• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கொரோனா களத்தில் போராடும் காவல்துறை - 1500 போலீசாருக்கு தொற்று பாதிப்பு

கொரோனா களத்தில் போராடும் காவல்துறை - 1500 போலீசாருக்கு தொற்று பாதிப்பு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தமிழகம் முழுவதும் காவல் துறையைச் சேர்ந்த சுமார் 1500 பேருக்கு கொரோனா தொற்று பரவியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
    உலகம் முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா, நெருக்கடியிலும் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வரும் காவல் துறையினர் மத்தியிலும் தீவிரமாக பரவிவருகிறது. சென்னையில் மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த பாலமுரளி, கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

    இந்நிலையில், தமிழகம் முழுவதும் காவல் துறையில் பல்வேறு நிலையிலும் பணியாற்றிவரும் சுமார் 1500 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

    அதே எண்ணிக்கையில், காவல் துறையினரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தொடர்புகளுக்கும் கடந்த சில மாதங்களில் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

    சென்னையில் மட்டும் ஐபிஎஸ் அதிகாரிகள் 4 பேர் உள்பட காவல் துறையினர் 833 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது. அவர்களில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பணியமர்த்தப்பட்டவர்கள் என்று பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கூறினார்.

    கொரோனா தொற்று உறுதியானவர்களில் கூடுதல் ஆணையர், இணை ஆணையர், மூன்று துணை ஆணையர்கள் உள்ளிட்டோர் அடங்குவர். சென்னையில் தொற்று ஏற்பட்டவர்களில் 350 பேர் குணமடைந்து பணிக்கு திரும்பியுள்ளனர்.

    வாகன சோதனைகள், கூட்டங்களை ஒழுங்குபடுத்துதல், வழக்கமான காவல் நிலைய பணி ஆகியவற்றில் ஈடுபடும் காவல் துறையினருக்கு அறிகுறி இல்லாதவர்களுடன் ஏற்படும் தொடர்பால் தொற்று பரவுகிறது. காவல் துறை தலைமையகங்களில் பணியாற்றும் அமைச்சகப் பணியாளர்களுக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

    Also read... தமிழகத்தில் உச்சத்தில் கொரோனா: இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 2,532 பேருக்கு பாதிப்பு - 53 பேர் உயிரிழப்பு

    போதிய அளவில் முகக்கவசங்கள், கையுறைகள் மற்றும் கிருமிநாசினிகள் வழங்கப்பட்ட போதிலும், காவல் துறையினருக்கு கொரோனா பரவுவதாக மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    காவல் துறையினர் மத்தியில் கொரோனா வேகமாக பரவும் நிலையில், அதுகுறித்த தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்வதற்காக காவல் துறை தலைமையகங்களில் வலைதளம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக டிஜிபி ஜே.கே.திரிபாதி தெரிவித்தார்.

    ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோரைக் கொண்ட காவல் படையில், 25 சதவீதம் பேரை தயார்நிலையில் வைத்திருப்பதாகவும், தேவைப்பட்டால், ரிசர்வ் போலீஸ் படையினர் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

    இதேபோல, சென்னை பெருநகரில் காவல் துறையினருக்கு பற்றாக்குறை எதுவும் இல்லை என்று காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: