அரசு மருத்துவக்காப்பீட்டு திட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 2,368 கோடி வீணானதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மூலமாக கட்டணமில்லாமல் வழங்குவதற்காகவும், அனைவருக்கும் சுகாதார வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் தமிழக அரசால் தொடங்கப்பட்ட முதலமைச்சர் காப்பீட்டு திட்டம் மூலமாக அரசின் சார்பில் காப்பீட்டு நிறுவனங்களுக்கு காப்பீடு செய்யப்பட்டு மக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் கடந்த 10 நிதி ஆண்களில் எவ்வளவு ரூபாய் காப்பீடு செய்யப்பட்டுள்ளது எவ்வாறு ரூபாய் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்து மதுரையை சேர்ந்த தரவுகள் அமைப்பின் நிறுவன தலைவர் ஆனந்தராஜ் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியுள்ளார். அதில் வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் மோசடி நடந்துள்ளதாக சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2009-10 நிதியாண்டு முதல் 2020-22 (அக்டோபர் 2021 வரை) நிதியாண்டுகள் வரையிலான 13 ஆண்டுகளில் அரசு அரசு காப்பீட்டுத் திட்டத்துக்கு அரசு செலுத்திய தொகை ரூ.10,706 கோடி. அதில் தனியார் மருத்துவமனைகள் ரூ.5,736 கோடிகளும், அரசு மருத்துவமனைகள் ரூ.2602 கோடிகள் என்று மொத்தமே சுமார் ரூ.8338 கோடிகள் மட்டுமே மக்கள் சேவைக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. மீதம் ரூ.2368 கோடிகள் ரூபாய் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு வருமானமாக சென்று சேர்ந்துள்ளது.
2009-10 முதல் 2021 அக்டோபர் மாதம்வரை தமிழக அரசு இன்சூரன்ஸ் கம்பெனிக்கு செலுத்திய மொத்த காப்புறுதி நிதி(Premium) மற்றும் அரசு தனியார் மருத்துவமனைகள் பயன்படுத்திய நிதி விபரம் மற்றும் பயன்படுத்தாமல் இன்சுரன்ஸ் கம்பெனிக்கு சென்ற மொத்த நிதி விபரங்கள்… 2016-17 ஆண்டுகள் வரை ரூ.928 கோடிகள்வரை ப்ரீமியம் செலுத்தப்பட்டு அதில் ரூ.850 கோடிகளுக்கு பயன்படுத்தப்பட்டு சுமார் 5 லிருந்து 10 சதவீதம்வரை இன்சுரன்ஸ் கம்பெனிக்கு வருமானமாக சென்ற நிலையில் அடுத்த 2017-18 காலகட்டத்தில் இன்ஷூரன்ஸ் கம்பெனிகளுக்கு ஒரேயடியாக 1,773 கோடி ரூபாய் வரை பீரிமியமாகச் செலுத்தப்பட்டுள்ளது.
இது முந்தைய ஆண்டைவிட 845 கோடி ரூபாய் அதிகம். இதில், சுமார் 900 கோடி ரூபாய் இன்ஷூரன்ஸ் கம்பெனிகளுக்கு வருமானமாக சென்று சேர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்று வைத்துக் கொண்டாலும், முந்தைய ஆண்டில் இருந்த மொத்த நோயாளிகள் எண்ணிக்கையிலிருந்து அதிகபட்சமாக 10% வரை மட்டும் அதிகரித்திரிக்க வாய்ப்புள்ளது என்பது மருத்துவத்துறையைச் சேர்ந்தவர்களின் கணிப்பு.
அப்படியிருக்க, ஒரேடியாக ரூ.800 கோடிகள் வரை அதிகப்படுத்தி, அதாவது 90% அளவுக்கு கூடுதல் தொகை பிரிமியமாக தனியார் நிறுவனங்களுக்குச் செலுத்தப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.
கடந்த 13 ஆண்டுகளில் அரசு காப்பீட்டு திட்டத்தில் பொதுமக்களுக்கு சிகிச்சை வழங்கியதற்காக பயன்படுத்தியது போக தனியார் மருத்துவமனைகளுக்கு கிட்டத்தட்ட 3,000 கோடிகளுக்கு மேல் லாபமாக சென்றிருக்கவே அதிக வாய்ப்புள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்த நிதியைக் கொண்டே எய்ம்ஸ் தரத்தில் இரண்டு மருத்துவமனைகளை தமிழக அரசே நிறுவியிருக்கலாம் அல்லது மல்ட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி தரத்தில் மாவட்டத்துக்கு ஒன்று என்று அதிநவீன மருத்துவமனைகளை அரசே நிறுவியிருக்க முடியும்.
பல்லாயிரம் பேருக்கு அரசு வேலையை உறுதிப்படுத்தியும் இருக்கமுடியும். அவை அரசின் நிரந்தர சொத்தாகவும் மாறியிருக்கும்” என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
Also read... மெரினாவிலிருந்து காந்தி சிலை இடமாற்றம் - மெட்ரோ பணிகளுக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை
எனவே, இதில் பெரிய அளவில் மோசடி நடைபெற்றுள்ளதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக கூறப்படும் நிலையில், முதலமைச்சரின் தலைமையில் குழு அமைத்து கடந்த 4 ஆண்டுகளில் அரசு மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு செலுத்திய ப்ரீமியம் தொகை குறித்து விரிவான கணக்கு தணிக்கை செய்யப்பட்டு ஊழல் முறைகேடுகளை கண்டறிந்து சரி செய்ய வேண்டும் எனவும் அரசு மருத்துவ காப்பீட்டு நிதிகளை பெருமளவு அரசு மருத்துவமனைகள் பயன்படுத்துவதற்கு தனி கண்காணிப்பு குழு அமைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
-செய்தியாளர்: ஹரிகிருஷ்ணன். இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.