ஸ்மார்ட் சிட்டி பணிக்காக கோவையில் கட்டப்பட்ட 12 அடி உயர தடுப்பு சுவர் மழை காரணமாக சரிந்து விழுந்தது...!

தடுப்பு சுவர் மழை காரணமாக சரிந்து விழுந்தது

சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக பொக்லைன் இயந்திரம் மூலம் இடிந்த சுவரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கோவை உக்கடம் பெரியகுளத்தின் கரையில் ஸ்மார்ட் சிட்டி பணிக்காக கட்டப்பட்டிருந்த 12 அடி உயர தடுப்புச்சுவர்  50 மீட்டர் நீளத்திற்கு நேற்று இரவு பெய்த மழை காரணமாக இடிந்து விழுந்தது. பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத நிலையில் தரமற்ற பொருட்களால் கட்டுமான பணிகள் நடந்ததே சுவர் இடிய காரணம் என பொது மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளங்கள் அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இதன் ஒரு பகுதியாக உக்கடம் பெரியகுளத்தின் கரையில் அசோக் நகர் பகுதியில் சுமார் 12 அடி உயரத்தில் தடுப்பு சுவர்கள் கடந்த 6 மாதத்திற்கு முன்பு அமைக்கப்பட்டு நடைபாதை அமைக்கப்பட்டது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு பெய்த மழை காரணமாக அசோக் நகர் பகுதியில் கட்டப்பட்டு இருந்த 12 அடி உயர தடுப்புச் சுவர் சுமார் 50 மீட்டர் நீளத்திற்கு இடிந்து விழுந்தது. தடுப்பு சுவர் இடிந்து விழுந்துள்ளது அசோக் நகர் பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சுவர் அமைக்கும் பணி முடிந்து 6 மாதமே ஆகியிருப்பதாகவும், தற்போது சுவர் இடிந்து விழுந்து இருப்பது கட்டுமான பணிகள் தரம் குறைந்தவையாக இருப்பதை காட்டுவதாகவும், ஏற்கனவே கட்டுமான பணிகள் தரமற்றவையாக இருப்பதாக மாநகராட்சி யில் புகார் அளித்துள்ளதாகவும் அந்த பகுதியை சேர்ந்த சாதிக் என்பவர் குற்றம்சாட்டினார்.

Also read... தமிழகத்தில் அரியர் தேர்வுகள் நடத்தப்படும் - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்...!

நேற்று இரவு பெய்த மழையில சுவர் இடிந்து விழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது எனவும், வழக்கமாக சுவரின் அருகில் உள்ள மைதானத்தில் குழந்தைகள் விளையாடி கொண்டு இருப்பார்கள் எனவும், ஆட்கள் நடமாட்டம் இருந்து கொண்டு இருக்கும் எனவும் இரவு நேரத்தில் சுவர் இடிந்து விழுந்தால் பெரும் விபத்து தவிர்க்கபட்டு இருப்பதாக அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் தெரிவிக்கின்றனர். சுவரின் உயரத்தை குறைத்தால் நல்லது எனவும், சுவர் பாதுகாப்பு என நினைத்து இருந்ததாகவும் இப்போது பயமாக இருப்பதாகவும் தெரிவிக்கும் அப்பகுதி பெண்கள் சுவரின் உயரத்தை குறைக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். சின்ன மழைக்கே இப்படி சரிந்தால் பெரிய மழை பெய்தால் பாதிப்பு அதிகமாக இருக்கும் எனவும் அச்சம் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக பொக்லைன் இயந்திரம் மூலம் இடிந்த சுவரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். குடியிருப்பு பகுதியின் அருகில் சுவர் இடிந்து விழுந்த சம்பவம் அசோக் நகர் பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: