முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கடந்த 1991ம் ஆண்டு மே 21ம் தேதி
சென்னை அருகேயுள்ள ஸ்ரீபெரும்புதூரில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பேரறிவாளன் முருகன், நளினி, சாந்தன், ராபர்ட் பயாஸ் உள்ளிட்ட ஏழு பேர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டனர். இது தொடர்பான வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்டோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
இந்த வழக்கில் 31 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள பேரறிவாளன் தன்னை விடுதலை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. அப்போது, ஆளுநர் முடிவு எடுக்காமல் காலதாமதப்படுத்தியதற்கு முன்னமே உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், அரசியல் சாசனப்பிரிவு 142 கீழ் பேரறிவாளனை விடுதலை செய்ய உத்தரவிட்டு தீர்ப்பளித்தது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை அடுத்து தமிழக அரசியல் தலைவர்கள், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் உள்ளிட்ட பலர் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை வரவேற்று உள்ளனர். பேரறிவாளன் இல்லத்தில் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தீர்ப்பு என் தாயின் நீண்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று பேரறிவாளன் நெகிழ்ச்சி உடன் தெரவித்தார்.
Also Read : பேரறிவாளன் விடுதலைக்கு வழிவகுத்த சட்டப் பிரிவு 142 கூறுவது என்ன?
இதனிடையே இந்த தீர்ப்பு குறித்து பேரறிவாளன் வழக்கறிஞர் பிரபு நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது, இந்த வழக்கின் தீர்ப்பின் மூலம் ஆளுநர் பொறுப்பில் இருப்பவர்கள் தங்களுக்கு இல்லாத பதவியை இருப்பதாக நினைப்பதை கட்டுப்படுத்தும். பேரறிவாளன் தீர்ப்பு இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற 6 பேருக்கும் பொருந்தும். தீர்ப்பு குறித்த முழு விவரம் பெற்ற பின்பு தான் மற்ற சட்டநடவடிக்கை தெரியவரும். இந்த தீர்ப்பின் மூலம் கருணை மனு மீதான முடிவை ஆளுநர், குடியரசு தலைவர் விரைந்து முடிவெடுக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்றும் தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.