பேராசையின் காரணமாக ரூ.6.5 கோடி பணத்தை இழந்த பாண்டிச்சேரி முன்னாள் அமைச்சரின் மருமகன் மற்றும் அவரது நண்பர்கள்.
பாண்டிச்சேரியை சேர்ந்தவர் பிரவீன் அலெக்சாண்டர்(31) பாண்டிச்சேரி என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் உள்துறை அமைச்சரான பன்னீர்செல்வத்தின் மருமகனான பிரவீன் அலெக்சாண்டர், பில்டராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த 4ஆம் தேதி மாலை பெரியமேடு காவல் நிலையத்தில் பிரவீன் அலெக்ஸாண்டர் மற்றும் அவரது நண்பர்களான ஆவின் பாலக டீலரான கௌதம்(29), முந்திரி, பாதாம், பிஸ்தா மொத்த வியாபார டீலரான கணேச குமார் ஆகியோர் புகார் ஒன்றை அளித்தனர்.
அப்புகாரில் தங்கம் வாங்கித் தருவதாக கூறி தங்களிடம் சென்னையை சேர்ந்த நான்கு நபர்கள் ரூ.6.5 கோடி பணம் வாங்கி மோசடி செய்ததாகவும், பாலாஜி மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரியான அவரது தந்தை துளசிதாஸ்(59) இவர்களுக்கு உடந்தையாக இருந்த சூளைப் பகுதியை சேர்ந்த மகேஷ்(45), மாதவரம் பகுதியை சேர்ந்த ஜெயகிருஷ்ணன் (43) ஆகிய நான்கு நபர்களையும் கைது செய்து தங்களது பணத்தை மீட்டு தரும்படி புகாரில் தெரிவித்தனர்.
இதனையடுத்து நால்வரையும் பெரியமேடு போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தபோது, புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்தவரான பாலாஜி(34) தங்கம், வெள்ளி, கார், செல்போன் ஆகியவற்றை பில் இல்லாமல் வாங்கி விற்பனை செய்து வரும் தொழில் செய்து வருகிறார் என்பதும் இவரிடம் பில் இல்லாமல் குறைந்த விலைக்கு தங்கம் வாங்கிகொள்ள நினைத்து பிரவீண் அலெக்ஸாண்டர் மற்றும் அவரது நண்பர்கள் பணத்தை இழந்துள்ளார்கள் என்பதும் தெரியவந்தது.
மேலும், பாலாஜியின் தந்தை துளசிதாஸ் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியாற்றி வருவதாகவும், அவருக்கு சாஸ்திரி பவனில் சுங்கத்துறை அதிகாரிகளிடம் நன்கு பழக்கம் இருப்பதாகவும் விமான நிலையத்தில் பிடிபடும் தங்கத்தை தனக்கு குறைந்த விலைக்கு தருவதாகவும் கூறி மோசடி நாடகத்தை இவர்கள் அரங்கேற்றியுள்ளனர்.
இதனடிப்படையில் முதலில் பிரவீன் அலெக்சாண்டர் மற்றும் அவரது நண்பர்கள் ரூபாய் 6 லட்சம் பணம் கொடுத்து அதற்கான தங்கத்தை பாலாஜியிடமிருந்து பெற்றுள்ளனர். பின்னர் பாலாஜி அவரது தந்தை துளசிதாஸ் மற்றும் மோசடி கூட்டாளிகளான மகேஷ், ஜெயகிருஷ்ணன் ஆகியோர் தங்களிடம் பல கோடி மதிப்பிலான தங்கம் சிக்கி உள்ளதாகவும் ரூபாய் 6.5 கோடி கொடுத்தால் மொத்த தங்கத்தையும் தந்து விடுவதாகவும் பிரவீண் அலெக்சாண்டர் மற்றும் அவரது நண்பர்களிடத்தில் கூறியுள்ளனர்.
இதனால் பிரவீண் அலெக்ஸாண்டர் மற்றும் அவரது நண்பர்கள் குறைந்த பணத்தில் அதிக அளவில் தங்கம் வாங்கும் அதீத ஆசையால் 6 கோடி பணத்தை பாலாஜியிடம் கொடுத்துள்ளனர். மேலும் ரூபாய் 50 லட்சம் பணத்தை பெரியமேடு பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் வைத்து கொடுத்துள்ளனர்.
பணம் கொடுத்து பல மாதங்கள் ஆகிய நிலையில் தங்கத்தையும் கொடுக்காமல் பணத்தையும் திரும்ப தராமல் பாலாஜி மற்றும் அவரது கூட்டாளிகள் ஏமாற்றி வந்துள்ளனர்.
Also read... நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி வருகிறோம்: தமிழக அரசு!
அப்போதுதான் பாண்டிச்சேரியின் முன்னாள் அமைச்சர் மருமகன் பிரவீன் அலெக்சாண்டர் பணம் சம்பாதிக்கும் பொருட்டு பேராசையின் காரணமாக தாங்கள் ஏமாற்றப்பட்டு இருப்பது தெரியவந்தது. மேலும் போலீசாரின் விசாரணையில் பாலாஜியின் தந்தை துளசிதாஸ் உண்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரி இல்லை என்பதும் ஐ.ஏ.எஸ் அதிகாரி போல் நடித்து பிரவீன் அலெக்சாண்டர் உட்பட நான்கு நபர்களிடமும் இருந்து பணத்தை மோசடி செய்துள்ளார் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து பாலாஜி ஐ.ஏ.எஸ் அதிகாரியாக நடித்த அவரது தந்தை துளசிதாஸ் இவர்களது நண்பர்களான மகேஷ் மற்றும் ஜெயகிருஷ்ணன் மீது மோசடி மற்றும் நம்பிக்கை மோசடி உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நான்கு நபர்களையும் சிறையில் அடைத்துள்ளனர். மேலும் பணத்தை இழந்த பிரவீன் அலெக்சாண்டர் மற்றும் அவரது நண்பர்களுக்கு பணத்தை மீட்டுத் தரும் முயற்சியில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.