையில் தேனி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்கள்,  பிரேத பரிசோதனை அறையில் பாதுகாப்பின்றி குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் உறவினர்களே சடலங்களை தேடி அடையாளம் காணும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

  இந்த சம்பவம் தொடர்பாக தேனி அரசு மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதன் கூறுகையில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல் முறையாக பராமரிக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுவதாகவும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
  Published by:Vijay R
  First published: