EGO-வை ஒதுக்கிவிட்டு வேலை பாருங்க - கட்சியினருக்கு ஓபிஎஸ் அட்வைஸ்
EGO-வை ஒதுக்கிவிட்டு வேலை பாருங்க - கட்சியினருக்கு ஓபிஎஸ் அட்வைஸ்
ஓ.பன்னீர்செல்வம்
O. Panner Selvam | நகைக்கடன் தள்ளுபடி செய்து விடுவோம் என ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் மக்களிடம் சொல்லி அவர்களை கடனாளியாக ஆக்கிவிட்டனர் - ஓபிஎஸ்
மக்களை கடனாளியாக ஆக்கிய கட்சி தி.மு.க என தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நடைபெற்ற பரப்புரையில் ஓ.பி.எஸ் பேசியுள்ளார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தலைவருமான ஒ.பன்னீர்செல்வம் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். பெரியகுளம் நீரூற்று பகுதியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ஓ.பி.எஸ், அ.தி.மு.க அரசு கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. ஆனால் தி.மு.க அரசு தேர்தல் நேரத்தில் மக்களை ஏமாற்றி பொய்யான வாக்குறுதிகளை அளித்து தற்போது அதனை நிறைவேற்ற முடியாமல் திணறி வருகிறது. கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு கீழ் நகைக்கடன் பெற்றால் அனைவரது கடன்களையும் தள்ளுபடி செய்து விடுவோம் என ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் மக்களிடம் சொல்லி அவர்களை கடனாளியாக ஆக்கிவிட்டனர்.
50 லட்சம் பேர் நகைக்கடன் வாங்கியதில் 13லட்சம் பேர் தான் பயனாளிகள் என தேர்ந்தெடுத்துள்ளனர். மீதமுள்ளவர்களை ஏமாற்றி விட்டனர். மக்களை கடனாளியாக ஆக்கிய கட்சி தி.மு.க எனக் கூறினார். மேலும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் இருந்த பொருட்கள் தரமற்றதாக இருந்தது. தமிழகத்தில் உள்ள வணிகர்களை புறக்கணித்து விட்டு கமிஷனுக்காக வட மாநிலங்களில் இருந்து பொங்கல் பரிசுப் பொருட்களை தி.மு.க அரசு வாங்கியதாகவும் குற்றம் சாட்டினார்.
தி.மு.க குடும்பத்தினருக்கு சொந்தமாக உள்ள 74 சேனல்களின் மூலம் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் பேசி, பேசி மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெற்றுள்ளனர். சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் இருக்கும் திமுக அரசு மீது மக்கள் கோபமாக உள்ளனர். செல்லும் இடமெல்லாம் மக்கள் சொல்வது இந்த தேர்தல் மட்டுமல்ல அடுத்து வருகின்ற அனைத்து தேர்தல்களிலும் அ.தி.மு.க தான் வெற்றி பெறும் என்கின்றனர். தறிகெட்டு ஓடும் இந்த ஆட்சியை தடுத்து நிறுத்தும் மூக்கனாங்கயிறாக நடைபெறக் கூடிய உள்ளாட்சி தேர்தல் இருக்க வேண்டும். நமக்குள் இருக்கும் சிறு, சிறு பிரச்சனைகளை மறந்து, ஈகோவை விட்டு, விட்டு அதிமுகவினர் நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.” என்றார்.
செய்தியாளர்: பழனிக்குமார் (தேனி)
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.