விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாரம்பரிய கலைகளையும், விவசாயத்தின் மகத்துவத்தையும் பறைசாற்றும் வகையில் புதுக்கோட்டையில் சிலைகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.
நாடு முழுவதும் செப்டம்பர் 2-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த துவரடிமனை கிராமத்தில் பிரத்யேக விநாயர் சிலைகளை செய்யும் பணிகளில் 50-க்கும் மேற்பட்ட கைவினை கலைஞர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு, கஜா புயலால் புதுக்கோட்டை மாவட்டம் பெரும் பேரழிவை சந்தித்த நிலையில், ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. இழந்த மரங்களை மீட்கும் முயற்சியாக, களிமண்ணுடன் பலவகையான விதைகளைக் கலந்து சிலையை உருவாக்கி வருகின்றனர். இதன் மூலம் பசுமையை நிலைநாட்ட ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளதாக பெருமிதம் தெரிவித்துள்ளனர்.
ஜல்லிக்கட்டு காளைகளை விநாயகர் அடக்குவது, விவசாய நிலங்களில் ஏர் உழுவது, சிங்கம் மற்றும் குதிரை வாகனங்களில் அமர்ந்திருப்பது போன்ற விநாயகர் சிலைகள், இறுதி வடிவம் பெற்றுள்ளன. தாங்கள் விரும்பும் வகையில் சிலைகள் உருவாக்கப்படுவதாக வாடிக்கையாளர் கூறியுள்ளனர்.
விநாயகர் சிலையின் உயரம் மற்றும் வேலைப்பாடுகளின் அடிப்படையில் சிலை செய்ய மூன்று முதல் 10 நாட்கள் வரை ஆகும் என கைவினைக் கலைஞர்கள் தெரிவித்துள்ளனர். விநாயகர் சதுர்த்தி நெருங்கிவிட்டதால் இரவு பகல் பாராமல் தீவிரப் பணியில் ஈடுபட்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். இத்தொழிலை ஊக்கப்படுத்த வங்கியில் வட்டியில்லா கடனுதவி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் துவரடிமனை கிராமத்தில் இருந்து விநாயகர் சிலைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 15 அடி உயரம் வரை சிலைகள் அமைக்கப்படுவதால் அதன் தரத்திற்கு ஏற்ப 500 ரூபாய் முதல் 15,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக சிலை வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Also see...
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.