திருவெற்றியூரில் அமைக்கப்படும் புதிய மீன்பிடி துறைமுக பணிகளை மீன்வளத்துறை தொடரலாம் என தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை திருவொற்றியூரில் உரிய சுற்றுச்சூழல் அனுமதியின்றி மீன்வளத்துறை அமைத்துவந்த மீன்பிடி துறைமுக பணிகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இடைக்கால தடை விதித்திருந்தது.
எம்.ஆர்.தியாகராஜன் என்பவர் தொடுத்த வழக்கில் உரிய சுற்றுச்சூழல் அனுமதி பெறும் வரை கட்டுமானப் பணிகளை தொடரக் கூடாது என விதிக்கப்பட்ட தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.
கடந்த ஆகஸ்ட் மாதம் மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் துறைமுக பணிக்கு சுற்றுச்சூழல் அனுமதியை பெற்று விட்டதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் சமர்ப்பித்த அறிக்கையை ஏற்று துறைமுக கட்டுமான பணிகளை தொடர தீர்ப்பாயம் அனுமதியளித்துள்ளது.
அனுமதியில்லாமல் நடந்த கட்டுமானப் பணிகளால் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஆராய்ந்து வசூலிக்கப்பட வேண்டிய அபராதர் தொகைதை மதிப்பிட அண்ணா பல்கலைக் கழக நிபுணர் ஒருவரை நியமித்து வழக்கை அடுத்த கட்ட விசாரணைக்காக அக்டோபர் 28ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன் மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சாய்பால் தாஸ்குப்தா அமர்வு உத்தரவு.
காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் நிலவி வரும் நெரிசலைக் குறைக்கவும், சூரை மீன், இறால் உள்ளிட்ட ஆழ்கடல் மீன்பிடித் தொழிலை மேம்படுத்தவும் புதிய மீன்பிடித் துறைமுகத்தை அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது.
திருவொற்றியூரில் ரூ. 242 கோடி மதிப்பீட்டில் ஆழ்கடல் மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி 2018 ஜூன் 6 -ஆம் தேதி சட்டப் பேரவையில் வெளியிட்ட அறிவிப்பு மீனவர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது.
திருவொற்றியூர் பட்டினத்தார் கோயில் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு, புதிய மீன்பிடித் துறைமுகம் அமைப்பது குறித்த பொதுமக்கள் கருத்து கேட்கும் கூட்டம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் திருவொற்றியூரில் அப்போதைய சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீதாலட்சுமி தலைமையில் நடைபெற்றது. இந்த துறைமுகமானது 500 முதல் 800 படகுகள் நிறுத்தும் அளவிற்கும் 60,000 டன் மீன்களைக் கையாளும் வகையிலும் வடிவமைக்கப்பட்டது.
இந்த துறைமுகம் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் மற்றும் கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அனுமதிகோரி மீன்வளத்துறையானது தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையிடம் விண்ணப்பித்திருந்தது. ஆனால், கடலோர ஒழுங்காற்று மண்டல அனுமதியை மட்டும் பெற்று விட்டு சுற்றுச்சூழல் அனுமதி பெறும் முன்னரே துறைமுக கட்டுமானப் பணிகளை மீன்வளத்துறை தொடங்கியது.
இதன் காரணமாக திட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் கே ஆர் செல்வராஜ் என்பவர் வழக்கு தொடுத்திருந்தார். ஆவணங்களின் அடிப்படையில் இத்திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்காத காரணத்தினால் துறைமுகம் கட்டும் பணியை அப்படியே நிறுத்தி வைக்கவும் மாசு கட்டுப்பாடு வாரியம், தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம், கடற்கரை ஒழுங்குமுறை மண்டல ஆணையம் ஆகியோர் கொண்ட குழு நேரில் ஆய்வு செய்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் பிப்ரவரி மாதம் தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கின் விசாரணை இன்று நடந்தபோது இத்திட்டத்திற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கி விட்டதால் துறைமுக கட்டுமானப் பணிகளைத் தொடர அனுமதி வழங்க வேண்டும் என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் மணிகோபி வாதிட்டார்.
மேலும் இன்று சமர்ப்பிக்கப்பட்ட நிபுணர் குழு அறிக்கையில் அனுமதியில்லாமல் நடைபெற்ற துறைமுக கட்டுமானப் பணிகளால் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஆராய மேலும் ஒரு நிபுணரை குழுவில் சேர்க்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதனை பரிசீலித்த தீர்ப்பாயம் அண்ணா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவரை நிபுணர் குழுவில் இணைக்கவும் துறைமுக கட்டுமான பணிகளை தொடரவும் அனுமதி வழங்கி வழக்கின் விசாரணையை அக்டோபர் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: National Green Tribunal