எழுவர் விடுதலை... எம்.டி.எம்.ஏ பிரிவுக்கு என்ன தொடர்பு.?. புதிய தகவல்கள்

எழுவர் விடுதலை... எம்.டி.எம்.ஏ பிரிவுக்கு என்ன தொடர்பு.?. புதிய தகவல்கள்

சிறையில் உள்ள 7 பேர்

எழுவர் விடுதலை குறித்து தமிழக அரசு அனுப்பிய பரிந்துரை மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

 • Last Updated :
 • Share this:
  முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 29 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்துவரும் பேரறிவாளனின் விடுதலைக்கும், எம்.டி.எம்.ஏ எனப்படும் பல்நோக்கு விசாரணைக்குழுவிற்கும் என்ன தொடர்பு?

  தனது மகன் விடுதலையாகவேண்டும் என பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் பலகட்ட போராட்டங்களை மேற்கொண்டுவருகிறார். ஏழுவரையும் விடுவிக்க வேண்டும் என தமிழக அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தின் மீது ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ஆளுநர் முடிவெடுக்காமல் நிலுவையில் வைத்துள்ளார்.

  கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் வழங்கக்கோரி அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையின் போது, எழுவர் விடுதலை குறித்து தமிழக அரசு அனுப்பிய பரிந்துரை மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

  இவ்வழக்கில் சர்வதேச தொடர்புகள் குறித்து விசாரித்துவரும் எம்.டி.எம்.ஏ எனப்படும் பன்னோக்கு விசாரணை முகமையின் அறிக்கைக்காகக் காத்திருப்பதாக ஆளுநர் செயலகம் தெரிவித்துள்ளது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது எம்.டி.எம்.ஏ எனப்படும் பன்னோக்கு விசாரணை முகமையின் அறிக்கைக்கும், பேரறிவாளன் விடுதலைக்கும் என்ன தொடர்பு? எழும் கேள்விகள் என்ன?

  இந்த வழக்கில் A1, A2, A3 எனக்குறிப்பிட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன், பொட்டு அம்மன், அகிலா ஆகியோரின் பெயர்களை தனியாக பிரித்து வழக்கு எண் 11/92 என தனி வழக்காக சிபிஐ பதிவு செய்தது. மீதமுள்ள நளினி, முருகன், பேரறிவாளன் ஆகிய 26 பேர்களை பிரித்து வழக்கு எண் 3/98 என தனி வழக்காக CBI பதிவு செய்தது.

  A1, A2, A3 ஆகியோரின் வெளிநாட்டு தொடர்பு குறித்த வழக்கு எண் 11/92 என்ற வழக்கு மட்டும்தான் MDMA விசாரணைக்கு பொருந்தும் என CBI தெரிவித்தது. வழக்கு எண் 11/98-ற்கான வெளிநாட்டு தொடர்பு, வெடிகுண்டு எங்கிருந்து வந்தது ஆகியவை குறித்த பரந்துபட்ட விசாரணையில் திரட்டிய விபரங்களை சீலிட்ட கவரில் 3 மாதங்களுக்கு ஒரு முறை தடா நீதிமன்றத்தில் MDMA தாக்கல் செய்துவருகிறது.

  2013 செப்டம்பரில், தனது விடுதலைக்கு உதவலாம் என கருதிய பேரறிவாளன், MDMA தாக்கல் செய்த சீலிடப்பட்ட கவர்களை பிரித்து ஆவணங்களை முறையாக ஆராய வேண்டும் என வழக்கு தொடுத்தார். அந்த வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த பதில் மனுவில், பேரறிவாளனுக்கும், MDMA வின் விசாரணைக்கும் சம்பந்தம் இல்லை என சிபிஐ காட்டமாக பதில் அளித்திருந்தது.

  சட்டத்தின் படி, வழக்கு எண் 3/92 -ன் கீழ் விசாரணை முடிவுற்று, அதன் அடிப்படையில் பேரறிவாளன் தண்டனை பெற்றுள்ளார் என சிபிஐ விளக்கம் அளித்தது. வழக்கு எண் 11/92- தொடர்பான விசாரணையில் தலையிட பேரறிவாளனுக்கு எந்த முகாந்திரமும் கிடையாது என்ற சிபிஐயின் விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், பேரறிவாளனின் மனுவை தள்ளுபடி செய்தது.

  இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பேரறிவாளன் தாக்கல் செய்த இரண்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், 2017ல் உச்ச நீதிமன்றத்தை அவர் நாடினார். அன்றைய தேதி வரை MDMA விசாரித்த விபரங்களை 4 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய CBI க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

  அந்த நிலையில்தான், பேரறிவாளனிடம் வாக்குமூலம் பெற்ற CBI விசாரணை அதிகாரி தியாகராஜன் தாக்கல் செய்த மனுவில், பேரறிவாளனிடம் வாக்குமூலம் பெற்ற போது சில வார்த்தைகளை பதிவு செய்ய தவறிவிட்டேன் என்று கூறியிருந்தார். எதற்காக பேட்டரி வாங்கி வர சொன்னார்கள் என்பது எனக்கு தெரியாது என்கின்ற பதத்தை விட்டு விட்டேன் அதை நான் முறையாக பதிவு செய்யவில்லை, மேலும் பேரறிவாளனுக்கு கொலை சதி பற்றி தெரிந்து இருக்க வாய்ப்பில்லை எனவும் தியாகராஜன் தெரிவித்திருந்தார்.

  இது தொடர்பான மூல வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆம் தேதி MDMA ஒரு பதில் மனுவை தாக்கல் செய்தது. ஆனால் ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன் தாக்கல் செய்த அதே தரவுகளை மீண்டும் தாக்கல் செய்துள்ளதாக உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.

  மேலும் MDMA வின் இந்த விசாரணை முடிவிற்கு வருவதற்கான வாய்ப்புகள் இல்லை, அதற்கான அறிகுறியே இல்லை எனக்கூறிய உச்ச நீதிமன்றம் இவர்களின் விடுதலை குறித்த தீர்மானம் என்னவாயிற்று என கேள்வி எழுப்பியிருந்தது. தாங்கள் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி விட்டதாகவும், தங்களால் தற்போது ஒன்றும் செய்ய இயலாது எனவும் 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் தேதி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது.

  கடந்த் மார்ச் மாதம் உச்சநீதிமன்றத்தில் ஆஜரான சட்ட அமைச்சர் CV சண்முகம், MDMA வின் இறுதி அறிக்கைக்காக ஆளுநர் காத்திருப்பதாக தெரிவித்திருந்தார். கொரோனா பெருந்தொற்று காரணமாக உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வராமல் நிலுவையில் இருக்கிறது. வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தபோதும் மீண்டும் அதே பதிலை, தமிழக அரசு கூறியுள்ளது

  இந்த வழக்கில் விரிவான பதில் மனுவை ஆகஸ்ட் 3 ஆம் தேதியன்று தமிழக அரசு தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது. அந்த மனுவில், எழும் இந்த கேள்விகளுக்கு விடை கிடைக்குமா? தெளிவு பிறக்குமா?

  MDMA எனப்படும் பல்நோக்கு விசாரணை முகமை இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளான பிரபாகரன், பொட்டு அம்மன், அகிலோ ஆகியோரின் வெளிநாட்டு தொடர்புகள் குறித்து மட்டுமே விசாரித்து வருகிறது என்பது சிபிஐ தரப்பின் வாதம்.

  இந்த நிலையில், நமக்கு கிடைத்திருக்கும் நீதிமன்ற ஆணவங்கள் MDMA விசாரணைக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் தொடர்பான வழக்கிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

  MDMA விசாரணை குறித்து பேச பேரறிவாளனுக்கு முகாந்திரம் இல்லை. MDMA செயல்படுவதற்கான அறிகுறி இல்லை என உச்சநீதி மன்றம் அதிருப்தி வெளியிட்ட நிலையில் மீண்டும் MDMAவின் இறுதி அறிக்கைக்காக காத்திருப்பது சரியா?
  Published by:Vijay R
  First published: