• HOME
 • »
 • NEWS
 • »
 • tamil-nadu
 • »
 • தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்

கன மழை

கன மழை

புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகக் கூடும் என்றும், அதையடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  திருநெல்வேலி, கோவை உட்பட 6 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகக் கூடும் என்றும், அதையடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கரையை நெருங்க கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

  இதன் காரணமாக, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை ஆகிய 6 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யும் எனவும்,
  தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, கடலூர், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை 48 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் அவ்வப்போது கன மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

  தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது. சென்னையில் மழை பாதித்த பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இரண்டாவது நாளாக நேற்றும், நேரில் ஆய்வு செய்து பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். காஞ்சிபுரம், நாமக்கல், பெரம்பலூர் மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெல் வயல்கள் மழை நீரில் மூழ்கின.

  திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியை அடுத்த செஞ்சியம்மன் நகரில் கனமழையால் இருபதுக்கும் மேற்பட்ட குடிசை வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. பழவேற்காடு பழைய பேருந்து நிலையம் அருகே மழைநீர் செல்லும் பாதையை மறித்து சிலர் கடைகளை கட்டி இருப்பதால் மழைநீர் வெளியேற முடியாமல் வீடுகளுக்குள் புகுந்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். ஊத்துக்கோட்டையில் ஆரணி ஆற்றில் கரை புரண்டோடும் வெள்ளத்தில் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதனால்,புதிதாக கட்டப்பட்ட உயர்மட்ட மேம்பாலத்தில் வாகனங்கள் தற்காலிகமாக செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

  காஞ்சிபுரம் மாவட்டத்தில் கம்மார்பாளையம், மணியாச்சி, கோவிந்தவாடி அகரம், புதுபாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் பலத்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 1000க்கும் மேற்பட்ட ஏக்கர் நெல் பயிர்கள் சேதமடைந்துள்ளன. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகரில் கடப்பேரி பகுதியில் உள்ள 30க்கும் மேற்பட்ட வீடுகளை சுற்றி மழை நீர் தேங்கியது. அதைத்தொடர்ந்து வட்டாட்சியர் நடராஜன், கடப்பேரி பகுதிக்கு சென்று பார்வையிட்டு, வெள்ள நீரை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தார்.

  பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையினால் வேப்பூர் பகுதிகளில் ஒரு மாதத்திற்கு முன் நடவு செய்யப்பட்டநெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளன. இவற்றை காப்பாற்ற முடியாது என வேதனை தெரிவிக்கும் விவசாயிகள், மாவட்ட நிர்வாகம் உரிய நிவாரணம் தர முன்வர வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர். பெரம்பலூரில் தொடர் மழையால் மின்வாரிய அலுவலக மேற்கூரையில் நீர்க்கசிவு ஏற்பட்டு, மின்சாதனப் பொருட்கள் சேதமடைந்தன.

  கடலூர் மாவட்டத்தில் தொடர் மழையால் ஸ்ரீமுஷ்ணம் அருகே வெள்ளாற்றில் உள்ள தடுப்பணையில் நீர் நிரம்பி வழிந்து வருகிறது. ஸ்ரீநெடுஞ்சேரி - பவழங்குடி கிராமங்களுக்கு இடையே செல்லும் வெள்ளாற்றில் பாலம் இல்லாததால் தடுப்பணை வாயிலாக பொதுமக்கள் இரு பகுதிகளுக்கும் சென்று வந்தனர். தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் திருமணத்திற்காக சென்ற பலர் அபாயகரமான முறையில் ஆற்றைக் கடந்தனர். மழை காரணமாக பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் படகுகளை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் படகு சவாரி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

  ராணிப்பேட்டை மாவட்டத்தில் கனமழை எதிரொலியால் வாலாஜாப்பேட்டை அணைக்கட்டுக்கு வரும் 6 ஆயிரத்து 350 கனஅடி தண்ணீரும் அப்படியே வெளியேற்றப்படுவதால் பாலாற்றில் வெள்ளம் சீறி பாய்கிறது. இதனால், காஞ்சிபுரம், கல்பாக்கம், சதுரங்கப்பட்டினம் ஆகிய பகுதிகளில் பாலாற்றங் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  அரக்கோணம் அருகே கிருஷ்ணா நகர், செந்தில் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மழை நீர் புகுந்ததால் குடியிருப்பு வாசிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மழை நீரை அகற்ற வலியுறுத்தி 50க்கும் மேற்பட்டோர் அரக்கோணம் - திருத்தணி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

  ஆந்திர மாநிலம் கலவகுண்டா அணையிலிருந்து 2 ஆயிரத்து,142 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் வேலூர் அருகே கீரைசாத்து கிராமத்தில் கட்டப்பட்டுள்ள பொன்னை அணைக்கட்டு நிரம்பி, கிழக்கு, மேற்கு கால்வாய்கள் வழியாக தண்ணீர் செல்கிறது. கொண்டமநாயுடுபாளையம், மாதாண்டகுப்பம், பொன்னை, மேல்பாடி, வெப்பாலை உள்ளிட்ட பகுதிகளில் மக்களுக்கு தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த மாயாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், சத்திய மங்கலத்திலிருந்து தெங்குமரஹடா கிராமத்திற்கு சென்ற பிக்கப் வேன் மாயாற்றை கடக்க முற்பட்டபோது தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டது. பின்தொடர்ந்து வந்த மற்றொரு சொகுசு கார் மற்றும் பிக்கப் வேன் இரண்டும் வெள்ளப் பெருக்கில் சிக்கியது. பொதுமக்கள் கயிறு மூலம் வாகனங்களைக் அருகில் இருந்த மரத்தில் கட்டியதால் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படாமல் தப்பின.

  நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி சுற்றுவட்டாரத்தில் தொடர் மழையால் அங்குள்ள புதிய ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. இதனால், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நெல் வயல்களை வெள்ளம் சூழ்ந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

  திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட உறையூர், லிங்கா நகர், மங்களம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்ததால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். நீர் நிலைகளில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு சாலைகள் முழுவதும் துண்டிக்கப்பட்டன.

  துறையூரை சுற்றியுள்ள ஆலத்துடையன்பட்டி, மெய்யம்பட்டி, சின்னஏரி, வைரசெட்டிபாளையம் உள்ளிட்ட கிராமங்கள் அருகே இருக்கும் ஏரிகள் நிரம்பி உபரி நீர் பாய்ந்தோடுகிறது.

  கொடைக்கானல் மலைப் பகுதியில் பெய்த மழையால் கோம்பை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், பள்ளங்கி கோம்பை பகுதியை சேர்ந்தவர்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து மூங்கில் காடு பகுதிக்கு சென்று வருகின்றனர். இதனால், பாலம் அமைத்துத் தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

  Must Read : பள்ளி, கல்லூரிகளுக்கு சென்னை, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்று (நவம்பர் 9) விடுமுறை

  தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து கொடைக்கானலுக்கு அடுக்கம் வழியாக செல்லும் மலை சாலையில் கனமழையால் 20 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, சீரமைக்கும் பணி நடைபெறுவதால், அந்த வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Suresh V
  First published: