மாணவியின் படத்தை ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராமில் பரப்பிய இளைஞர்

கைது செய்யப்பட்ட பரசுராமன்

கைதான பரசுராமன் பல பெண்களின் படத்தை மார்பிங் செய்து ரசித்து வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

 • Share this:
  கல்லூரி மாணவியின் படத்தை ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டகிராமில் பரவவிட்ட என்ஜினியரிங் மாணவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த 17 வயது மாணவி பேஷன் டெக்னாலஜி படித்து வருகிறார். இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தை பயன்படுத்தி வந்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் ஆபாசமான படத்தை தன்னுடைய முகத்தை இணைத்து நிர்வாண படமாக பரவிவருவதை கண்டு அந்த கல்லூரி மாணவி அதிர்ச்சியடைந்தார்.

  படம் மார்பிங் செய்யப்பட்டது தொடர்பாக பெற்றோரிடம் மாணவி தெரிவித்துள்ளார். மாணவியின் பெற்றோர் ராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

  ராயப்பேட்டை மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஆண்டனி விசித்ரா தலைமையிலான காவல்துறையினர், மயிலாப்பூர் காவல் மாவட்ட சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினருடன் இணைந்து விசாரணை நடத்தினர். மாணவியின் படத்தை மார்பிங் செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டிருந்த ஐபி முகவரி வைத்து ஆய்வு செய்தனர்.

  ஆய்வில் சேலம் அஷ்தம்பட்டியில் இருந்து பதிவிட்டிருந்தது தெரிந்தது. போலீசார் சேலம் சென்று விசாரணை நடத்தியதில் சேலம் அஷ்தம்பட்டியைச் சேர்ந்த பரசுராமன் (19) என்பது கண்டுபிடிக்கப்பட்டது. ராயப்பேட்டை மகளிர் காவல்துறையினர் பரசுராமனை கைது செய்து சென்னை கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.

  விசாரணையில், கைது செய்யப்பட்ட பரசுராமன், மாணவி தாய்க்கு நெருங்கிய உறவினர் என்பது தெரியவந்தது. இதனை கண்டு புகார் கொடுத்த மாணவியின் பெற்றோருக்கே அதிர்ச்சி ஏற்பட்டது. உறவினரே இது போன்ற சம்பவத்தில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  மேலும் நடத்திய விசாரணையில் பரசுராமன் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் ஆட்டோமொபைல் என்ஜினியரிங் படித்து வருவது தெரிந்தது. அவரது செல்போனை காவல்துறையினர் பறிமுதல் செய்து ஆய்வுக்கு உட்படுத்தியபோது, அதில் பல பெண்களின் படத்தை மார்பிங் செய்து ஆபாச படத்துடன் சேர்த்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. மேலும் ஆபாச வீடியோக்களும் இருந்துள்ளதாக ராயப்பேட்டை மகளிர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மார்பிங் செய்வதற்காக செயலி ஒன்றை வைத்து கொண்டு கைதான பரசுராமன் பல பெண்களின் படத்தை மார்பிங் செய்து ரசித்து வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

  உறவினரான இந்த கல்லூரி மாணவிக்கு இன்ஸ்டகிராமில் முன்னதாக தன்னுடைய படங்களை அனுப்பி பழக பரசுராமன் முயன்றுள்ளார். ஆனால், மாணவி கண்டுகொள்ளவில்லை. இதனால் ஆத்திரத்தில் போலியான கணக்கு ஒன்றை இன்ஸ்டாகிராமில் தொடங்கி அதன் மூலமாக மாணவியின் மார்பிங் படங்களை பரசுராமன் அனுப்பியது விசாரணையில் தெரிந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட செல்போனை ராயப்பேட்டை மகளிர் காவல்துறையினர் சைபர் லேப்பிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

  மேலும் படிக்க...  சசிகலா தேர்தலில் போட்டியா? சிலீப்பர் செல் யார்? : டிடிவி தினகரன் பேட்டி

  கைது செய்யப்பட்ட பரசுராமனை காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
  Published by:Suresh V
  First published: