மாமியாரை கல்லால் தாக்கிய மருமகன் - தன் உடலை கண்ணாடித் துண்டுகளால் கீறி ரகளை

ரகளையில் ஈடுபட்ட நேசமணி

குடிபோதையில் இருந்த நேசமணி தனது கை, கால், கழுத்து, மார்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அறுத்துக்கொண்டு மிரட்டல் விடுத்தார்.

  • Share this:
கோவையில் குடும்ப பிரச்சினையில் மாமியாரை கல்லால் தாக்கிய மருமகன், காவல் துறையினரின் முன்னிலையில் கண்ணாடித் துண்டுகளால் கழுத்து, கை, கால்களைக் கீறிக்கொண்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. குடிபோதையில் இருந்த நபரை சமரசப்படுத்தி காவல் துறையினர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் நேசமணி. கிரிஷ் ஓர்க்‌ஷாப் ஒன்றில் பணி புரிந்து வரும் நேசமணிக்கும் அவரது மனைவி வினிதாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் வினிதா தனது குழந்தையை தூக்கிக்கொண்டு கருமத்தம்பட்டி செந்தில்நகர் பகுதியில் உள்ள தனது தாயார் தையல்நாயகி வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இந்நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் குடிபோதையில் கருமத்தம்பட்டி செந்தில்நகர் பகுதியில் உள்ள மாமியார் வீட்டிற்கு வந்த நேசமணி, மனைவி, குழந்தையை தன்னுடன் அனுப்ப கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் அருகில் இருந்த கல்லை எடுத்து மாமியார் தையல்நாயகியின் தலையில் நேசமணி தாக்கினார். இதில் தையல்நாயகி தலையில் காயம் ஏற்பட்ட நிலையில், அரிகில் இருந்த பொதுமக்கள் குடிபோதையில் இருந்த நேசமணியை சரமாரியாக தாக்கினர்.

இது தொடர்பாக கருமத்தம்பட்டி காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு கருமத்தம்பட்டி காவல்துறையினர் வந்த நிலையில், குடிபோதையில் இருந்த நேசமணி அங்கு கிடந்த கண்ணாடி துண்டை எடுத்துக்கொண்டு தனது கை ,கால், கழுத்து, மார்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அறுத்துக்கொண்டு காவல்துறையினருக்கு மிரட்டல் விடுத்தார். அவரை சமரசப்படுத்த முயன்றபோது காவல்துறை அதிகாரிகளையும் நேசமணி மிரட்டினார்.

கையில் கண்ணாடி துண்டை வைத்துக்கொண்டு தெருவில் அங்கும் இங்கும் சுற்றிய நேசமணியை சமரசப்படுத்திய காவல் துறையினர் 108 ஆம்புலன்ஸில் சிகிச்சைக்காக ஏற்றினர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கும் போது கத்தரிக்கோலை கையில் எடுத்துக்கொண்டு மீண்டும் ரகளையில் ஈடுபட்டார் நேசமணி. அவரை மீண்டும் சமரசப்படுத்திய காவல் துறையினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

Must Read : குடிநீர், பேருந்து, ரேஷன் கடை, பள்ளி என எந்த வசதியும் இல்லாமல் மக்கள் அகதிகள் போல் வாழும் கிராமம்

இது குறித்து கருமத்தம்பட்டி காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Suresh V
First published: