வெளிநாட்டில் வேலை என மோசடி செய்த கும்பலை விரட்டிப் பிடித்த பொதுமக்கள்

வெளிநாட்டில் வேலை என மோசடி செய்த கும்பலை விரட்டிப் பிடித்த பொதுமக்கள்

 • Share this:
  வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சென்னையில் மோசடி செய்த கும்பலை பேருந்து, ரயில், விமான நிலையம் என 5 குழுக்களாகப் பிரிந்து சென்று பாதிக்கப்பட்ட பொது மக்களே பிடித்து கோயம்பேடு காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். மேசடியில் ஈடுபட்ட இருவர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி அவர்களை சிறையில் அடைத்னர்.

  இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், ஒரிசாவைச் சேர்ந்த ராஜூ என்பவர் அம் மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 50 பேருக்கு மலேசியாவில் கட்டட வேலை வாங்கி தருவதாகக் கூறி அவர்களை விசாகப்பட்டினத்ற்கு வரவழைத்து, முன்பணமாக அவர்களிடம் இருந்து சுமார் 10 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளார். இதன்பின்னர் மலேசியாவுக்குச் செல்வதற்கான முழு தொகையான 50 ஆயிரத்தில் மீதமுள்ள 40 ஆயிரம் ரூபாயை விசா கிடைத்த பின்னர் கொடுத்தால் போதும் என்று கூறியுள்ளார்.

  இந்நிலையில், விசா தயாராகிவிட்டதாகக் கூறி 50 பேரையும், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் சென்னைக்கு வரவழைத்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை அருகில் உள்ள ஓர் தனியார் ஓட்டலில் தங்க வைத்துள்ளார். பின்னர், அந்த ஹோட்டலுக்கு ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த சுப்ராத் குமார் போலோ என்பவருடன் வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல், 50 பேருக்கும் மலேசியாவுக்கு போலி விசாக்களைக் கொடுத்துள்ளனர்.

  பின்னர் அனைவரிடமிருந்தும் தலா 40 ஆயிரம் ரூபாயை வாங்கிக் கொண்டு, காலை 9 மணிக்கு விமான நிலையத்தில் தயாராக இருக்குமாறு கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். இந்நிலையில், ஏற்கெனவே வெளிநாடுகளுக்கு சென்று  வந்த ராஜேஷ் குமார் மதன் என்பவர், அந்த விசாவில் உள்ள பார்கோடை அருகில் இருந்த இன்டர்நெட் மையத்தில் பரிசோதித்துப் பார்த்தபோது அது போலியானது என தெரியவந்துள்ளது.

  பின்னர், சுப்ராத் குமார் போலோவை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, செல்போன் அனைத்து வைக்கப்பட்டிருந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் 50 பேரும் 5 குழுக்களாகப் பிரிந்து தியாகராய நகர் பேருந்து நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம், எக்மோர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையம், விமான நிலையம் என தேடியுள்ளனர். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஒரு குழு தேடிக் கொண்டிருந்தபோது சுப்ராத் குமார் போலோ உட்பட ஐந்து நபர்கள் பெங்களூருக்குத் தப்பிச் செல்ல இருந்ததை கண்டுபிடித்துள்ளனர். அவர்களைப் பிடிக்க முயன்றபோது, மூவர் தப்பி ஓடிவிட்ட நிலையில் ராஜேஷ்குமார் பாண்டா , தினேஷ் பட்ரா என இருவர் மட்டுமே பிடிபட்டனர்.

  அவர்களை அருகில் இருந்த கோயம்பேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.  விசாரணை நடத்தி, அவர்கள் மீது மோசடி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவர்களை சிறையில் அடைத்துள்ளனர். மேலும் தப்பிச் சென்று பதுங்கியுள்ள மூவரையும் தேடிவருகின்றனர்.
  Published by:Suresh V
  First published: