ராஜீவ்காந்தி படுகொலையில் தண்டனை பெற்ற, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய முடியாது என்று கடந்த ஏப்ரல் மாதம் உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவு, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் இல்லாமல் அவருடைய பெயரில் வெளியிடப்பட்டது என்று தெரியவந்துள்ளது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில், கடந்த 2014ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19ம் தேதி கூடிய தமிழக அமைச்சரவை ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள 7 பேரையும் விடுதலை செய்ய முடிவு செய்தது. தமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில், மத்திய அரசின் ஒப்புதலை பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து, 2016ஆம் ஆண்டு அப்போதைய தமிழக தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் 7 பேரையும் விடுதலை செய்ய ஒப்புதல் அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்.
இந்தக் கடிதத்திற்கு மத்திய அரசு பதிலளிக்காமல் காலம் தாழ்த்தியதை தொடர்ந்து, தமிழக அரசின் முடிவு குறித்து மூன்று மாதங்களுக்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து அடுத்து மூன்று மாதத்தில் உள்துறை அமைச்சகத்தின் சார்பாக ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. திட்டமிடப்பட்டு மனித தன்மையற்ற, மிகக் கெடூரமான முறையில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதாகவும் ஆகவே, குற்றவாளிகளை விடுதலை செய்ய முடியாது என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டது. உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் துபே என்பவர் அந்த உத்தரவில் கையெழுத்திட்டிருந்தார். ஆனால், அந்த கையெழுத்திற்கு மேல், "குடியரசு தலைவரின் உத்தரவின் பேரில், அவருடைய பெயரால்" என்று எழுதப்பட்டிருந்ததன் மூலம், இந்த உத்தரவு குடியரசு தலைவரால் பிறப்பிக்கப்பட்டதாக சித்தரிக்கப்பட்டது.
இந்நிலையில், குடியரசு தலைவர் எதன் அடிப்படையில் இந்த முடிவை எடுத்தார் என்பதை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் விளக்கம் அளிக்க வேண்டும் என, குடியரசு தலைவர் அலுலவகத்திற்கு பேரறிவாளன் கோரிக்கை விடுத்தார்.
ஆனால், பேரறிவாளன் கேட்ட தகவலுக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று குடியரசு தலைவர் அலுலவகம் பதில் அனுப்பியது. அதன்பின் குடியரசு தலைவர் அலுவலகம் சார்பாக பேரறிவாளனுக்கு அனுப்பப்பட்ட மற்றொரு பதில் கடிதத்தில், 7 பேரை விடுதலை செய்யக் கோரி தமிழக அரசு, மத்திய அரசுக்கு அனுப்பிய கடிதம், குடியரசு தலைவரின் பார்வைக்கு அனுப்பப்படவில்லை என்ற அதிர்ச்சியளிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
7 பேரையும் விடுவிக்க முடியாது என்ற மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட உத்தரவு, குடியரசு தலைவரின் பெயரில், அவருக்கே தெரியாமல் உள்துறை அமைச்சகம் சார்பாக வெளியிடப்பட்ட உத்தரவு என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது. கடந்த 6ஆம் தேதி பேரறிவாளனின், விடுதலை கோரிய வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்ட நீதியரசர் திரு.ரஞ்சன் கொகாய் தலைமையிலான மூவர் அமர்வு பிறப்பித்த உத்தரவில், உள்துறை சார்பாக ஏப்ரல் மாதத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு இந்த வழக்கை எந்தவகையிலும் பாதிக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், மத்திய அரசின் மறுப்பு கடிதம் குடியரசு தலைவரின் கடிதமாக அங்கீகரிக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
இதை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், குடியரசு தலைவர் அலுவலகத்திற்கு பேரறிவாளன் சார்பில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அந்த மேல்முறையீட்டு மனுவில், தமிழக அரசு அனுப்பிய கடிதத்தை ஒருவேளை உள்துறை அமைச்சகம் குடியரசு தலைவரின் பார்வைக்கு அனுப்பியருந்தால், அதுகுறித்து இந்த இரண்டு அலுவலகத்திற்கும் இடையில் நடைபெற்ற கடிதப் போக்குவரத்துகளை தெரிவிக்கும்படி பேரறிவாளன் கோரியுள்ளார்.
இந்த மேல்முறையீட்டு மனுவிற்கு குடியரசு தலைவர் அலுவலகம் பதில் அளிக்கும்பட்சத்தில், 7 பேரையும் விடுதலை செய்ய முடியாது என்று உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவு, குடியரசு தலைவரின் ஒப்புதல் இல்லாமல், அவருடைய பெயரில் வெளியிடப்பட்டது என சந்தேகத்திற்கு இடமில்லாமல் உறுதிப்படுத்தப்படும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Perarivalan, Rajiv case, Rajiv convicts, RTI