கடந்த 10 மாத உழைப்பின் வெளிப்பாடு நாளை தாக்கல் செய்யப்படவுள்ள நிதி நிலை அறிக்கையில் தெரியவரும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, நாளை தாக்கலாக உள்ள நிதி நிலை அறிக்கை குறித்த எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஓ.பன்னீர்செல்வம் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்திருந்தார். முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்த பிறகு இடைக்கால நிதி நிலை அறிக்கை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், நடப்பு ஆண்டுக்கான 2022-23 முழுமையான நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளதால் மிகப்பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ள அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வரி மறுசீரமைப்பு, சமூக நல திட்டங்கள், யாருக்கு பலன்கள் கிடைக்க வேண்டுமோ அவர்களுக்கு பலன்கள் கிடைக்கும் என்று நிதிநிலை அறிக்கை குறித்த தனது கருத்துகளை தொடர்ந்து தெரிவித்து வருகின்றார். அதன் வெளிப்பாடு நிதி நிலை அறிக்கையில் எதிரொலிக்கும் என கூறப்படுகின்றது.
ALSO READ | டீசல் திருட்டு கும்பல் அட்டூழியம் ... தட்டிக்கேட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் மீது தாக்குதல்
தமிழ்நாடு அரசு பத்திரப்பதிவு, வணிக வரி, மதுபானம் உள்ளிட்ட வருவாயை பெருமளவு நம்பியுள்ளது. 2017க்கு பின் இதுவரை இல்லாத அளவிற்கு தமிழ்நாடு அரசு வரிவசூலாக 93,000கோடி ரூபாய் வருவாய் எட்டியுள்ளது. இம்மாதம் இறுதியில் 1 லட்சத்து 5000 கோடியாக வரிவசூல் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வணிகவரி வருவாயை பெருக்கும் வகையில் புதிய திட்டங்கள் ,அறிவிப்புகள் நிதி நிலை அறிக்கையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரி சீரமைப்பு என்பதற்கான முன்னறிவிப்பாக திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மதுபானம், பாலினால் தயாரிக்கப்பட்ட பொருட்களின் விலை சற்று உயர்த்தப்பட்டுள்ளது.
அதேசமயம், மகளிர் உரிமைத்தொகை, மக்களை நேரடியாக பாதிக்காத வகையிலான வரி சீரமைப்பு, சமூக நல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு, மாதந்தோறும் மின் கட்டணம் நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நிதி நிலை குறித்த எதிர்பார்ப்புகளுக்கு பதிலளிக்கும் வகையில், அறிவிப்புகள் இருக்க போகிறதா என்பது குறித்து நாளை தெரியவரும். அனைத்து துறைகளும் சரிவிகித அளவில் வளர்ச்சி எட்ட வேண்டும் என்பதை அடிப்படையாக கொண்டு திட்டங்களின் அறிவிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.
கடந்த 10 மாத உழைப்பின் வெளிப்பாடு நாளை தெரியவரும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருப்பது, எந்த வகையில் மக்களுக்கு நேரடியாக பயனளிக்க போகிறது நாளை தெரியும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.