• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • நாளைக்குள் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு - தமிழகத்தில் மிக கனமழை பெய்யும்: வானிலை மையம் எச்சரிக்கை

நாளைக்குள் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு - தமிழகத்தில் மிக கனமழை பெய்யும்: வானிலை மையம் எச்சரிக்கை

மழை

மழை

புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • Share this:
    தென்கிழக்கு தீபகற்ப பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை விலகி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாடு புதுச்சேரி காரைக்கால் கேரளா பகுதிகளில் பரவலாக இடி மின்னலுடன் கூடிய கனமழையும் அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழ்நாடு புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், தமிழகத்தின் பல மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. தேனியில் தாழ்வான பகுதிகளை மழைநீர் சூழந்ததால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். தேனி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில், நேற்று காலையில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. ஆனால், மாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதையடுத்து, நகரின் முக்கிய பகுதிகளான மதுரை சாலை, கம்பம் சாலை பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

    குறிப்பாக, பழைய பேருந்து நிலையத்திற்குள் தண்ணீர் குளம் போல தேங்கியதால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனிடையே, பங்களாமேடில் தாழ்வான பகுதிகளில் உள்ள 50-க்கு மேற்பட்ட குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால், மக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகினர். இருப்பினும், மழைநீரை பாத்திரங்கள் மூலம் இறைத்து வெளியேற்றினர்.

    திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளில் நேற்று காலை முதல் வெயில் வாட்டி வதைத்தது. மாலை நேரத்தில் கரு மேகங்கள் சூழ்ந்து திடீரென மழை பெய்ய தொடங்கியது. மாநகர பகுதிகளான ராயபுரம், வாலிபாளையம், ஆண்டிப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் ஒரு மணி நேரத்துக்கு மேல் கனமழை பெய்தது. இதனால், சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. ஒருசில பகுதிகளில் ஆலங்கட்டி மழையும் பெய்தது.

    கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து, கிருஷ்ணராயபுரம், லாலாபேட்டை, காந்திகிராமம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இரவில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

    நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. ராசிபுரம், திருச்செங்கோடு, கொல்லிமலை, சேந்தமங்கலத்தில் மாலை 6 மணிக்கு தொடங்கிய மழை, 9 மணி வரை கொட்டித் தீர்த்தது. கனமழை காரணமாக நாமக்கலில் முக்கிய வீதிகளில் தீபாவளி விற்பனை பாதிக்கப்பட்டது.

    கொடைக்கானலில் பெய்து வரும் கனமழையால், பேத்துப்பாறை வயல் பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. ஆற்று வெள்ளத்தில் கயிறு கட்டி ஆபத்தான முறையில் விவசாயி ஒருவர் கடந்து சென்றார். இந்த வீடியோ இணையத்தில் பரவிய நிலையில், அப்பகுதியில் தடுப்பணையுடன் பாலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கோவையில் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை மிதமான மழை பெய்தது. அப்போது, கருமத்தம்பட்டியில் இருந்து அன்னூருக்கு சென்ற புறநகர் பேருந்தின் உட்பகுதியில் மழைநீர் ஓழுகியது. இதனால், பயணிகள் இருக்கையில் அமராமல், நின்றுகொண்டே பயணம் செய்தனர். பருவமழை தொடங்க உள்ளதால் இதுபோன்று பேருந்துகளில் உள்ள ஓட்டைகளை சீர் செய்ய வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

    கனமழை காரணமாக ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் நீர்த்தேக்கம் வேகமாக நிரம்பி வருகிறது. இதையடுத்து, பாதுகாப்பு கருதி அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், திருவள்ளூர் மாவட்டம் ஆரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் என்பதால் ஊத்துக்கோட்டை, பாலவாக்கம், பெரியபாளையம் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அத்துடன், இந்த கிராமங்களில் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்கவோ, தரைபாலங்களை கடந்து செல்லவோ வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

    Must Read : மாமியாருடன் கள்ளத்தொடர்பு.. கார் விற்பனையாளரை அடித்துக்கொன்ற மருமகன் கைது

    இந்நிலையில் புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட 8 மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும் என்றும் ஏனைய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: